தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் தீர்மானம் – ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர நேற்றைய தினம் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து அரச அதிகாரிகளுக்கு எதிராகவும் வழக்குத் தொடர்வதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடாத்துவதற்கு நியமித்திருந்த மூவர் அடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை ஜனாதிபதியினால், சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினால் குற்றவாளிகள் என குறிப்பிடப்படும் அரச அதிகாரிகள் எந்த வழியிலும் தப்பித்துக் கொள்ள முடியாது.

தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தமை அவர்களின் கூற்றுக்கள் மூலம் தெளிவாகின்றது.

பாதுகாப்புச் செயலாளர், புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் தங்களது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் அம்பலமாகியுள்ளது என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

About Thinappuyal News