சிறுகதை: சமுதாய நீதி

167

(எழுத்தாளர் புயல் ஸ்ரீகந்தநேசன்)

‘…அங்கு தமிழர் தொடக்கம் சிங்களவர் வரை என்னில் அவங்கட இச்சையைப் போக்கிக் கொண்டவர்கள். இப்ப நான் அங்க இருந்துதான் தப்பி வாறன்…’

கண்டி புகைவண்டி நிலையத்தில் இருந்து வவுனியாவை நோக்கி புறப்படும் பேரூந்து ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. பாட்டியின் வீட்டுக்குச் சென்ற ரவி மின்னல் வேகத்தில் ஓடிவந்து ஏறிக்கொண்டான்.மலைநாடு என்றதனால் இதமான தென்றல் காற்று வீசிக் கொண்டிருந்தது. போகப்போக பேரூந்தின் வேகம் கூடிக்கொண்டே போனது. ரவிக்கு மலை நாடு எதுவும் புதிதில்லை.

மலைகளின் மேல் இருந்த தேயிலைச் செடிகள் எல்லாம் மழைத்துளிகளைத் தாங்கிய வண்ணம் அங்குமிங்குமாக ஆடிக்கொண்டிருந்தன. தலை யில் முக்காடு போட்டத்துணியுடன் பின்புற முதுகில் கூடையுடன் வயது வேறுபாடு இன்றி பெண்கள் தேயிலைக் கொழுந்துகளைப் பறித்துக் கொண்டிருந்தனர். இடை இடையே கண்ணுக்குத் தெரியும் ஆறுகளில் சலசலவென நீர் பாய்ந்தோடிக் கொண்டிருந்தன. சில இடங்களில் உள்ள மலைகள் மேகக் கூட்டங்கள் போல காட்சியளித்தன. ‘ஆஹா…ஆஹா…’ என்ன காட்சி என்று ரவி களிப்புடன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

தெல்தோட்டைக்கு பேரூந்து வந்ததும் ரவி இயற்கை காட்சிகளில் இருந்து விடுபட்டான். ‘அடேய் ரவி நீ எனக்கு இந்த உண்மையை தொடக்கத்திலையே சொல்லியிருந்தா அவள நல்ல இடத்தில வேலைக்கு சேர்த்திருப்பேன்’ என எப்போதோ ரவியின் தந்தை கூறியது ஞாபகத்திற்கு வந்தது. ரவி யாழ் பல்கலைக்கழகத்தில் படிப்பவன். ஒரு வருடத்திற்கு ஒரு தடவை வவுனியாவில் உள்ள வீட்டிற்கும், கண்டியில் இருக்கும் பாட்டியின் வீட்டிற்கும் செல்வதுண்டு.

தந்தை கூறியதை கேட்ட ரவி திகைத்து நின்றான் ‘என்…ன நடந்தது…’ இவரின் தந்தை மித்திரன் பத்திரிக்கையைத் தூக்கி முன்னுக்குப் போட்டார்.

‘இவளுக்காக பிரார்த்திப்போம்’ என்று கொட்ட எழுத்தில் கிடந்ததைப் பார்த்து திகைத்துப்போனான். மாமனாரி னால் ஜந்து இலட்சம் ரூபாய் பணத்திற்காக விற்கப்பட்ட இவள் தனக்கு நடக்கும் கொடுமையை தட்டிக்கேட்க யாருமில் லையா? என எண்ணி இவளை அனுபவிக்க வந்த முதலாளியை சாராய போத்தலினால் குத்தி மனநோயினால் பாதிக்கப்பட்டு மன நோய் மருத்துவமனையில் இருக்கிறாள். அவளது மாமனாருக்கு கடும் காவல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவளின் நலனுக்காக அனைவரும் பிரார்த்திப்போம்’ என்று பத்திரிகையில் அவளின் படத்துடன் பார்த்து ஒரு வருடம் பூர்த்தியாகியும் நேற்று இன்று நடந்தது போல இருந்தது அவனுக்கு.

