2-வது 20 ஓவர் போட்டி: இந்திய அணியில் 2 மாற்றம்?

399

2-வது 20 ஓவர் போட்டி: இந்திய அணியில் 2 மாற்றம்?

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இரவு 7மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

வங்காளதேசத்திடம் முதல் முறையாக 20 ஓவர் போட்டியில் தோற்றதால் இந்திய வீரர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மோசமான பீல்டிங், டி.ஆர்.எஸ். முறையை கையாண்ட விதம் ஆகியவற்றால் இந்தியாவின் வெற்றி பாதிக்கப்பட்டது. இதேபோல பேட்டிங்கும் எதிர்பார்த்த அளவு சிறப்பாக அமையவில்லை.

இதனால் இன்றைய ஆட்டத்துக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிது. ரன்களை அள்ளிக்கொடுத்த வேகப்பந்து வீரர் கலீல் அகமதுக்கு பதிலாக ‌ஷர்துல் தாகூர் இடம் பெறலாம். இதே போல பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் இடத்தில் சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஷிரேயாஸ் அய்யர், சாம்சன், ரோகித்சர்மா

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து இன்றைய ஆட்டத்தில் வென்று தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.

கேப்டன் ரோகித்சர்மா புதிய சாதனையை படைக்கிறார். 100-வது 20 ஓவர் போட்டியில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். சர்வதேச அளவில் 2-வது வீரர் ஆவார். பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் மாலிக் ஒருவர் மட்டுமே 20 ஓவர் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார்.

முதல் போட்டியில் அதிர்ச்சி கொடுத்தது போல் 2-வது ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் வங்காளதேசம் இருக்கிறது.
வெற்றி பெற்ற வங்காளதேச வீரர்கள்

அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முஷ்பிகுர் ரகீம் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் இந்திய அணிக்கு கடும் சவாலாக விளங்குவார்.

‘மகா’ புயல் காரணமாக இந்த போட்டி திட்டமிட்டப்படி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. புயல் காரணமாக அங்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் விவரம்:-

ரோகித்சர்மா (கேப்டன்), தவான், சாம்சன், ஷிரேயாஸ் அய்யர், ரி‌ஷப்பந்த், சிவம் துபே, குர்ணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல், தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர்.

SHARE