இங்கிலாந்து மேற்கிந்தியத்தீவுகள் போட்டியில் மழை குறுக்கிடுமா

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 19 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை தோற்கடித்தது. எனினும் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 14 ஓட்டத்தால் தோல்வியை தழுவியது. அத்துடன் மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை 106 ஓட்டத்தினால் வீழத்தியது.

இங்கிலாந்து அணியில் ஜோசன் ரோய், பட்லர், ஜோ ரூட், அணித் இயன் மோர்கன் ஆகியோர் துடுப்பாட்டத்தில் நல்ல நிலையில் உள்ளதுடன் பந்து வீச்சிலும் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், மார்க்வுட், பிளங்கெட் ஆகியோரும் தங்களது பங்களிப்பினை சிறந்த முறையில் ஆற்றி வருகின்றனர்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது, எனினும் அடுத்த போட்டியில் 15 ஓட்டத்தால் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான கடந்த ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.

மேற்கிந்தியத்தீவுகள் அணியில் கிறிஸ் கெய்ல், ரஸல், நிகோலஸ் பூரன், பிராத்வெய்ட், ஷெய் ஹோப் ஆகியோர் நிலைத்து நின்று அதிரடியை காட்ட ஆரம்பித்தால் எதிரிகள் பந்துகள் எல்லாம் மைதானத்தை விட்டு வெளியேறிவிடும்.

பந்து வீச்சிலும் உஷேன் தோமஸ், ஷெல்டன் காட்ரல், ரஸலும் இருப்பது அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

இரு அணிகளிலும் அதிரடி துடுப்பாட்ட வீரர்களும், நல்ல வேகப் பந்து வீச்சாளர்களும் உள்ளமையினால் போட்டியின் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது.

சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து அணி 5 முறையும் மேற்கிந்தியத்தீவுகள் அணி ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன.

இந் நிலையில் சவுதம்டனில் வானிலையானது மழை மோகத்துடன் காணப்படுவதனால் இப் போட்டியிலும் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் ஐ.சி.சி. குறிப்பிட்டுள்ளது.

About Thinappuyal News