அறிவியலுக்கு மிகப் பெரிய விஷயமாகும் ஹவாய் தீவு எரிமலை வெடிப்புக்கள்

31

ஹவாய் தீவில் இருக்கும் கிலோவா எரிமலை கடந்த சில நாட்களாக எரி குழம்பை கக்கி வருகிறது. இந்த எரிமலை வெடிப்பால் அங்கிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த எரிமலை சீற்றத்தை, `இது அறிவியலுக்கு மிகப் பெரிய விஷயம்’ என்று விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த மே மாதம் 3 ஆம் தேதி முதல் இந்த எரிமலை, அதிவெப்பம் நிறைந்த குழம்பை கக்கி வருகிறது. ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக இந்த எரிமலை பொறுமையான அளவில் எரிச் சாம்பலையும், அவ்வப்போது சிறிய அளவிலான எரி குழம்பையும் கக்கி வந்த வண்ணம் இருக்கிறது. இதனால், அங்கு பல தொழில்நுட்ப வசதிகள் கொண்ட உணரிகள் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அங்கு நடக்கும் ஒவ்வொரு அசைவும் மிக கவனமாக உற்று நோக்கப்பட்டு வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் முதன் முறையாக கிலோவா எரிமலை தற்போது வெளியிட்டு வரும் அளவுக்கான எரி குழம்பை கக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

kilauea volcano hawaii afpஇந்த எரிமலை குமுறலால், அபாயகரமான பல வாயுக்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன. இதன் வெளிப்பாடாக, பல்லாயிரக்கணக்கான ஹவாய் மக்கள் அவர்களின் வாழ்விடத்தில் இருந்து வெளியேறும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். ஏறக்குறைய 45 வீடுகளை கிலோவா எரிமலையில் இருந்து வெளியே வந்த குழம்பு சாம்பலாக்கி உள்ளது. கிலோவா எரிமலைக்குப் பக்கத்தில் ஒரு ஜியோ-தெர்மல் மின்சார ஆலை இருக்கிறது. இது தான், ஹவாய் தீவின் மின்சாரத் தேவையில் 25 சதவிகிதத்தை இட்டு நிரப்புவது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த ஆலைக்கும் ஆபத்து நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த மின்சார ஆலையின் நிர்வாகத் தரப்பு, `கிலோவா எரிமலை பொங்க ஆரம்பித்ததில் இருந்தே நாங்கள் உஷாராகத் தான் இருக்கிறோம். எங்கள் ஆலையை முழுவதுமாக இப்போது முடிவிட்டோம். எரி குழம்பால் ஆலைக்கு எந்த வித பாதிப்பும் வராத வண்ணம் பார்த்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டிருக்கிறோம்’ என்று தெளிவுபடுத்தி உள்ளனர்.