மோசமான பந்து வீச்சே தோல்விக்கு காரணம் – பாகிஸ்தான் கேப்டன்

13
மோசமான பந்து வீச்சால் தோல்வி - பாகிஸ்தான் கேப்டன் ஆதங்கம்

உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-வது வெற்றியை பெற்றது.

டான்டனில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் 307 ரன் குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது.

வார்னர் அபாரமாக விளையாடி 15-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 111 பந்தில் 107 ரன்னும் (11 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 84 பந்தில் 82 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

முகமது அமீர் 30 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். சகீன்ஷா அப்ரிடி 2 விக்கெட்டும், ஹசன் அலி, முகமது ஹபீஸ், வகாப் ரியாஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் 266 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் அந்த அணி 41 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

தொடக்க வீரர் இமாம்- உல்-ஹக் 53 ரன்னும் (7 பவுண்டரி), ஹபீஸ் 46 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), வகாப் ரியாஸ் 39 பந்தில் 45 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

கும்மின்ஸ் 3 விக்கெட்டும், ஸ்டார்க், ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டும், நாதன் கோல்ட்டர், ஆரோன் பிஞ்ச் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பாகிஸ்தான் அணி 2-வது தோல்வியை தழுவியது. மோசமான பந்து வீச்சால் இந்த தோல்வி ஏற்பட்டதாக பாகிஸ்தான் கேப்டன் சர்பிரஸ் அகமது கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

முதல் 20 ஓவர்களில் அதிகமான ரன்களை விட்டு கொடுத்தோம். முகமது அமீரை தவிர மற்ற பவுலர்கள் யாரும் நன்றாக வீசவில்லை. 270-280 ரன் என்பதே போதுமான ஸ்கோர் ஆகும்.

நாங்கள் வெற்றி பெற வேண்டுமானால் முதல் 4 பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க வேண்டும். இமாம் -உல்-ஹக் அரை சதம் அடித்தார். பாபர் ஆசம் 30 ரன்கள் எடுத்தார். ஆனால் ‘டாப் 4’ பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக ரன்களை குவிக்க வேண்டும்.

ஹசன், விகாஸ்ரியாஸ் பேட்டிங் அபாரமாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் இன்னும் மேம்பட்டு ஆடி இருக்க வேண்டும். நாங்கள் கடுமையாக போராடினோம். ஆனால் வெற்றி பெற முடியவில்லை.

இந்தியாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் நாங்கள் இதைவிட சிறப்பாக விளையாட முயற்சிப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா 3-வது வெற்றியை பெற்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் ஆரோன்பிஞ்ச் கூறியதாவது:-

எங்களது பந்து வீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது. பாகிஸ்தான் அணி எங்களை நெருங்கி வருவது கடினமானது என்று எனக்கு நிச்சயமாக தெரியும்.

நாங்கள் 50 ஓவரை முழுமையாக ஆட முடியாமல் போனது ஏமாற்றமே. நாங்கள் கூடுதலாக 20 முதல் 30 ரன்கள் வரை எடுத்து இருக்க வேண்டும். ஆனால் வெற்றி பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஆஸ்திரேலிய அணி 5-வது ஆட்டத்தில் இலங்கையை வருகிற 15-ந்தேதி சந்திக்கிறது.

பாகிஸ்தான் அடுத்த ஆட்டத்தில் இந்தியாவை 16-ந்தேதி எதிர்கொள்கிறது.

SHARE