சந்திரயான் 2: விக்ரம் லேண்டர் தொடர்பு ஏற்படுத்தப்படுவது சாத்தியமா?

21
சந்திரயான் 2: விக்ரம் லேண்டர் தொடர்பு ஏற்படுத்தப்படுவது சாத்தியமா?

இந்தியாவின் சந்திரயான் – 2 திட்டத்தின் கீழ் நிலவுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் கருவி நிலவின் மேற்பகுதியில் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆனால், அந்தக் கருவியை மீண்டும் செயல்பட வைப்பது சாத்தியமா?

விக்ரம் லேண்டர் கருவி நிலவின் மேல் பகுதியில் கிடப்பது ஆர்பிட்டர் மூலம் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாகத் தொழில்நுட்ப ரீதியாகப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

விக்ரம் லேண்டர் கருவி நிலவில் முழுதாக இருப்பது ஆர்பிட்டர் எடுத்த தெர்மல் இமேஜ் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால் உண்மையில் அந்தப் படங்கள் எப்படி எடுக்கப்பட்டன?

“அந்தப் படங்கள் தெர்மல் இமேஜிங் முறையில் எடுக்கப்பட்டவை என எழுதப்படுகிறது. ஆனால் உண்மையில் அவை ஆப்டிகல் முறையில்தான் எடுக்கப்பட்டவை. நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டரில் இரண்டு கேமராக்கள் இருக்கின்றன. ஒன்று ஆர்பிட்டர் ஹை ரெசல்யூஷன் (OHRC) கேமரா. மற்றொன்று டெரைன் மேப்பிங் கேமரா. 30 சென்டிமீட்டர் ரெசல்யூஷன் கொண்ட உயர்தர படங்களை இந்த ஓஎச்ஆர்சி எடுக்கும். இது ஒரு வழக்கமான ஆனால், உயர்ந்தபட்ச ரெசல்யூஷனைக் கொண்ட கேமரா, அவ்வளவுதான். இந்த ஓஎச்ஆர்சி நிலவின் தரைப்பகுதியைப் படம் பிடிக்கும். அப்படித்தான் இந்த லேண்டர் கீழே இருப்பது தெரியவந்தது” என்கிறார் சந்திரயான் – 1 திட்டத்தின் முன்னாள் இயக்குநரான மயில்சாமி அண்ணாதுரை.

விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை ஆர்பிட்டரில் உள்ள கேமரா படம் எடுத்துவிட்டதாகக் கூறி சில படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுவருகின்றன. உண்மையில் விக்ரம் லேண்டரின் மிகத் தெளிவான புகைப்படத்தைப் பெற வாய்ப்புள்ளதா?

“இல்லை. அந்தப் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக விழாது. சாய்வாகத்தான் விழும். நீங்கள் கூகுள் மேப்களில் பார்க்கும்போது அவை தெளிவாகத் தெரியக் காரணம், அவை சூரிய ஒளி நேரடியாக விழும்போது எடுக்கப்பட்டவை என்பதுதான். ஆனால், இங்கே சூரிய ஒளி சாய்வாகத்தான் விழும். அதனால், தெளிவில்லாத படம்தான் கிடைக்கும். அதாவது ஏற்கனவே எடுக்கப்பட்ட அந்தப் பகுதியின் படத்தில் எந்தப் பொருளும் இருக்காது. இப்போது அங்கே ஒரு பொருள் இருக்கிறது. அப்படித்தான் இது கண்டறியப்படுகிறது. இந்த ஆர்பிட்டர் நிலவிலிருந்து 100 கி.மீ தூரத்தில் சந்திரனைச் சுற்றிவருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்கிறார் மயில்சாமி.

சந்திரயான் 2: விக்ரம் லேண்டர் தொடர்பு ஏற்படுத்தப்படுவது சாத்தியமா?

நிலவின் தரையில் கிடக்கும் லாண்டரைத் தொடர்பு கொண்ட தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. 2.1 கி.மீ. உயரத்திலிருந்து லாண்டர் கீழே விழுந்துவிட்ட நிலையில் இது சாத்தியமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

“இந்த லாண்டர் கீழே விழவில்லையென்றே வைத்துக்கொள்வோம். ஆனால், இறங்க வேண்டிய இடத்திற்குப் பதிலாக வேறு ஒரு இடத்தில் இறங்கிவிட்டால்கூட அதனைத் தொடர்புகொள்வது இயலாமல் போகலாம். லாண்டரை நேரடியாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்பு கொள்ள முடியாது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஆர்பிட்டரைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஆர்பிட்டர் சிக்னல்களை லாண்டருக்கு அனுப்பும். பிறகு லாண்டர் சிக்னல்களை ஆர்பிட்டருக்கு அனுப்பும். ஆர்பிட்டர் பூமிக்கு அனுப்பும். இதுதான் முறை.

