உறுதிமொழி வழங்கிய வேட்பாளர்களை கண்டித்த ஜனாதிபதி

51

இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதாக இரு பிரதான வேட்பாளர்களும் உறுதியளித்தமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

இயற்கை உரத்தை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு செல்லாது இரசாயன உர பயன்பாடு ஆபத்துக்களையே ஏற்படுத்தும் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , உறுதிமொழி வழங்கிய வேட்பாளர்கள் இரசாயன உரத்தை இறக்குமதி செய்யும் போது பாதிக்கப்படும் மக்களுக்கு சிறுநீரகங்களை வழங்க உர கப்பலுக்கு பின்னால் சிறுநீரக கப்பலையும் கொண்டு வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

21ஆம் நூற்றாண்டில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய நீர்ப்பாசன புரட்சியாக கருதப்படும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு பாரிய நீர்த்தேக்கமான களுகங்கை நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்ட நீரினை சுபவேளையில் திறந்துவிடும் மங்கள நீரோட்டம் மற்றும் புதிய அம்பன நகரத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவிக்கையில் ,

தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களுள் பொதுமக்களுக்கு அதிகளவிலான நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் திட்டமாக அமைவது மொரகஹகந்த – களுகங்கை பாரிய பல்நோக்கு அபிவிருத்தி செயற்திட்டமாகும்.

நாட்டின் விவசாய மக்களுக்கு இத்திட்டத்தின் ஊடாக பெருமளவு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதனால் விவசாய பொருளாதாரம் சுபீட்சமடைவதுடன், நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் இதனூடாக பெரும் பங்களிப்பு வழங்கப்படுகின்றது.

இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் இரசாயன பசளைகள் பெற்றுத்தரப்படுமென தெரிவித்துள்ள கருத்துடன் என்னால் உடன்பட முடியாது.  இரசாயன பசளை பயன்பாடானது சிறுநீரக நோய் அதிகளவில் ஏற்படுவதற்கு காரணமாகும் என்பது தற்போது உறுதியாக கண்டறியப்பட்டுள்ளது.

விவசாய பொருளாதாரத்தை பலப்படுத்துதல் மற்றும் விவசாயிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் அரசியல் தலைவர்களின் கடமைகளானபோதிலும் ஆரோக்கியமான மக்கள் சமூகத்தை உருவாக்குவதற்கு தடை ஏற்படும் வகையிலான தீர்மானங்களை மேற்கொள்வதை அவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காக இரசாயன பசளை பயன்பாட்டினை தவிர்த்து சேதனப் பசளை பயன்பாட்டுக் கொள்கைகளை நோக்கி நாடு பயணிக்க வேண்டும் என்றார்.

SHARE