41 ஓட்டத்தினால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 17 ஆவது போட்டி ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணியளவில் டவுன்டானில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 307 ஓட்டங்களை குவித்தது.

307 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் இரண்டு ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. அதன்படி பகர் ஜமான் 2.1 ஆவது ஓவரில் பேட் கம்மின்ஸின் பந்து வீச்சில் எதுவித ஓட்டமின்றி டக்கவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

2 ஆவது விக்கெட்டுக்காக இமாம் உல்ஹக்குடன் பாபர் அசாம் கைகோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திவர பாகிஸ்தான் அணி 10 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 51 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் பாபர் அசாம் 26 ஓட்டத்துடனும், இமாம் உல்ஹக் 20 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இந் நிலையில் 10.5 ஆவது ஓவரில் கோல்ட்டர் நைலுடைய பந்து வீச்சில் பாபர் அசாம் 30 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற மொஹமட் ஹப்பீஸ் களமிறங்கினார்.

ஹப்பீஸ் – இமாம் உல்ஹாக் கைகோர்த்து நல்லதொரு இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுக்க பாகிஸ்தான் அணியும் ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தது. அதன்படி 19 ஆவது ஓவரில் 107 ஓட்டங்களையும், 25 ஆவது ஓவரில் 136 ஓட்டத்தையும் பெற்றுக் கொண்டது.

எனினும் 25.1 ஆவது ஓவரில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் இமாம் உல்ஹக் 53 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, 26 ஆவது ஓவது ஓவரின் இறுதிப் பந்தில் ஹப்பீஸ் 46 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

அது மாத்திரமன்றி இமாம் உல்ஹாக்கீன் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய மலீக்கும் எவ்வித ஓட்டமின்றி டக்கவுட் முறையில் 27.3 ஆவது ஓவரில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அஷீப் அலி 29 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 5 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 160 க்கு 6 விக்கெட்டுக்களை இழந்தது.

வெற்றியின் வாய்ப்பு இதனால் அவுஸ்திரேலிய அணிப் பக்கம் திரும்பிப் பார்த்தது. எனினும் பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் மற்றும் அஸன் அலி ஆகியோர் ஜோடி சேர்ந்து வெற்றியை மீண்டும் பாகிஸ்தான் பக்கம் திருப்ப பெரும் முயற்சி மேற்கொண்டனர்.

குறிப்பாக அஸன் அலி 15 பந்துகளை எதிர்கொண்டு 3 நான்கு ஓட்டம் 3 ஆறு ஓட்டம் அடங்கலாக 32 ஓட்டங்களை அதிரடியாக குவித்து 33.5 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இந்த ஓட்டம் பாகிஸ்தான் அணிக்கு பெரும் உதவியாக அமைந்தது.

அஸன் அலியின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய வஹாப் ரியாஸும் சப்ராஸ் அஹமட்டுடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த பாகிஸ்தான் அணி 40 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந் நிலையில் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுகளை தெறிக்க விட்ட வஹாப் ரியாஸ் 44.2 ஆவது ஓவரில் மொத்தமாக 39 பந்துகளை எதிர்கொண்டு 3 ஆறு ஒட்டம், 2 நான்கு ஓட்டம் அடங்கலாக 45 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார் (264-8).

தொடர்ந்து 9 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய மொஹமட் அமீரும் எதுவித ஓட்டமின்றி டக்கவுட் முறையில் ஆட்டமிழந்து நடையை கட்ட 45.4 ஆவது பந்தில் சப்ராஸ் அஹமட் 40 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்று, 41 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டாக், கேன் ரிச்சர்ட்சன், கொல்டர் நைல் மற்றும் பிஞ்ச் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

About Thinappuyal News