பயணம் செய்து கொண்டிருக்கும் போதே அந்தநாள் ஞாபகம் துளிர்விடத் தொடங்குகின்றன. இவன் அமர்ந்திருந்த ஆசனத்தின் பின்பக்கத்தில் முஸ்லிம் பெண்ணொருத்தி அமர்ந்திருந்தாள். வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டதைப் போல அந்த இளமையான வதனம் சோகத்தில் வாடிக்கிடந்தது. அவளின் அருகில் இருந்த சிங்களவன் அவளின் இடுப்பைத் தட்டிக் கொண்டிருந்தான். அவள் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினாள். ரவிக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஏன் இவள் சத்தம் போடாமல் உடலால் மட்டும் வெறுப்பைக்காட்டிக் கொண்டிருக்கின்றாள். ஒரு நகரத்தில் பேரூந்து நின்றதும் ரவிக்கு பக்கத்து ஆசனத்தில் இருந்த சிங்கள பெண்ணொருத்தி இறங்கினாள். பின் ஆசனத்தில் இருந்து விடுபட போராடிக்கொண்டிருந்த அந்த முஸ்லிம் பெண் தவளை பாய்ந்ததைப் போல பாய்ந்து ரவிக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

இவளைப் பற்றி அறிய துடித்துக் கொண்டிருந்த ரவி இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டான். தலையைத் திருப்பாமல் கடைக்கண்ணால் அவளைப் பார்க்கின்றான். அவள் ஏதோ எந்த மனி தரையும் பிடிக்காதவளைப் போல ஏதோ யோசித்த வண்ணம் இருக்கிறாள்.
‘ஓடித்திரிந்து வாழ வேண்டிய இந்த இளம் வயதிலும் வடிவில் எந்த விதத்திலும் குறைவில்லாத இவள் சிவந்த பளபளப்பான கன்னத்தைக் கொண்ட இளங்கிளியைப் போல இருக்கின்றாள். இவளுக்கு உறவினர்கள் யாருமில்லையா? கெட்டவளாக இருப்பாளோ. சீ…சீ… அப்படியிருந்தால் அந்த சிங்களவனின் செயலுக்கு உடந்தையாகப் போயிருப்பாள்’ என ரவியின் சிந்தனையோட்டம் ஓடின. மெல்லமெல்ல கதையைக் கொடுக்க ஆரம்பித்தான். ‘அக்கா எங்க போறீங்க? தனியாகவா வந்தீங்க? யாரும் உங்களுடன் வரவில்லையா…?

மழைக்கு ஒதுங்கிய கோழியைப்போல கூனிப்பிடித்துக் கொண்டு ‘நான் திருகோணமலைக்குப் போறன்’ என படக்கென பதில். அந்தப் பிஞ்சு கிளியின் இனிமையான குரல் ரவியை ஒரு கணம் திகைக்க வைத்தது.
‘உங்கட பெயர் என்ன’ என்று ரவி பல தடவை கேட்ட பிறகுதான் ‘றசீமா…’ என்றாள். பின்னர் ரவி பல கேள்விகளைக் கேட்டும் அவள் மௌனத்தின் மீது காதல் கொண்டவள் போல மௌனமாக இருந்தாள். பருந்தைக் கண்ட கோழிக்குஞ்சைப் போல ஒவ்வொரு நகரமும் வந்து வந்து போக பயந்து பயந்து வந்தாள்.

அநுராதபுர நகரம் வந்ததும் மத்திய பேரூந்து நிலையத்தில் தேநீர் குடிப்பதற்காக பேரூந்து நிறுத்தப்பட்டது. எல்லோரும் தேநீர் அருந்துவதற்காக இறங்கிச் சென்றார்கள். இவள் மட்டும் தனியாக இருந்தாள்.

‘அக்கா வாங்க தேத்தண்ணி குடிச்சிட்டு வருவம்’ என ரவி எவ்வளவு கேட்டும் அவள் வருவதாக அவனுக்குத் தெரியவில்லை. இறுதியில் ரவி தனியாகச் சென்று தேநீர் குடித்து விட்டு அவளுக்காக யூஸ் பக்கட் ஒன்றைவாங்கிக் கொடுத்தான். அவளும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் வாங்கிக் குடித்தாள்.
பதினைந்து நிமிடம் கழிந்ததும் பேரூந்து புறப்பட்டது. ரவியால் இன்னும் பொறுமையாக இருக்க முடியவில்லை. தனக்கே உரிய பாணியில் கதைக்க தொடங்கினான்.

‘என்ன அக்கா ஒரு மாதிரி இருக்கிறீங்க. உங்களுக்கு என்ன நடந்திச்சு. பயப்பிடாம சொல்லுங்க. ஏதாவது பிரச்சினையாக இருந்தா அதை நாலு பேருக்கிட்ட சொன்னாதான் சுமை குறையும். அதை விட்டிட்டு இப்படி சோகமா எல்லாம் அடக்கி வைத்தா ஆகப்போறது ஒன்றுமில்லை. நான் எதுவும் கெட்டவன் இல்ல. பயப்பிடாம சொல்லுங்க. என்னால இயன்ற உதவி செய்கிறேன்.

