இந்த வார இறுதிக்குள் அமைச்சரவை தொடர்பான சர்ச்சைக்கு தீர்வினை வழங்க முயற்சிக்க வேண்டும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் இணைந்து இந்த வார இறுதிக்குள் அமைச்சரவை தொடர்பான சர்ச்சைக்கு தீர்வினை வழங்க முயற்சிக்க வேண்டும்.  அத்தோடு மீண்டும் 2018 ஒக்டோபர் அரசியல் ந‍ெருக்கடியைப் போன்று நாட்டில் ஏற்படுத்த ஜனாதிபதி முயற்சிக்கக் கூடாது என்று பெருநகர் மற்றும் மேல்மாகாண அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்கிய மக்கள் அமைதியை பேணாது ஜனநாயகத்திற்கு எதிராக அணி திரள வேண்டும். அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் பாராளுமன்றம், அரசாங்கத்துடன் அரசியலமைப்பு சட்ட மற்றும் அரசியலுடன் மோதலுக்குச் சென்றுள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழுவால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்பிற்கு சிக்கல்கள் ஏற்படுவதாகத் தெரிவித்து அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து கொண்டு அமைச்சரவையைக் கூட்டாமல் இருக்கின்றார்.

முதலாவதாகக் குறிப்பிட வேண்டியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த செயற்பாட்டின் மூலம் அரசாங்கத்தையும் நிறைவேற்றதிகாரத்தையும் அரசையும் இல்லாமல் செய்யும் வகையில் பொறுப்பற்று செயற்பட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

About Thinappuyal News