ஆஸி – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

3

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது.

இதில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியாவும்- மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தும் மோதுகின்றன.

இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது அவுஸ்திரேலியாவா? இங்கிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சமபலத்தடன் திகழும் அவுஸ்திரேலிய அணி ‘லீக்‘ ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. அவுஸ்திரேலியா 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

அந்த அணி இதற்கு முன்பு 1975, 1987, 1996, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது.

ஆஸ்திரேலிய அணி ‘லீக்‘ ஆட்டங்களில் 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்து இருந்தது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் தொடக்க வீரர் வோர்னர் மிகவும் வலுவான நிலையில் உள்ளார். அவர் 3 சதம், 3 அரை சதத்துடன் 638 ஓட்டங்கள் குவித்து உள்ளார். சராசரி 79.75 ஆகும். அதிகபட்சமாக 166 ஓட்டங்கள் குவித்துள்ளார். மற்றொரு தொடக்க வீரரும், அணியின் தலைவருமான ஆரோன் பிஞ்ச் 3 சதம், 3 அரை சதத்துடன் 507 ஓட்டங்கள் குவித்து சிறப்பான நிலையில் உள்ளார். தொடக்க ஜோடி அவுஸ்திரேலியாவுக்கு மிகப் பெரிய பலமாகும்.

இது தவிர அலெக்ஸ் கேரி (329 ஓட்டங்கள்), ஸ்டீவ் ஸ்மித் (294 ஓட்டங்கள்), மேக்ஸ்வெல் போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களும் உள்ளனர். உஸ்மான் கவாஜா காயத்தால் விலகியது பாதிப்பே. அவருக்கு பதில் பீட்டர் ஹேண்ட்ஸ் ஹோம் இடம்பெறுவார்.

பந்து வீச்சில் வேகப்பந்து வீரர் மிச்சேல் ஸ்டார்க் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் 26 விக்கெட் வீழ்த்தி இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார். இது தவிர கம்மின்ஸ் (13 விக்கெட்), பெகரன்டார்ப் (9) போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

இங்கிலாந்து அணி லீக் ஆட்டங்களில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தது.

அவுஸ்திரேலியாவை விட பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கூடுதல் பலத்துடன் இங்கிலாந்து திகழ்கிறது.

ஜோரூட் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் 2 சதம், 3 அரை சதத்துடன் 500 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதேபோல தொடக்க ஜோடியும் இங்கிலாந்தின் பலமாகும். பேர்ஸ்டோவ் 2 சதம், 2 அரை சதத்துடன் 462 ஓட்டங்களும், ஜேசன்ராய் ஒரு சதம், 3 அரை சதத்துடன் 341 ஓட்டங்களும் குவித்துள்ளனர்.

இது தவிர தலைவர் மோர்கன் (317 ஓட்டங்கள்), பட்லர் (253) போன்ற சிறப்பு துடுப்பாட்ட வீரர்களும் உள்ளனர்.

பென்ஸ்டோகஸ் சகல துறைவீரர் வரிசையில் ஜொலிக்க கூடியவர். அவர் 381 ஓட்டங்கள் குவித்துள்ளார். 7 விக்கெட் சாய்த்துள்ளார்.

பந்து வீச்சில் ஆர்ச்சர் (17 விக்கெட்), கிறிஸ்வோக்ஸ் (10 விக்கெட்), மார்க்வுட் (16 விக்கெட்), பு‌ஷன்கெட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தானை போல அவுஸ்திரேலியா- இங்கிலாந்து பரம்பரை எதிரிகள் ஆகும்.

இதனால் இரு அணிகளும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைய கடுமையாக போராடுவார்கள். இதனால் 2-வது அரை இறுதி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.