தமிழர், சிங்களவர், ஆங்கிலேயர், முஸ்லிம்கள் என்று பல ஆடவர்கள் இவளின் வாழ்க்கையைத் தீக்கிரையாக்கினார்கள். ரவி அவ்வாறு கூறியது தான் தெரியும். அதிக மது போதையில் இருப்பவன் வாந்தி எடுத்தவனைப் போல தனது சோகக் கதையைக் கூறத் தொடங்கினாள்.

‘எமுட்டு சொந்த இடம் வவுனியாவில் உள்ள பட்டானிச்சூர். சின்ன வயசிலையே இனச் சண்டையால பெத்தோர் எல்லாம் மவுத்தாப் போனார்கள்;. பேந்து எனக்கு ஒரு வயசு தொடங்கி மாமாதா என்னை வளர்த்தாரு. நா பெரியாளாகி பருவமாகிய தும் என்னை ஒரு ஆம்பளைக்கு திருமணம் கட்டிவைக்கிறண்ணு கொண்டு போய் என்னை அங்கு விட்டுட்டு ஜந்து இலட்சம் காசை வாங்கிக்கிட்டு வந்தாரு. நான் அங்க தனியாக இருக்க பயந்தேன். ஒரு ராத்திரி ‘மொனவத ஓன ஒய ஆதரே’ என்று சத்தம் கேட்டது. அன்று தான் எனக்குத் தெரி யும் சிங்களவன் வீடு என்று. நா தனியாக இருந்த அறைக்கு வந்து என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். வீட்டுக்கார உம்மா லைட்ட நி;பாட்டிட்டா.எனக்கு எங்க ஓடுறதுனே தெரியல. கடைசியில அவனுக்கு இரையாகிப்போனன். எனக்கு அதிகளவு சிங்களமும் தெரியாது. அப்ப எனக்கு பத்தொன்பது வயசு. சரி திருமணம் செய்யப் போகிறவன் தானே என்று மனசுக்குள் நினைச்சு அமைதி கொண்டன்.

ராத்திரி முடிஞ்சி விடிந்தது. தூக் கத்தில் கிடந்த நா எமுட்டு உடுப்ப சரி பண்ணிக்கிட்டு எழுந்தன். அங்கு அவனைக் காணவில்லை. சிறிது நேரத்தில் வெள்ளைப்பிரம்புடன் ஒருவன் தட்டித் தட்டி என்னருகில் வந்தான். அவன்ட குரலை வந்து யார் என்று கண்டுகொண்டன். அப்பதான் தெரியும் இவனைத்தான் கட்டிவைக்க போறாங்க என்று. இராணுவத்தில் இருந்து இவனுக்கு கண்ணில் வெடிபட்டு இரண்டு கண்களும் இல்லாதவனிடமா? பறி கொடுத்தனான்? சரி இவன் தான் என் மனுஷன் என்று யோசித்து அவனு டனும் வாழ நினைத்தேன். மாமாவோட வாழ்க்கையும் எனக்கு நிம்மதியில்லை இங்கையும் நிம்மதியில்லை. என்னை மாமா காசுக்கு வித்திருக்கிறார். அந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரனுக்கு. அவன் தனது காமத்தைப் போக்க என்னை கருவியாகப் பயன்படுத்தியது போக அவன்ட கூட்டாலிமாரையும் கூட்டிக்கொண்டு வந்தான். வீட்டுக்கார உம்மாவும் கொடுமை செய்தாள். பாலில் எதையோ போட்டுத்தந்து எனது தாய்மையை இல்லாமாக்கிப் போட்டாள்.

என்னை எப்படி இஞ்ச இருந்து காப்பாற்றிரது என்று தெரியாம கடைசியில் இரவோடு இரவாக அங்கிருந்து ஓடி திரு கோணமலையில் உள்ள சிநேகிதியின் வீட்டில் தஞ்சம் புகுந்தேன். எப்படியோ எமுட்டு மூன்று வருஷ வாழ்க்கை போயிற்று.

