ஒரு புதிய நடவடிக்கையில் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு

இவ் வருட ஒலிம்பிக் தின ஓட்டத்தின்போது ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழும் வகையில் வித்தியாசமான ஒரு புதிய நடவடிக்கையில் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு ஈடுபடவுள்ளது.

இதற்கு அமைய ஒரு தனிச்சிறப்பு முயற்சியாக பவளப் பாறைகளை பாதுகாத்து மீட்கும் நடவடிக்கையில் தேிசிய ஒலிம்பிக் குழு ஈடுபடவுள்ளதகாக தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா ஆகியொர் கூட்டாகத் தெரிவித்தனர்.

2019 ஒலிம்பிக் தின ஓட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு ஒலிம்பிக் இல்லத்தில் அமைந்துள்ள ஹேமசிறி பெர்னாண்டோ கேட்போர்கூடத்தில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றபோதே மேற்கண்ட தகவல்களை அவர்கள் வெளியிட்டனர்.

பவளப் பாறைகளை பாதுகாத்து மீட்கும் செயற்பாடானது வேறு எந்தவொரு நாட்டினதும் தேசிய ஒலிம்பிக் குழுக்களால் நடத்தப்படவில்லை என சுரேஷ் சுப்ரமணியம் சுட்டிக்காட்டினார்.

இவ் வருட ஒலிம்பிக் தின ஓட்டம் அல்லது நடைபவணி மாத்தறை பொல்ஹேனவில் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது. வழமையாக சர்வதேச ஒலிம்பிக் தினம் ஜூன் 23ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றபோதிலும் இலங்கையில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தும்வகையில் கிழமை நாளான செவ்வாயன்று (25ஆம் திகதி) நடத்த திட்டமிட்டுள்ளதாக செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார்.

இதேவேளை இம்முறை பவளப் பாறைகளை பாதுகாத்து மீட்கும் நடவடிக்கையுடன் பொல்ஹேன கடற்கரையில் கடற்கரை கரப்பந்தாட்டம், கடற்கரை கரப்பந்தாட்டம் என்பனவும் நடத்தப்படவுள்ளன.

அத்துடன் உயிர் பாதுகாப்பு மற்றும் அலைச் சறுக்கல் போட்டி ஆகியவற்றையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடற்பகுதிகளில் கழிவுகள் மற்றும் பொலித்தீன்களைக் கொட்டுவதால் கடல் மாசடைந்து பவளப் பாறைகள் அழிவை நோக்கிச் செல்வதாக சுட்டிக்காட்டிய மெக்ஸ்வெல், இதன் காரணமாகவெ இம்முறை புதிய நடவடிக்கையாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை வழைமைபோல் பாடசாலை மாணவர்களுக்கான வரைதல் போட்டி நடைபெறும். இப் போட்டியும் பவளப் பாறைகளைப் பாதுகாப்பதைத் தொணிப் பொருளாகக் கொண்டே நடத்தப்படவுள்ளது.

இது இவ்வாறிருக்க, ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொல்ஹேனவில் பாதுகாப்புக்கு பிரச்சினை எதுவும் இல்லை எனவும் ஓய்வுநிலை பிரதி பொலிஸ் மாஅதிபர் சுமித் எதிரிசிங்க தெரிவித்தார்.

About Thinappuyal News