வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என வெளியிட்ட கருத்தை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா!!

 

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான், தன்னை ஒருமுறை சந்தித்ததாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறினார்.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னாள், இன்று சாட்சியமளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் முடிவடைந்த பின்னர், அவருடைய அலுவலகத்துக்கு வருமாறு, சஹ்ரான் தனக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் அரசியல் ரீதியில், மேலும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்து, அப்போது அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறினார்.

அப்போது சஹ்ரான், தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பை மாத்திரமே உருவாக்கியிருந்தார் என்றும் அப்போது அவர், பயங்கரவாதியாக இருக்கவில்லை என்றும் தெரிவித்த ஹிஸ்புல்லாஹ், பிரதேசத்தின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக, அவருடைய நிபந்தனைகளுக்கு தான் இயங்கியதாகவும் பின்னர் அந்த நிபந்தனைகளை மீறியதால், தன்மீது சஹ்ரான், கடும் கோபத்தில் இருந்ததாகவும் கூறினார்.

கூட்டங்களின் போது பாடல்களை இயற்ற முடியாது, ஆண்களும் பெண்களும் இணைந்து, கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது போன்ற நிபந்தனைகளை, சஹ்ரான் விதித்திருந்ததாகவும் அவற்றைத் தான் விரும்பாத காரணத்தால், 2000 ஆயிரம் வாக்குகளால், தன்னை சஹ்ரான் தோற்கடித்ததாகவும், ஹிஸ்புல்லாஹ் கூறினார்.

இதேவேளை, சாய்ந்தமருது பிரதேசத்தில், தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த நியாஸ் ஷெரீப் என்பவரும், சஹ்ரானின் சகாவென்றும் கூறிய முன்னாள் ஆளுநர், அந்நபர், தனக்கு எதிராக, பேஸ்புக் ஊடாக, பலவாரான பிரிவினைவாதக் கருத்துகளைப் பதிவிட்டிருந்ததாகவும் கூறினார்.

எவ்வாறாயினும், 2017ஆம் ஆண்டுக்கு பின்னர், அந்நபரையும் தான் காணவில்லை என்றும் சஹ்ரான், ஒருபோதும் தனக்கு உதவவில்லை என்றும் தானும், ஒருபோதும் சஹ்ரானுக்கு உதவவில்லை என்றும், தன்னை அழிப்பதற்கே சஹ்ரான் முயற்சித்ததாகவும், ஹிஸ்புல்லாஹ் மேலும் கூறினார்.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என வெளியிட்ட கருத்தை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா!!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா இன்று முன்னிலையாகி சாட்சி வழங்கினார்.

இதன்போது, வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று தாம் கருத்து வெளியிட்டமையை அவர் ஒப்புக் கொண்டார்.

முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை விரும்பவில்லை.

எனவே முஸ்லிம்களே ஆயுதம் ஏந்தி அதற்கு எதிராக போராடுவார்கள் என்று தாம் கூறியதாக ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட தெரிவுக் குழுவின் உறுப்பினர் ஒருவர், பொறுப்புள்ள முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவர் இவ்வாறு கருத்து வெளியிடலாமா? என்று கேட்டார்.

இதன்போது ஹிஸ்புல்லா பதில் எதனையும் கூறவில்லை.

அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் அரபு மொழியிலான பெயர் பலகைகள், மத்திய கிழக்கு நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கானவை என்று கூறினார்.

அத்துடன் எல்லா அரசியல்வாதிகளைப் போலவே தாம் சஹ்ரானை சந்தித்ததாக குறிப்பிட்டார்.

2017ம் ஆண்டுக்கு முன்னர் சஹ்ரான் ஒரு மதத்தலைவராகவே பார்க்கப்பட்டதாகவும், எனினும் பின்னர் அவர் தன்னை விமர்சிக்க ஆரம்பித்து விட்டதாகவும் ஹிஸ்புல்லா கூறினார்.

அதேநேரம் முஸ்லிம்களை உற்சாகப்படுத்துவதற்காகவே தாம், உலகில் பெரும்பான்மையாக இருப்பது முஸ்லிம்களே என்ற கருத்தை வெளியிட்டதாகவும் அவர் தெரிவுக் குழுவின் முன்னால் குறிப்பிட்டார்.

இதேவேளை, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜெ.ஜே. ரத்னசிறி, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இன்று முன்னிலையாகி சாட்சி வழங்கினார்.

About Thinappuyal News