அமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை

54

முள்ளிவாய்க்கால் அவலங்கள் நடைபெற்று 10 ஆண்டுகளாகிய பின்பும் அவை பற்றிய ஆவணங்கள் எமது சமூகத்தினால் குறிப்பிடக்கூடிய அளவுக்கு இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை. இந்தக் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில் நோர்வே தமிழ்ச்சங்கமானது, ஒரு சமூக நிறுவனமாகத் தன்னால் சாத்தியப்படக்கூடிய அளவுக்கு இவற்றை ஆவணப்படுத்தி வெளியிடும் நோக்கோடு முள்ளிவாய்க்கால் அவலம் மற்றும் வன்னியின் இறுதிப்போர்க்காலப் புகைப்படங்களை ஆவணமாக்கும் முயற்சியில் ஈடுபட விரும்பியது.

தமிழ்ச்சங்கத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவின்போது இந்த ஆவணத்தை வெளியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நோக்கின் முதற்கட்டமாக பல இடங்களிலும் போர் தொடர்பான புகைப்படங்களைக் கண்காட்சியில் வைத்துகொண்டிருக்கும் அமரதாஸின் புகைப்படங்களை ஆவணமாக்கலாம் என்ற யோசனை முன்மொழியப்பட்டு ஏற்கப்பட்டது. இதற்கான பொறுப்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர், செயலாளர் ஆகியோரிடம் சங்கத்தினால் ஒப்படைக்கப்பட்டது.

செயலாளர் திரு. அமரதாஸிடம் தொடர்பு கொண்டு உரையாடியதை அடுத்து இதற்கென அமரதாஸினால் வழங்கும் புகைப்படங்கள் புத்தக வடிவில் ஆவணமாக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பானதும், இந்நூலை தயாரிக்கிறது ஒப்பந்தம் அமரதாசுடன் நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் செய்து கொள்ளப்பட்டது.

இரு தரப்பும் உடன்பட்ட அடிப்படையில் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் முன்னெடுப்புகள், செயற்பாடுகளைப் பற்றி தமிழ்ச்சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களுக்கு மாதாந்தம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டங்களின்போது செயலாளரால் தெரிவிக்கப்பட்டு வந்தது. அப்போது இந்தப் புகைப்படங்களின் உரிமம் குறித்த சர்ச்சைகள் இருக்கின்றன என நாம் அறிந்திருக்கவில்லை. அமரதாசும் இதைப்பற்றி எம்மிடம் தெரிவிக்கவில்லை.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் புகைப்பட நூலாக்கப்பணிகளில் வெளியீட்டாளர் சார்பில் சஞ்சயனும் புகைப்படங்கள், உள்ளடக்கம் பற்றிய விடயங்களில் அமரதாசும் இணைந்து பணியாற்றி வந்தனர். நூலின் வெளியீட்டுக்கான முதலீடு / தயாரிப்பு, பதிப்பு, வெளியீடு ஆகியவற்றையும் தமிழ்ச்சங்கம் பொறுப்பேற்றது. இந்த ஒழுங்கில் நூலிற்கான படத்தேர்வுகள் முதற்கொண்டு தயாரிப்புப் பணிகள் அனைத்தும் முடிவுறும் தறுவாயில் நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழா அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் இந்தப் புகைப்பட ஆவண நூலான  Through The Grey Zons மும் திட்டமிடப்பட்டபடி வெளியிடப்படவுள்ளது என்ற அறிவிப்பும் இணைக்கப்பட்டது.