இப்போது வேறு ஒரு இடத்தில் லாண்டர் இருப்பது தெரியவந்திருக்கிறது. அதனுடன் தொடர்புகொள்ள முடியுமா என்பதை இரண்டு, மூன்று காரணிகளை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும். அதாவது, அந்த லாண்டர் பவர் – ஆன் நிலையில் இருக்க வேண்டும். லாண்டர் ஆண்டனா தொடர்பு கொள்ளும் திசையை நோக்கி இருக்க வேண்டும். ஆண்டனாவோ, லாண்டரோ சேதமடைந்திருக்கக்கூடாது.

நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர், லாண்டர் கிடக்கும் இடத்திற்கு மேல் 5-10 நிமிடங்கள்தான் வரும். அதற்குள் தகவல் தொடர்பு கிடைத்தால் உண்டு” என விளக்குகிறார் மயில்சாமி அண்ணாதுரை.

லாண்டர் நிலவில் விழுந்துவிட்டாலும்கூட, எப்படியாவது அதனுடன் தொடர்பு கிடைத்துவிட வேண்டும் என்பதுதான் பலரது வேண்டுதலாக இருக்கிறது.

சந்திரயான் 2: விக்ரம் லேண்டர் தொடர்பு ஏற்படுத்தப்படுவது சாத்தியமா?

“இப்படிப் பல முறை நடந்திருக்கிறது. ஏதாவது ஒரு கிரகத்திற்கு ஒரு கருவியை அனுப்பினால், அந்தக் கருவி பத்திரமாக தரையிறங்கியிருக்கும். ஆனால், தொடர்பு இல்லாமல் போயிருக்கும். பிறகு சில நாட்கள் கழித்து தொடர்பு கிடைக்கும். இது செயற்கைக்கோள்களில் அடிக்கடி நடக்கும். பல முறை இந்தியா உட்பட பல நாடுகள் அனுப்பிய செயற்கைக்கோள்கள் சுற்றுவட்டப் பாதையில் நின்றவுடன் சமிக்ஞை எதையும் அனுப்பாது. ஆனால், சில நாட்கள் கழித்து சமிக்ஞை கிடைக்க ஆரம்பிக்கும். நாம் தொடர்ந்து அந்த செயற்கைக்கோளுக்கு சமிக்ஞையை அனுப்ப வேண்டும். அதைச் செயல்படவைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். சில சமயங்களில் அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. ஆனால், இதைப் பல காரணிகள் தீர்மானிக்கும்” என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

நிலவில் விழுந்துவிட்ட லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்த அடுத்த பதினான்கு நாட்கள் முயற்சிக்கப் போவதாக இஸ்ரோ தலைவர் சிவன் சொல்லியிருக்கிறார். “லாண்டரைப் பொறுத்தவரை சூரியன் தென்துருவப் பகுதிக்கு வரும் முதல் நாளில் தரையிறங்கும். நிலவில் ஒரு சூரிய நாள் என்பது பூமியில் 14 நாட்கள். இந்த பதினான்கு நாட்களுக்குப் பிறகு அங்கு சூரிய ஒளி இருக்காது. ஆகவே அந்த லாண்டர் செயல்படாது. அதனால்தான் பதினான்கு நாட்களுக்குள் அதைச் செயல்படவைக்க முயற்சிகள் நடக்கின்றன. அந்தப் பகுதி இருளாகிவிட்டால் அந்தக் கருவியின் சர்க்யூட்கள் அணைந்துவிடும். பிறகு எப்படி தொடர்புகொள்ள முடியும்? அந்தப் பகுதிக்கு மீண்டும் சூரிய ஒளி கிடைக்கும்போது சர்க்யூட் மறுபடியும் இயக்கத்தைத் தொடருமா என்பதையெல்லாம் நிச்சயமாக சொல்ல முடியாது” என விளக்கமளிக்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

லாண்டர் நிலவில் தரையிறங்கி நான்கு நாட்கள் கடந்துவிட்ட நிலையில், லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகளை இஸ்ரோ தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.

இஸ்ரோவின் முதல் தலைவர் டாக்டர் விக்ரம் ஏ சாராபாயின் பெயர்சூட்டப்பட்ட இந்த லாண்டர், 1471 கிலோகிராம் எடையைக் கொண்டது. 14 நாட்கள் இயங்கக்கூடியது. இதிலிருந்து கிடைக்கும் சமிக்ஞைகள் பெங்களூருக்கு அருகில் உள்ள பயலாலுவில் உள்ள இந்தியன் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் மையத்தில் பெறப்பட்டு ஆராயப்படும். இந்த லாண்டர் நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டருடனும் தொடர்புகொள்ளும்.

இந்த லாண்டரில் பிரக்யான் என்ற உலவி வாகனமும் வைக்கப்பட்டிருந்தது. நிலவை நெருங்கியவுடன் மேன்ஸினஸ் சி மற்றும் சிம்பெலியஸ் என் என்ற இரு பள்ளத்தாக்குகளுக்கு நடுவில் உள்ள இடத்தில் வினாடிக்கு 2 மீட்டர் வேகத்தில் தரையிறங்கும்படி இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

SHARE