பௌத்த துறவிகளின் எடுபிடிகளாக தமிழினம் மாறிவிடக்கூடாது

வவுனியாவுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரருடன் பொது அமைப்புக்கள், சமயத் தலைவர்கள் இணைந்து தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது கருத்துத் தெரிவித்த அத்துரலிய ரத்ன தேரர், இலங்கை என்பது யாரும் உரிமை கொண்டாட முடியாது. எல்லோருக்கும் உரித்தான நாடு. இங்கு பயங்கரவாதமோ அடிப்படைவாதமோ இருக்க முடியாது. இலங்கையில் சட்டமானது பொதுவானது. இங்கு வேறு எந்த சட்டங்களுக்கும் இடமில்லை என்று தெரிவித்தார்.

இவருடைய கருத்தை எந்தளவில் ஏற்றுக்கொள்ள முடியும் என்பது பற்றி தமிழினம் சிந்திக்கவேண்டும்.
சிங்களப் பேரினவாதிகளின் அதாவது பௌத்த துறவிகளின் கோரமுகம் தெரியாத அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும், சமூகப் பற்றாளர்களும் அத்துரலிய ரத்ன தேரருடைய கருத்தை உள்வாங்கிக்கொண்டு செயற்படுத்த நினைப்பது ஆபத்தானதொன்று. இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்து பூசகர் ஒருவரை எரித்துக்கொன்றதன் விளைவும் வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்கான போராட்டங்கள் வலுப்பெற காரணமாக அமைந்தது என்பது வரலாறு. முஸ்லீம் அடிப்படைவாதம் என்பது வேறு. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் சர்வதேச ரீதியாக அமைந்துள்ளது. இதன் பின்னணி வேறு. இலங்கை என்பது ஒரு சிறு தீவு. தமிழீழ விடுதலைப்புலிகளின் காலகட்டத்தில் இத்தீவிரவாதிகளுக்கு இந்நாட்டில் இடம் இல்லாது இருந்தது. இதனை நாம் கருத்திற்கொள்ளவேண்டும். அக்காலகட்டத்தில் முஸ்லீம்களை தமிழினத்திற்கு எதிராகப் பயன்படுத்திய சிங்களப் பேரினவாதிகள், இன்று முஸ்லீம்களுக்கு எதிராக தமிழ் அப்பாவிகளைப் பயன்படுத்தி வன்முறைகளை இந்நாட்டில் தூண்டுவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்கிறார்கள். நாட்டின் வரலாறுகள் தெரியாத நயவஞ்சகர்கள் இவர்கள். சிங்களப் பேரினவாதத்தோடு தற்போதைய காலகட்டத்தில் தோளோடு தோள் கொடுப்பது என்பது, அன்று முள்ளிவாய்க்காலில் ஈழப்போரின் முடிவினை முஸ்லீம்கள் பாற்சோறு பொங்கிக் கொண்டாடியதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

முஸ்லீம்களுக்கு எதிரான அறுவடையில் தமிழினம் சிங்களப் பேரினவாதிகளுடன் ஒருபோதும் கைகோர்க்கக்கூடாது. முடிந்தால் முஸ்லீம்களுக்கு எதிராக தனித்துப்போரிட வேண்டும். சந்தர்ப்ப அரசியலுக்காக பௌத்த தேரர்களிடம் கையேந்துவது ஆபத்தானதொன்று. இலங்கை ஒரு பௌத்தநாடு எனக் கூறிக்கொண்டு யாழிலும் பௌத்த ஆலயங்கள் நிறுவப்படும் என கடந்த ஆண்;டு பொதுபல சேனாவின் ஞானசார தேரர் வவுனியாவில் களமிறங்கியபோது மெனளிகளாகவிருந்த மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் இன்று வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கள பௌத்த இனவாதியான அத்துரலிய ரத்ன தேரருடன் கலந்துரையாடியிருப்பது ஏற்புடையதல்ல. தமிழினத்திலிருந்து ஒருவராவது தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருந்தால் இன்றைய நிலை என்ன? பல முஸ்லீம் போராளிகள் இந்நாட்டிற்காக வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர் என்பதையும் நாம் கவனத்திற்கொள்ளவேண்டும். அடிப்படை முஸ்லீம் தீவிரவாதிகளை நாடு கடத்துங்கள். அதற்கான வழிவகைகளைத் தேடுங்கள். அதைவிடுத்து பொதுபலசேனா, ராவண பலய இன்னும் பல பௌத்த தீவிரவாதிகளுடன் இணைந்து எமது கண்களில் நாமே குத்திக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் தமது கடமைகளைச் செய்யவேண்டுமே தவிர காலத்தின் தேவை கருதி எம்மை நாம் மாற்றிக்கொள்வதில் தவறில்லை. ஆனாலும் அந்த மாற்றம் சரியானதொன்றாக அமையவேண்டும். வடகிழக்கில் இருக்கும் சமூக ஆர்வலர்களில் சிலர் சிங்கள பேரினவாதியான பௌத்த தேருடன் கைகோர்த்து முஸ்லீம்களுக்கு எதிராக வலம்வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

.