அப்போது எம்முடன் மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொண்ட ஊடகத்துறைப் போராளிகள் (அந்த அமைப்பின் ஒளிக்கலைப்பிரிவு மற்றும் ஊடகத்துறையில் ஈடுபட்டவர்கள்),நோர்வேயில் உள்ள தமிழ் ஊடகவியாளர் ஒருவர் மற்றும் இலங்கை, இந்தியா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, பாரிஸ், சுவிற்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் மேற்படி புகைப்பட நூலில் தம்மாலும் தம்முடன் இணைந்து பணியாற்றிய மாவீர்களாலும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்  பல உள்ளடக்கப்பட்டிருக்கலாம் என்று தாம் கருதுவதாகக் குறிப்பிட்டனர். இது எமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

“இதற்கான ஆதாரம் என்ன? புத்தகம் வெளியிடப்படுவதற்கு முன்பு இந்தப் புத்தகத்தில் உள்ள படங்களைப்பற்றி நீங்கள் எப்படி இவ்வாறு கூற முடியும்?” என்று நாம் அவர்களிடம் விளக்கம் கோரியிருந்தோம். இதற்குப் பதிலளித்த அவர்கள், ஏற்கனவே பல சந்தர்ப்பங்களிலும் தம்மால் எடுக்கப்பட்ட புகைப் படங்களை அமரதாஸ் பயன்படுத்தி வந்திருக்கிறார். அமரதாஸினால் முன்பு நடத்தப்பட்ட  கண்காட்சிகளில்  இதனை நாம் அவதானித்திருக்கின்றோம், எனவே ஒரு முன்னறிவிப்பாக இதைத் தங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். இது தொடர்பாக மேலதிக விவரங்கள் தேவையென்றால் அவற்றை வழங்குவதற்குத் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தனர்.

“இதைப்பற்றி நீங்கள் அமரதாசுடன் தொடர்பு கொண்டு பேசவில்லையா?” என்று கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள், “இந்த விடயத்தைப்பற்றி நாம் ஏற்கனவே பல வழிகளிலும் அமரதாசுடன் பேசியிருக்கிறோம். பொதுவெளியிலும் எழுதியுள்ளோம். மூத்த போராளிகள் பலரும் கூட நேரில் அமரதாஸிடம் இதைப்பற்றிச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். ஆகவே இந்தப் படங்களின் உரிமைப்பிரச்சினையைப்பற்றி அமரதாசுக்கு நன்றாகத் தெரியும். அப்படிச் சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கும்போது அதற்குத் தீர்வு காணாமல் தமிழ்ச்சங்கத்துக்கு அவர் எப்படி தனது பெயரில் படங்களைத் கொடுக்க முடியும்?” என்று பதிலாகக் கேட்டனர்.

இதனையடுத்து நாம் இந்தப் படங்களைக் குறித்த சர்ச்சை பற்றி அமரதாசுடன் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்பொழுதும் அவர் இந்தப் படங்கள் அனைத்தும் தன்னுடையவையே என்று குறிப்பிட்டார். விசமிகளின் வதந்திகளைப் கருத்துகளைக் கவனத்தில் எடுக்க வேண்டாம் என்றும் எங்களை அமைதியாக இருக்குமாறும் அறிவுறுத்தினார்.

ஆனாலும் இந்த நூலை வெளியிடும் நிறுவனமாகிய நாம் போராளிகளின் இந்தக் கோரிக்கையை கவனத்தில் எடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புக்குள்ளானோம்.

போராட்டத்தில் ஈடுபட்டு, போரினால் பாதிக்கப்பட்டு, உடல் உள நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கும் போராளிகளின் குரலையும் அவர்களுடைய நியாயத்தையும் புறக்கணிக்காமல் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதில் எமது செயற்குழு தீர்மானமாக இருந்தது.

புத்தகத்தில் உள்ளடக்கப்படும் படங்களில் போராளிகள் குறிப்பிடப்படுவதைப் போன்று அவர்களுடைய படங்களும் இருக்கும் பட்சத்தில், அது தமிழ்ச்சங்கத்தால் போராளிகளுக்கு இழைக்கப்படும் பெரும் வரலாற்றுத் துரோகமாக அமைந்துவிடும். அந்தத் தவறுக்கு நோர்வேத் தமிழ்ச்சங்கம் இடமளிக்கக் கூடாது என்பதால், நாம் ஐரோப்பாவில் வாழும் ஒளிப்படத்துறைக்கும் வேறு பிரிவுகளுக்கும் பொறுப்பாக இருந்த ஒரு மூத்தபோராளியைச் சந்தித்து உண்மையை அறிய முயன்றோம்.

SHARE