ஒரு பின்னேர நேரத்தில் கடல் கரைக்கு வந்தனான். அங்க வந்த மாமா என்னைக் கண்டுவிட்டார். நான் தப்பித்து ஓட நினைத்தனான். ஆனா அவர் என்னை பிடிச்சு கொண்டு வந்திட்டார். மாமாவும் மாமாவிட மனிசியும் என்னை வேலைக்காரியாக வைத்திருந்தார்கள். என்னை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறன் என்று சொல்லி விமானத்தில் ஏற்றி வாகனத்தில் ஒரு வட்டம் அடிச்சிட்டு கொழும்பில உள்ள விடுதியில் என்னை எட்டு இலட்சத்துக்கு வித்துப்போற்றார். அங்கு தமிழர் தொடக்கம் சிங்களவர் வரை என்னில் அவங்கட இச்சையைப் போக்கிக் கொண்டார்கள். இப்ப நான் அங்க இருந்து தான் தப்பி வாறன். மீண்டும் என்ர சிநேகி தியிடம் போவம்…’ தனது கதையைக் கூறி முடித்தாள்.

ரவியின் கண்களில் கண்ணீர்த்துளிகள் சொறியத் தொடங்கின. இவளின் சோகக் கதையைக் கேட்டதும் அவன் படும் வறுமை எல்லாம் சிறிய பிரச்சினையாகத் தெரிந்தது. இருந்தும் இவனால் இவளை அவனுடைய வீட்டில் வைத்துக் காப்பாற்ற முடியாது. அப்படி காப்பாற்றினாலும் இந்த சமூகம் அவனை ஏற்றுக்கொள்ளாது.

அவளிடம் என்ன கதைப்பதென்று தெரியாமல் ‘நீங்க என்ன படிச்சீங்க…’
‘நா O/L வரை தமிழ் பாடசாலையில் படிச்சன். அதுக்கப்புறம் என்னை படிக்க அனுப்பவில்லை. கண்டியில் புறப்பட்ட பேரூந்து எப்படி வவுனியா வந்தடைந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை. ரவிக்கு இவளைத் தனியாக விட்டுப்போக மனமில்லை. அவளும் அவனை விட்டுப்போவதாக தெரியவில்லை. ரவி யின் வீடு கூப்பிடுத் தூரமளவுதான். திருகோணமலைக்கு மாலையில் பேரூந்து இல்லாததினால் அவளையும் அழைத்துக்கொண்டு நடக்கின்றான். மேகக் கூட்டங்கள் ஏதோ பாதை காட்டுவதைப்போல முன்னே ஓடுகின்றன. இவர்கள் வீடு போய் சேரும் மட்டும் கருமுகில்கள் மழை யைத் தாங்கிக் கொண்டிருப்பதைப் போல தென்படுகின்றன.

இருவரையும் கண்ட ஊர் ‘படிக்க அனுப்புனவன் போயிட்டு ஒரு சோன பிள்ளையை தள்ளிக்கிட்டு வந்திட்டான்’ என தப்புத்தப்பாக கதைத்தனர். இவன் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் நடந்தான்.

வீட்டு வாசலில் நுழைந்ததும் ரவி யின் தாய் ‘இது யாருடா…’ ‘இல்ல அம்மா…எனக்கு படிப்பிச்ச மாஸ்டருடைய தங்கச்சி. பஸ்சுக்கு நேரமாச்சி. அதுதான் இஞ்ச நிப்பாட்டிட்டு விடிய அனுப்புவம் என்று கூட்டி வந்தனான்’.

அதிகாலை நான்கு மணியாகியதும் புத்தகம் வாங்க வைத்திருந்த நூறு ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பிவைத்தான். அவளும் போவதற்கு மனமில்லாமல் அரை மனதுடன் சென்றாள்.

பேரூந்தில் அனைவரும் இறங்கி விட்டார்கள். ரவி திகைத்து பழைய நினைவுகளில் இருந்து மீண்டு ‘அட கடவுளே வவுனியா வந்துவிட்டது’ என்று புறுபுறுத்துக் கொண்டே தனது பையை தூக்கித் தோளில் மாட்டிக்கொண்டு இறங்குகின்றான். ‘இந்த சமுதாயத்திற்கு பயப்பிடாமல் அன்றைக்கு அவளுக்கு எதாவது என்னால் முடிந்த உதவியை செய்திருந்தால், அப்பா சொன்னது போல அவளுக்கு நல்ல இடத்தில் வேலை எடுத்துக் கொடுத்திருக்கலாம். சீ…சீ… வீட்டுக்கு பொய் சொல்லிப்போட்டன்’ என்று தனது மனதுக்குள் நொந்து கொண்டு வீட்டை நோக்கி நடக்கின்றான். இவன் மேல் ஆத்திரம் கொண்டது போல மழையோ பெரும் புயலாக கொட்டுகின்றது.

SHARE