முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்களத்தில் நல்லிணக்கமும், தமிழில் இனவாதம் பேசுகின்றனர்- மஹிந்த

11

____________________________________________
முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள மொழியில் இன நல்லிணக்கம் குறித்து பேசிவிட்டு, தமிழில் இனவாதம் பேசுவதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ குற்றம்சாட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக முஸ்லிம் சமூகத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த நேரத்தில் முஸ்லிம் மக்களுக்கும், தமக்கு அடிபணிய வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு அரசாங்கமே தேவைப்படுவதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்கட்ட நடவடிக்கைகள் எனும் தலைப்பில் கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க் கட்சித் தலைவரின் இல்லத்தில் வைத்து இன்று (11) விசேட உரையொன்றை மஹிந்த ராஜபக்ஸ நிகழ்த்தியுள்ளார். இதன்போதே இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டில் முஸ்லிம் மக்களுக்கும் முஸ்லிம் அல்லாத சமயத்தவர்களுக்கும் இடையில் சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. இதன் போது முஸ்லிம் தலைவர்கள் மிகவும் நிதானமாக நின்று சமூகத்தை வழிநடாத்த வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.

தற்பொழுது இந்த அரசியலில் நடைபெறும் சகல செயற்பாடுகளும் இன்னும் நான்கு மாதங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தியது என்பது தெளிவான ஒன்றாகும். ஒரு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்த போது, சகல முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா செய்தனர். இது பாராளுமன்ற வழமைக்கு மாற்றமானது.

ஐக்கிய தேசியக் கட்சி இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளை தூண்டி விட்டு, மறைமுகமாக முஸ்லிம்களின் வாக்குகளை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுதான் அரசியல் விளையாட்டு. தற்பொழுது மத்திய வங்கி நிதி மோசடி குறித்து பேசுவதில்லை. நிதி நெருக்கடி குறித்து பேச்சு இல்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE