செய்தி சேகரிப்பாளர் ஐ போன் நிறுவன உரிமையாளர் ஆனது எப்படி?

80
mobile-journalism-and-iphone-journalist-augenstein

செல்போன் இதழியல் என்பது இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. அதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு, பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. ‘ஸ்மார்ட்போனில் செய்தி சேகரிப்பா?’ என்று சந்தேகத்துடன் கேட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து, செய்தி சேகரிப்பில் ஸ்மார்ட்போனை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளத் துடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

இந்த நிலைக்கு, நீல் அகன்ஸ்டீன் (Neal Augenstein) போன்றவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில், செய்தி சேகரிக்க செல்போன் மட்டுமே போதும் என துணிச்சலுடன் முதல் அடியை எடுத்து வைத்தவர்களில் அகன்ஸ்டீனும் ஒருவர்.

அமெரிக்காவின் WTOP வானொலி சேவையில் மூத்த நிருபராக பணியாற்றிக்கொண்டிருந்த அகன்ஸ்டின் மற்ற செய்தியாளர்களைப் போலவே பாரம்பரிய கருவிகளைக் கொண்டே ஒலி வடிவ பேட்டிகளை பதிவு செய்து வந்தார். ஒரு லேப்டாப், காம்ரெக்ஸ் துணை சாதனம் மற்றும் இதர உபகரணங்களுடன்தான் அவர் செய்தி சேகரிக்க செல்வது வழக்கம். இத்தனை சாதனங்களையும் சுமந்து செல்வது சோதனையானது என்றாலும், வேறுவழியில்லை. தொலைபேசி மூலமான ஒலிப்பதிவை எல்லாம் விதிவிலக்கான நிகழ்வுகளின் போது மட்டுமே ஏற்றுக்கொள்ளும் நிலை இருந்தது.

இந்த பின்னணியில்தான் அகன்ஸ்டீன் 2010-ம் ஆண்டில், முதன்முறையாக ஐபோனை செய்தி சேகரிப்பிற்காக பயன்படுத்த தீர்மானித்தார். பல அடுக்கு ஒலிப்பதிவை மேற்கொள்ளக்கூடிய செயலி ஒன்றை ஐபோனில் கண்டதும் தனது பணிகள் அனைத்தையும் ஐபோனிலேலே செய்து பார்க்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. உண்மையில் அவர் இது போன்ற ஒரு மென்பொருளுக்காக தான் ஏங்கிக் கொண்டிருந்தார். ஸ்மார்ட்போன் அறிமுகமாவதற்கு முன் இருந்த செல்போன்கள் வானொலி செய்தியாளர்கள் பணிக்கு ஏற்றதாக இருக்கவில்லை. ஆனால் ஐபோன் இதை மாற்றியது.

முதலில் அவர் சோதனை முறையில், தான் ஐபோனில் பேட்டிகளை பதிவு செய்யத் துவங்கினார். ஒலியின் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது எனும் உறுதியுடன் ஒலிப்பதிவை சோதித்துப் பார்த்தார். வழக்கமான பதிவில் 92 சதவீத தரம் இருந்ததோடு, எடிட் செய்த பிறகும் அந்தத் தரம் நிலையாக இருப்பதை உணர்ந்து கொண்டார். வானொலி நிறுவனத்தில் இருந்த யாரும் இந்த மாற்றத்தை கண்டறியவில்லை. ஆக, தனது ஒலிப்பதிவில் எந்தக் குறையும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு, தொடர்ந்து ஐபோனை களத்தில் பயன்படுத்தத் துவங்கினார். அதன் பிறகு தனது லேப்டாப்பின் பாஸ்வேர்டை மறந்துபோகும் அளவிற்கு  ஐபோனுக்கு பழகிவிட்டார்.

துவக்கத்தில் அவர் பாக்கெட்டில் ஒரு ஸ்மார்ட்போனை மட்டுமே வைத்துக்கொண்டு பேட்டிகளுக்கு வருவதை பலரும் வியப்புடன் பார்த்தாலும், அவரது நிகழ்ச்சிகளின் தரம் சிறப்பாக அமைந்திருந்தது. விரைவிலேயே செய்தி சேகரிப்பிற்காக அவர் ஐபோனை மட்டுமே பயன்படுத்துவது அவரை கவனிக்க வைத்தது. அவர் ஐபோன் நிருபராக அறியப்பட்டார். பல பத்திரிகைகள் அவரை பேட்டி கண்டு வெளியிட்டன.

SHARE