12வது முறையாக நடால் சம்பியன்

‘கிராண்ட்ஸ்லம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சம்பியனும், 2-ம் நிலை வீரருமான ரபெல் நடாலும் (ஸ்பெயின்), 4-ம் நிலை வீரர் டொமினிக் திம்மும் (ஆஸ்திரியா) பலப்பரீட்சை நடத்தினர். ‘களிமண் தரை’ போட்டிகளில் நானே ராஜா என்பதை நடால் மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டினார்.

டொமினிக் திம்மால், நடாலுக்கு சவால் கொடுக்க முடிந்ததே தவிர அவரது ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. 3 மணி ஒரு நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் நடால் 6–3, 5–7, 6–1, 6–1 என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மை வீழ்த்தி 12-வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றி வியப்பூட்டினார்.

ஏற்கனவே 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018 ஆகிய ஆண்டுகளிலும் அவர் இங்கு மகுடம் சூடியிருக்கிறார். இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அதிக முறை ருசித்த நபர் என்ற புதிய சரித்திரத்தை படைத்தார்.

இதற்கு முன்பு அவுஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட் அவுஸ்திரேலிய ஓபனை 11 முறை வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

டொமினிக் திம் கடந்த ஆண்டும் இதே நடாலிடம் தான் இறுதி ஆட்டத்தில் தோற்று இருந்தார். இந்த தடவையும் அவரது கிராண்ட்ஸ்லம் கனவை நடால் சிதைத்து விட்டார்.

வெற்றிக்கு பிறகு நடால் கூறுகையில், ‘முதலில் டொமினிக் திம்முக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறேன்.

அவருக்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவர் இங்கு (பட்டத்துடன்) நிற்பதற்கு தகுதியானவர். அவர் கடின உழைப்பாளி. எதிர்காலத்தில் நிச்சயம் இந்த கோப்பையை வெல்வார் என்று நம்புகிறேன்.

மீண்டும் ஒரு முறை பட்டம் வென்றதை நம்ப முடியவில்லை. எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. 2005-ம் ஆண்டு இங்கு முதல்முறையாக விளையாடிய போது அது எனது கனவாக இருந்தது. ஆனால் 2019-ம் ஆண்டு வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம்’ என்றார்.

About Thinappuyal News