‘டெங்கு’ – மிகை அச்சம் அவசியமா ?

99

முழு நாட்டையும் அச்சத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் நோய் டெங்குக் காய்ச்சலாகும். ஏடிஸ் ஏஜிப்ரி (Aedys Aegypti) எனும் நுளம்பின் மூலம் காவப்படும் ஒரு வைரஸ் கிருமியே இந்நோயைத் தோற்றுவிக்கின்றது. நோயும், அதன் விளைவுகளும், அதனால் விளைந்த மரணங்களும் ஏற்படுத்திய தாக்கம் ஒருபுறம் இருக்க, டெங்கு நோய் ஏற்படுத்திய உளவியல் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது. இந்த உளவியல் தாக்கம் மக்களிடம் ஓர் மிகை அச்சத்தை விதைத்துள்ளது. காய்ச்சல் ஏற்பட்டாலோ, டெங்கு என அறியப்பட்டாலோ பலர் பதற்றமுற்று அவசர முடிவுகளை எடுப்பதைக் காணமுடிகிறது. அவசர முடிவுகள் சிலவேளைகளில் நன்மையை அளித்தாலும், பலவேளைகளில் தீமையையே அளிக்கின்றது. இது பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், காய்ச்சல் வேளைகளில் செய்யவேண்டிய பொதுவான நடைமுறைகள் பற்றி விபரிப்பதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

1. காய்ச்சல் என்பது ஓர் நோய் அல்ல
அது நோயின் அறிகுறியாகும். உதாரணமாக டெங்குக் காய்ச்சல், நியூமோனியா போன்ற பல நோய்களின் அறிகுறியாக காய்ச்சல் இருக்கிறது. எனவே எப்போதும் காய்ச்சலைத் தணிப்பது வைத்தியர்களின் முதல் நோக்காக இருக்காது காய்ச்சலுக்குரிய காரணியைக் கண்டறிந்து குணப்படுத்துவதே முதல்நோக்காகும். எனவே காய்ச்சல் வந்தவுடனே பதற்றம் தேவையற்றது.

2. அறிகுறிகளை அவதானியுங்கள்
காய்ச்சல் தவிர்ந்த ஏனைய அறிகுறிகளான இருமல், வயிற்றோட்டம், வாந்தி, சிறுநீர் எரிச்சல் போன்றன காணப்பட்டால் அவற்றைத் தெளிவாக வைத்தியரிடம் தெரிவிப்பது நோயை உய்த்தறிய இலகுவாக இருக்கும். பலநோய்களை காய்ச்சல் ஏற்படும் தன்மையை வைத்தே இனம்காண முடியும். உதாரணமாக இரவில் மட்டும் ஏற்படும் காய்ச்சல், ஒன்று விட்ட ஒருதினத்தில் ஏற்படும் காய்ச்சல் போன்றவற்றைக்குறிப்பிடலாம். அடுத்து காய்ச்சல் எவ்வளவு மணிநேரம் நீடிக்கின்றது, ஒரு நாளில் எத்தனைமுறை காய்ச்சல் எடுக்கிறது போன்ற விடயங்கள் பயனுள்ளவை இவற்றைக் கவனமான இனம்காண வேண்டும்.

