“45 நிமிட மோசமான ஆட்டத்தின் மூலம் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டோம்” – விராட் கோலி

1

உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போதிலும் 45 நிமிட மோசமான ஆட்டத்தின் மூலம் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டோம் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவத்துள்ளார்.

மன்செஸ்டரில் நேற்று இடம்பெற்ற நடப்பு உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 18 ஓட்டங்களினால் இந்திய அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

இந்த போட்டியின் பின்னர் தோல்வி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே விராட் கோலி மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த உலக கோப்பையில் நாங்கள் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், இந்த ஆட்டத்தில் 45 நிமிடங்கள் மோசமாக ஆடி, அதன் மூலம் போட்டியில் இருந்தே வெளியேற்றப்பட்டோம் என்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

இதை ஏற்றுக்கொள்ளவே கடினமாக இருக்கிறது. எல்லா பெருமையும் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களையே சாரும். முதல் அரைமணி நேரம் அவர்கள் பந்து வீசிய விதம் தான் ஆட்டத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது.

ஜடேஜாவின் துடுப்பாட்டம் அருமையாக இருந்தது. அத்துடன் அவருக்கு டோனி சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார்.

நேற்றை தினம் (நேற்றுமுன்தினம்) பந்து வீச்சில் சிறப்பாக நாம் அசத்தியிருந்தோம். நியூஸிலாந்து அணியினரை எட்டக்கூடிய இலக்கில் கட்டுப்படுத்தியதாகவே நினைத்தோம். ஆனால் முக்கியமான தருணத்தில் எங்களை விட அவர்கள் சாதுர்யமாகவும் செயற்பட்டனர்.

துடுப்பாட்டத்தில் இன்னும் நன்றாக செயற்பட்டிருக்கலாம். மற்றபடி இந்த தொடரில் நாங்கள் நன்றாகவே ஆடினோம். அதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

தனது வருங்கால ஓய்வு குறித்து தோனி இதுவரை என்னிடம் எதுவும் பேசவில்லை. இந்த ஆட்டத்தில் ஒரு பக்கம் நிலைத்து நின்று, இன்னொரு பக்கம் ஜடேஜாவை இயல்பாக ஆட அனுமதித்தார். தோனி சூழ்நிலைக்கு தக்கபடி விளையாடினார என்றார்.