உலக நாயகனுக்கு அகவை 65 !!

53

உலக நாயகன் கமல் ஹாசன் இன்று தனது 65 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார்.

தமிழ் சினிமா உலகிலும் இந்திய சினிமா உலகிலும் நடிகர் கமல்ஹாசனின் பங்களிப்பு மிக முக்கியமானது. நடிகர் கமல்ஹாசன் களத்தூர் கண்ணாம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உலகநாயகனாக வளர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி அரசியலிலும் நுழைந்து செயல்பட்டுவருகிறார்.

நடிகர் கமல்ஹாசன் சினிமாவிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் அவருடைய பங்களிப்பு மிக முக்கியமானது.

இன்று கமல்ஹாசன் பிறந்த தினம். அதோடு இன்றுதான் அவருடைய தந்தையாரும், சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞருமான டி.சீனிவாசனின் நினைவு தினம் என்பதால் அன்றைய தினம் கமல்ஹாசன் அவருடைய தந்தையின் சிலையை சொந்த ஊரான பரமக்குடியில் தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் காலை 10.30 மணிக்கு திறந்து வைக்க உள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் நவம்பர் 8 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கமல்ஹாசன் தனது கலை உலக குருவான பாலச்சந்தரின் சிலையை திறக்க உள்ளார். இதில் பாலச்சந்தரின் குடும்பத்தினரும், திரையுலகை சார்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்துகொள்கிறார்கள்.

மேலும் அன்றைய தினம் கமல்ஹாசனின் இயக்கத்தில் வெளியான ‘ஹே ராம்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை சத்யம் தியேட்டரில் மதியம் 3.30 மணிக்கு திரையிடப்பட உள்ளது. அப்போது திரையுலக பிரமுகர்கள் மற்றும் ஊடகத்தினருடன் அந்த திரைப்படம் குறித்து கமல்ஹாசன் கலந்துரையாட உள்ளார்.

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, அடுத்த நாள் 9 ஆம் திகதி கமல்ஹாசனின் 60 ஆண்டுகால கலை பயணத்தை கொண்டாடும் வகையில், இசைஞானி இளையராஜாவின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அப்போது கமல்ஹாசனுடன் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு திரையுலக முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். இந்த இசை விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது.

SHARE