தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையே தமிழ் மக்களின் தீர்வுக்கு வழியமைக்கும்

42

தமிழ் மக்களின் ஒற்றுமை, தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமை என்று பேச்சளவில் மாத்திரம் கூறிக் கொண்டிருக்கின்ற தமிழ் கட்சித் தலைவர்களைப் பார்க்கின்றபோது வேடிக்கையாகவிருக்கிறது. போராட்டத்தின் ஒரு அங்கமாகவே TNA உருவாக்கப்பட்டு அது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய வெற்றியையும் கண்டது. இதன் பின்னர் அதனை உடைக்கும் நோக்கில் தமிழ்க் கட்சிகளே செயற்படுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமி ழர் விடுதலைக்கூட்டணி இன்று பிரிந்தே செயற்படுகின்றது. இவர்கள் தமது கட்சியினை வளப்படுத்தும் நோக்கில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். மாற்றுக்கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள். ஆனால் நடைமுறைப் படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள்.

எந்தவொரு போராட்டங்களையும் இவர்களால் வெற்றிகரமாக வடகிழக்கில் மேற்கொள்ள முடியவில்லை. ‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்று சொன்னால் மட்டும் போதாது. அதனை நடைமுறைப்படுத்திக் காட்டவேண்டும். அதனடிப்படையில் தான் விடுதலைப்புலிகள் போனஸ் அடங்கலாக 25 ஆசனங்களை கைப்பற்றினார்கள். இது வரலாற்றில் மாபெ ரும் சாதனை. எமது இனத்தின் பிரதி நிதிகள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதென்பது எமது இனத்திற்கே பலம் சேர்க்கும்;. போராட்டக் காலத்தில் இருந்த அரசியல் வேறு. தற்போதைய அரசியல் சூழ்நிலை என்பது வேறு. அனைத்து ஆயுதக்கட்சிகளும், தமிழ் புத்திஜீவிகளும் ஒன்றிணைய விடுதலைப்புலிகளே தடையாகவிருந்தார்கள் எனக்கூறிவந்த ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி போன்ற இயக்கங்கள் மக்கள் மத்தியில் இன்று தமது சுயலாப அரசி யலையே செய்து வருகின்றார்கள். இன்று தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் அணிதிரள ஏன் தயக்கம் காட்டுகிறார்கள்.

தமிழ் மக்கள் பேரவையானது தமிழ் மக்களின் நலன் கருதி கட்சி பேதமின்றி தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரி, தவறுக்கு அப்பால் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பை எதிர்க்கின்ற அரசி யல்வாதிகள் ஒன்றிணைய தயக்கம் காட்டுகின்றனர். போரைக் காரணம் காட்டிய இக்கட்சிகள் இன்றும் ஒற்றுமைப்படாமல் இருக்கக் காரணம் அவர்களின் சுய லாப அரசியலையே எடுத்துக்காட்டுகிறது. மக்கள் போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் குளிர்காய்கின்றன. இதுவே உண்மை. மக்கள் போராட்டத்தை ஒரு அரசியல்வாதிதான் முன்னின்று இயக்குகிறார். தவிர மக்களாக போராட்டங்களை ஒருபோதும் நடத்தவில்லை. திலீபன் கூறியதுபோன்று ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமி ழீழம் மலரட்டும்’ என்பது இவ் அரசியல் கட்சிகளின் போக்கினால் மக்கள் சக்தியால் இந்நாட்டில் நிறைவேறும்.

தமிழ் அரசியல் கட்சிகள் அதிகாரத்துடன் இருக்கக்கூடிய ததேகூவுடன் இணைந்து அனைவரும் ஒன்றாகப் பயணிப்பதைத் தவிர மற்றொரு தலைமையையோ அல்லது கூட்டமைப்பையோ உருவாக்க நினைப்பது முட்டாள்தனமானது. அது சொந்தச் செல வில் சூனியம் வைக்கின்ற விடயமாகவே அமையும். தவறு செய்கிறார்கள் என்றால் அதனை மக்கள் இனங்கண்டு மக்கள் சக்தியாக அணிதிரண்டு, முரணாகச் செயற்படுகிறவர்களை ஒரு தேர்தலின் மூலம் ஓரங்கட்ட முடியும். அதனை விடுத்து வீண் விமர்சனங்களை செய்வதன் ஊடாக எதிரிக்கு நாம் பலத்தை சேர்த்துக்கொடுக்கிறோம். இவ்வாறான நிலைமைகள் மாற்றப்பட்டு ஒற்றுமை என்பதை பேச்சளவில் மாத்திரம் அல்லாமல் செயல் வடிவத்தில் முன்னெடுக்க தமிழர்களாகிய நாம் தமி ழால் ஒன்றுபடுவோமாக! அப்பொழுது எந்த சக்தியும் எம்மை பிரித்தாள முடியாது என்பது திடமான உண்மை.

SHARE