3. பரசிட்டமோல் பாவனை
அளவுக்கதிமான பரசிட்டமோல் பாவனை ஈரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற உண்மையே இங்கே வலியுறுத்திச்சொல்லப்படும் விடயமாகும். முக்கியமாக சிறுகுழந்தைகளுக்கு உடல் நிறை அடிப்படையிலேயே வழங்கப்படவேண்டும். ஆகக்கூடியது ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருமுறையே வழங்கப்பட முடியும். காய்ச்சல் குறையவில்லை என்று காரணம் காட்டி நான்கு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை கொடுப்பது கெடுதியையே கொடுக்கும். இங்கு மனதில் கொள்ளவேண்டிய விடயம் வைரஸ் கிருமி மூலம் ஏற்படும் காய்ச்சல் நிலைகளில் பரசிட்டமோலுக்கு காய்ச்சல் குறையும் தன்மை குறைவாகவே இருக்கும் எனவே அதிகளவில் மருந்தைக்கொடுப்பதிலும் பலன் கிட்டாது. இலங்கையிலே வைத்தியரின் சீட்டு இன்றி வாங்கக்கூடிய ஒரே மருந்து (Over the counter drug) பரசிட்டமோல் மட்டுமே. ஏனைய மருந்துகளை வைத்தியருடைய சீட்டு இன்றி வழங்குவது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு வைத்திய ஆலோசனையின்றி மருந்துகளைப் பயன்படுத்துவது உயிராபத்தை ஏற்படுத்தலாம். வைத்தியத்துறையில் புகழ்பெற்ற ஒரு வாசகம் ‘விசம் ஒன்றைக்கூட பொருத்தமான அளவில் பொருத்தமான முறையில் பயன்படுத்தப்பட்டால் மருந்தாகலாம், ஆனால் பொருத்தமான ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்ளப்படுவது விசம் உண்ட அளவிற்கு அஞ்சத்தகுந்த விடயம்’.

4. உடல் வெப்பநிலையை அளக்க மறக்காதீர்கள்
குழந்தைகளிற்கு பரசிட்டமோல் கொடுக்கும் முன்னர் அவர்களுக்குக்காய்ச்சல் இருப்பதை உடல் வெப்பமானி மூலம் உறுதிசெய்ய வேண்டும். வெறுமனே உடல் சுடுகிறது, தலை சுடுகிறது என்ற கூற்றுக்களைத் தாண்டி வெப்பநிலை அளவு முக்கியமானது. உடல் வெப்பநிலை 1000கு இலும் குறைவாக இருக்கும் தருணங்களில் பரசிட்டமோல் தேவையற்றது, மெல்லிய காய்ச்சல் நிலைகளில் (உ-ம்: 990 F – 99.50 F) ஈரத்துணியொன்றினால் அக்குள் பகுதிகளிலும், அடி வயிற்றிலும் தொடர்ச்சியாக காய்ச்சல் தணியும் வரை துடைப்பது மிகுந்த பயன் தரும். பரசிட்டமோலுக்குத் தணியாத கடும்காய்ச்சல் சிலவேளை இந்த எளிய செயற்பாட்டுக்குத் தணியலாம்.

5. காய்ச்சலைத் தணிக்க வேறு மருந்துகள் வேண்டாம்
காய்ச்சல் பரசிட்டமோலுக்குத் தணியவில்லை என்று காரணம்கூறி Brufen போன்ற வலிநீக்கி மருந்துகளும், மலவாசலால் உட்செலுத்தப்படும் Diclofenac போன்ற மருந்துகளும் பயன்படுத்தப்படுவது ஆபத்தானது. மேலே கூறப்பட்டது போல காய்ச்சல் என்பது ஓர் அறிகுறியே, அதனைத்தணிக்க மேற்கொள்ளும் இவ்வாறான முயற்சி காய்ச்சலை ஏற்படுத்தியுள்ள நோயைத்தீவிரப்படுத்தலாம். குறிப்பாக டெங்குக் காய்ச்சல் உள்ள ஒருவருக்கு அதனை அறியாமல் மேலே கூறப்பட்ட வலி நீக்கி மருந்துகளை வழங்கும்போது மருந்தின் காரணமாக உடலில் உள்ள குருதிச்சிறுதட்டுக்களின் (Platelets) எண்ணிக்கை குறைவடையும், நோயின் காரணமாகவும் குருதிச்சிறுதட்டுக்கள் குறைவடையும். இரண்டு வழிகளாலும் மிகவும் தாழ்வாக குருதிச்சிறுதட்டுக்கள் குறைவடையும்போது இரத்தப்பெருக்கு ஏற்படக்கூடிய வாய்ப்புண்டு (மூக்கால், பல் ஈறுகளால், வாந்தியுடன் இரத்தம் வெளியேறல்). இது உயிராபத்தை விளைவிக்கலாம். எனவே காய்ச்சலுக்கு மருந்து பரசிட்டமோல் ஒன்றுதான்.

