2020 முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுற்றுலா பயணிகள் ஒரு நாள் தங்குவதற்கு அனுமதி

38

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுற்றுலா பயணிகளை நாசா அனுமதிக்கவுள்ளது. இந்த விண்வெளி நிலையத்தில் ஒரு நாள் தங்குவதற்கு 35,000 அமெரிக்க டொலர்கள் என நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த நிலையத்தை சுற்றுலா பயணிகளுக்கும், பிற வணிக முயற்சிகளுக்கும் அனுமதிக்கப் போவதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா  வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் இரண்டு குறுகிய கால விண்வெளி சுற்றுலா பயணங்கள் அனுமதிக்கப்படும் என்று சர்வதேச விண்வெளி நிலையத்தின் துணை இயக்குநர் கூறியுள்ளார்.

அமெரிக்க விண்வெளி ஓடத்தில் பயணித்து 30 நாட்கள் வரை தனியார் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று நாசா கூறியுள்ளது.

இதற்கு முன்னர் அனுமதிக்காமல் இருந்த, வணிக முயற்சிகளுக்கும், சந்தைப்படுத்தலுக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை நாசா திறக்கவுள்ளது என்று தலைமை நிதி அதிகாரி ஜெஃப் டிவிட் நியூயார்க்கில் தெரிவித்துள்ளார்.

விண்வெளிக்கு சுற்றுலா செல்வோர் அங்கு செல்வதற்கான மருத்துவ சோதனைகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்வதை உறுதிப்படுத்துவதோடு, எத்தனை பேர் செல்லலாம் என்பதையும் தனியார் வணிக நிறுவனங்களே முடிவு செய்ய வேண்டும் என்று நாசா தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

SHARE