17ஆம் திகதி அமலுக்கு வரும் வரிவிலக்கு

13

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 16 வகையான பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது.

அமெரிக்காவுக்கும்,  சீனாவுக்கும் இடையே  வர்த்தகப்போர் நீடிக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாத காரணத்தால், இருநாடுகளும் பரஸ்பரம் வரி விதித்து பதிலடி கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில், வர்த்தகப் போர் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால், பண்ணை விலங்குகளுக்கான மீன் உணவு, புற்றுநோய்க்கான மருந்து போன்ற 16 வகை பொருட்களுக்கு அளித்துள்ளது.

இந்த வரிவிலக்கானது வரும் 17ஆம் திகதி அமலுக்கு வரும் என்றும், இது ஒரு ஆண்டுக்கு அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த 16 வகை பொருட்களில் 12 பொருட்களுக்கு ஏற்கனவே வரி செலுத்தியவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், ஏனைய 4 பொருட்களுக்கு செலுத்தப்பட்ட வரிப்பணம் திரும்பக் கிடைக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் சில அமெரிக்கப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சீன வரிவிதிப்பு ஆணையம் கூறியுள்ளது.

இதேநிலையில் தொடர்ந்து சீனாவும் அமெரிக்காவும் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தினால் இரு நாடுகளின் வர்த்தகப் போர் உலக பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

அதேவேளை, செப்டம்பர் மாதம் பேச்சுவார்த்தை நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார். எனினும் அமுலுக்கு வரும் வகையில் 30,000 கோடி டொலர் மதிப்பிலான சீனப்பொருட்கள் மீது கூடுதல் வர்த்தக வரிகள் நடைமுறைப்படுத்தப்படும் என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அண்மையில் குறிப்பிட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

SHARE