6. வைத்தியர் ஆலோவனையுடன் மட்டுமே இரத்தப்பரிசோதனை
எந்த விதமான காய்ச்சலும் மூன்று நாட்களைக் கடக்கும்போது Full Blood Count  என்னும் இரத்தப்பரிசோதனை கட்டாயம் செய்யவேண்டும். ஆனால் வைத்தியரிடம் நோயாளியைக் காட்டியே பரிசோதனை தொடர்பான ஆலோசனை பெறப்படவேண்டும், ஏனெனில் நோயாளியின் நிலமைக்கேற்ப மேலதிக பரிசோதனைகள் செய்யப்படலாம். பலர் தாமாகவே முடிவெடுத்து டெங்கு பரிசோதனை என்று அழைக்கப்படும் Dengue Antigen பரிசோதனையை செய்கிறார்கள். மிகவும் விலை உயர்வான இந்தப் பரிசோதனை தற்போதய டெங்கு நோய் சிகிச்சை நடைமுறையில் அவசியமற்றது. ஏனென்றால் குறித்த பரிசோதனை  Positive ஆக வந்த பலர், கடுமையற்ற நோயுடன் சுகமடைகிறார்கள். எனவே அவர்களுக்கு வீண் பதற்றமே எஞ்சும்.

7. டெங்கு நோய் அஞ்சத்தகுந்ததா?
சில வருடங்களுக்கு முன்பு வரை டெங்கு நோய் சிகிச்சை பற்றிய சரியான அறிவு எம்மிடம் இருக்கவில்லை அந்தநேரங்களில் மரணிக்கும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்க அதுவே காரணம். தற்போது அனுபவத்தின் பாடமாக எமது டெங்கு சிகிச்சை முறை உலகளாவிய நிலையில் சிறந்ததாக இருக்கின்றது. உதாரணமாக முன்பு தாராளமா நீரை உட்கொள்ள அனுமதித்த நாம் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அனுமதிக்கிறோம். இவ்வாறு பலமாற்றங்கள் ஏற்பட்ட நிலையில் டெங்கு முன்பு இருந்த அளவில் உயிரிழப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனாலும் நோயாளிகளில் மிகவும் குறைந்த ஓரு சிலருக்கு கடுமையான நோய்த்தாக்கம் ஏற்படுகிறது, இதன்போது இதயம், மூளை என்பன பாதிப்புறலாம். ஆனால் இது மிகக்குறைந்த ஒரு சதவீதமே. பெரும்பாலான டெங்கு நோயாளிகள் முழுமையாக சாதாரண நிலையை அடைகிறார்கள்.

8. தேவைப்பட்டால் மாத்திரம் வைத்தியசாலை அனுமதி
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் ஒருவரது குருதிப் பரிசோதனையில் குருதிச்சிறுதட்டுக்கள் குறைந்து இருந்தாலும் அவை குறித்த ஓரு மட்டத்தைவிடக் குறைந்தாலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவேண்டும். அல்லது நோயாளி மிகவும் இயலாத நிலையிலோ, வாய் மூலம் திரவ உணவுகளையேனும் அருந்த முடியாது இருந்தாலோ அனுமதி தேவைப்படலாம். ஏனையவர்கள் வீட்டியேயே இருந்து வைத்திய ஆலோசனைப்படி போதுமான திரவ ஆகாரத்தை உட்கொண்டு சிறுநீர் வழக்கமான அளவிலே வெளியாகிறதா என்பதை அவதானித்தல் போதுமானது. வைத்தியர் ஆலோசனைக்கேற்ப தினமும் இரத்தப்பரிசோதனை தேவைப்படலாம். தொடர்ச்சியான வாந்தி அல்லது வயிற்றோட்டம் காணப்பட்டாலோ, மிகவும் சோர்ந்த நிலையில் காணப்பட்டாலோ, நீண்டநேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலோ உடன் வைத்தியரை நாடவும்.