மஹிந்த அரசு வீழ்த்தப்பட்ட பின்னர் மைத்திரி-ரணில் ஆட்சி காலத்தில் பொதுபல சேனா (BBS) தமது இருப்பை காட்டுக்குவற்காக  தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் மீது இனவாத தாக்குதலை நடாத்தியதன் ஊடாக புத்துயிர் பெற்றது. தேசிய கலந்து உரையாடலுக்கான அமைச்சரான மனோ கணேசனின் அலுவலகத்துக்குள் புகுந்து அடாவடித்தனங்களை காட்டினார் பொதுபல சேனாவினர். அநாகரீக தர்மபாலாவின் வாரிசுகளிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

 

பொதுபல சேனா என்பது வெறும் முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பு என்ற ரீதியில் புரிந்து கொள்ள முடியாது. பர்மாவில் முஸ்லிம்களை படுகொலை புரியும் 969 என்னும் அமைப்போடு பொதுபல சேனாவுக்கு நேரடி தொடர்புகள் உண்டு. அதுமட்டும் அல்லது BBS ஆனாது 2009 ற்கு பின்னர் அதிகாரகளின் துருப்பு சீட்டே ஆகும். அரசியல் , பொருளாதார ரீதியாக முஸ்லீம் மக்களின் பலத்தையும் கட்டமைப்பையும் உடைத்தலையே சிங்கள பேரினவாதம் BBS ஊடக  நிகழ்த்த முற்படுகிறது.

 

ஜாதிக ஹெல உருமய” என்ற புத்த பிக்குகளின் அரசியல்  கட்சியில்  செயல்பட்டு கொண்டிருந்த, கலகொட அத்தே ஞானசர தேரர் மற்றும் கிரம விமலஜோதி ஆகிய இரு பிக்குகளும் ஜதிக ஹெல உருமய தீவிரமாக பௌத்தர்களுக்காக செயல்படவில்லை எனக்கூறி  அதிலிருந்து பிரிந்து பொது பல சேனா என்ற புதிய அமைப்பை உருவாக்கினர். “புத்த தத்துவங்களைக் காப்பது” என்ற நோக்கத்தை முதலில் கூறினாலும் பின்னர் இலங்கையைச் “சிங்கள புத்த தேசமாக” மாற்றுவதையே தம் பிரதான நோக்கமாக அறிவித்தனர் .

2011 மே மாதம் 15 ஆம் தேதியே கிரம விமலஜோதியின் தலைமையில் புத்த கலாச்சார மையத்தை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே திறந்து வைத்திருந்தார். தற்போது பொது பல சேனாவின் தலைமையகமும் இந்தப் புத்த கலாச்சார மையத்திலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மந்திராவில்தான் இயங்குகிறது.

மகிந்த அரசோ , மைத்திரி – ரணில் அரசோ தமது ஆட்சியை தக்க வைக்க  சிங்கள பேரினவாதத்தை சட்டைப்பையில் கொண்டே திரிகிறார்கள்.  பொருளாதார சுமையாலும் , அடிப்படை தேவைகளுக்கான சேவைகள் மிகவும் மோசமடைந்து செல்வதாலும் மக்கள் அரசுக்கு எதிராக செயற்பாடாமலும் இருக்க BBS மீன்டும் களமிறக்கபட்டுள்ளது.

பல குற்ற வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்து எவ்வித எதிர்ப்பும் இன்றி பிணை பெற்று வெளியேறுகிறார். நான்கு படை அமைத்து தீவிரமாக இயங்கிய போலீசாரோ வாய்மூடி நிற்கின்றனர்.

நல்லிணக்க அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க UKIP இன் முனைய தலைவர் நைஜில் வராஜ் யையும் ,  Party for Freedom இன் ஸ்தாபகர் மற்றும் தலைவர் கீர்ட் வில்டர்ஸ் ஐயும் உதாரணம் காட்டி BBS அவசியமானது என்கிறார். மேலும் குஜிராத்தில் மோடியின் ஆட்சி காலமே அம் மக்களுக்கு பாதுகாப்பை அளித்தது என வேதாந்த BBS நடவடிக்கைகளை வரவேற்கின்றார். நீதி அமைச்சரான விஜயதாஸ ராஜபக்‌ஷ ISIS போன்ற தீவிரவாத கும்பல்கள் இலங்கையில் உருவாகாமல் தடுப்பதற்கு டொனால்ட் டிரம்ப் போன்ற ஒருவர் வேண்டும் என்கிறார். அதவாது 2020 இல் நடைபெற உள்ள தேர்தலில் கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கும் முன்னெடுப்புகள் பலமடைகிறது எனலாம்.

நீதிமன்ற அவமதிப்பு உட்பட பல வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த ஞானசார தேரர் சரணடைந்து மூன்று மணித்தியாலங்களில் பிணையில் விடுதலையாகிறார். 2015 தை 8ஆம் திகதி தொடக்கம் 2017 மே மதம் வரை 195 சம்பவங்கள் கிறிஸ்தவ வழிபாட்டிடங்கள் மீதும் 20 கிறிஸ்தவ மக்கள் மீதான வன்முறை சம்பவங்களும்

தம்மிடம் பதியப்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய கிறிஸ்தவ கூட்டணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. மதம் சார்ந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கட்டில் அமர்ந்தவர்கள் கட்சிகளுக்குள் நல்லிணக்கம் காணுதலில் மூழ்கி போனார்கள்.

பௌத்தர்களும் , இந்துக்களும் சேர்த்து முஸ்லீம் மக்களை விரட்டி அடிப்போம் என்கிறார்கள் BBS. சிவசேனாவுடன் சேர்த்து இந்துக்கள் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும் என்கின்றனர் சிலர். கத்தோலிக்க தேவலயங்கள் ஒன்றும் தாக்க படவில்லை என்கிறார் ஆண்டகை மலகம் ரஞ்சித். எப்போதெல்லாம் பொருளாதார சுமைகள் மக்கள் மீது சுமத்தப்படுகிறதோ அப்போது மக்களை துவேச நடவடிக்கைகளை தூண்டி தம் நலன் காத்துகொள்கிறார்கள்

பொதுபல சேனாவோ , சிவசேனாவோ ஒருபோதும் மக்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வல்ல. இனவாதத்தால் இனவாதத்தை வெல்லமுடியாது.

About Thinappuyal News