8. ஆபத்தான அறிகுறிகளை அவதானிக்கவும்
பின்வரும் அறிகுறிகள் டெங்கு நோயின்போது ஆபத்தானவையாக கருதப்படுவவை. இவற்றில் ஏதாவது அறிகுறிகள் காணப்பட்டால் உடனே வைத்தியசாலைக்குச் செல்லவேண்டும்.
– தொடர் வாந்தி
– அதிகமான வயிற்றுவலி
– கருமை நிற மலம் / கபில நிற வாந்தி வெளியேற்றம்
– சிறுநீர் வெளியேற்றம் குறைதல் (6 மணித்தியாலங்களுக்கு மேல் சிறுநீர் வெளியேறாமல் இருத்தல்)
– அசாதாரண சோர்வு

9. மேலதிக கவனம் தேவைப்படுவோர்
கர்ப்பிணிகள், முதியவர்கள், ஒரு வயதிலும் குறைவான சிசுக்கள் டெங்கு நோயுற்றால் மிகவும் கவனத்துடன் அவதானிக்கவேண்டும். வைத்தியரிடம் முடிந்த அளவு விரைவில் செல்லவேண்டும்.

10. உண்ணக்கூடியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை
போதுமான நீராகாரம் உட்கொள்ள வேண்டும், வெறும் நீரைத்தவிர்த்து இளநீர், ஜீவனீ, பால், கஞ்சி, பழச்சாறு, சூப் போன்றவற்றைக் கொடுப்பது சிறந்தது. சிவப்பு, கறுப்பு மற்றும் கபில நிறப்பானங்களை உட்கொள்வதை முற்றாகத் தவிர்க்கவேண்டும். இவற்றை உட்கொள்ளும்போது மலம் மற்றும் சலம் ஆகியவை குறித்த நிறங்களில் வெளியேறலாம். இது குருதிப்போக்கு ஏற்படும்போது ஏற்படும் நிறமாற்றங்களை அவதானிக்க முடியாது தடுக்கிறது. சோடா வகைகள், நிறமூட்டப்பட்ட பழப்பானங்களை முற்றாகத் தவிரக்கவேண்டும்.

11. நுளம்புக்கடியைத் தவிர்த்தல்
நோய் வராமல் தடுக்க நுளம்புக் கடியைத் தவிர்க்கவேண்டும் அதிலும் குறிப்பாகக் காய்ச்சல் உள்ள ஒருவருக்கு நுளம்பு கடிக்கும்போது அவரது உடலில் உள்ள டெங்கு வைரஸ் நுளம்புக்குள் செல்லும் பின்னர் அந்த நுளம்பு மற்றவர்களைக் கடிக்கும்போது நோய் மற்றவர்களுக்கும் தொற்றலாம். இதனைத் தடுக்க காய்ச்சல் வந்தவர்களையும் நுளம்பு வலையினுள் தூங்கவைக்கவேண்டும்.

12. நுளம்புப் பெருக்கத்தைத் தடுத்தல்
எல்லா நுளம்புகளுக்கும் அவை பெரும் தனித்துவமான இடங்கள் உள்ளன, அவ்வாறு டெங்கு நுளம்பு தூய நீர் தேங்கும் இடங்களில் பெருகுகிறது. இதனால் தேங்காய்ச் சிரட்டைகள், கோம்பைகள், பிளாத்திக் கொள்கலன்கள், மூடிகள், டயர்கள் போன்றவற்றை சூழலில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும். வீடுகளின் கூரைகள், நீர் வடிகால்களில் நீர் தேங்காது சுத்திகரிக்க வேண்டும்.

தற்போது மழைக் காலம் ஆரம்பித்துள்ளது. பரவலாக நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதைக் காண்கிறோம். ஆங்காங்கே வெள்ளமும் கூட ஏற்பட்டு மக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை நீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்கள் தொடர்பில் மக்கள் மிக அவதானத்துடன் இருக்கவேண்டும். எமது புறச்சூழலில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். குடும்பங்களிலுள்ள ஒவ்வொருவரும் இவ்விடயத்தில் விழிப்புடன் இருக்கவேண்டும்.

‘வருமுன் காப்பதே சிறந்தது’

 

 

 

SHARE