தினப்புயல் பத்திரிகை நிறுவனத்திடம் பொலிசாரினால் ஒரு மணிநேர விசாரணை

447

நேற்றைய தினம் (22.11.2019) தினப்புயல் அலுவலகத்திற்கு வருகை தந்த இரு பொலிசார், தமக்கு தினப்புயல் பத்திரிகையில் பிரசுரமாகும் செய்திகள் தொடர்பாக இனந்தெரியாத நபர் அல்லது நபர்களால் வழங்கப்பட்ட முறைப்பாடு ஒன்றுக்கமைய எம்மிடம் விசாரணை செய்யவேண்டியுள்ளதாகத் தெரிவித்து, 01 மணிநேரம் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பாக எமது பணிப்பாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்துடன், எமது அலுவலகத்தில் கடமையாற்றும் ஊடகவியலாளர்களின் விபரங்களைத் தருமாறு கோர, எமது பணிப்பாளர் இனந்தெரியாத நபர்களின் முறைப்பாட்டுக்கமைய, எமது அலுவலகத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் சார்ந்த எவரதும் தகவல்களையும் எம்மால் வழங்க முடியாது என்றும், குறித்த முறைப்பாடு யாரால் வழங்கப்பட்டது என்கிற விடயம் தொடர்பில் இரு பொலிசாரிடமும் வினவ, அவர்கள் அதனைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. தினப்புயல் பத்திரிகையானது இதுவரை காலமும் / இனிவரும் காலங்களிலும் தமிழ் மக்கள் சார்பாக செயற்படும் என்பதனையும் நாம் தெரிவித்துக்கொள்கின்றோம். அதற்காக சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல.

மக்களுக்குத் தெரியாத பொய்யான சம்பவங்களை அல்லது தகவல்களை அல்லது நடக்காத விடயங்களை நாம் எழுதவில்லை. அனைத்து விடயங்களும் இந்நாட்டில் இடம்பெற்றவை / தொடர்ந்தும் இடம்பெற்று வருபவை. இதனை யாரும் மறுக்க முடியாது.

தினப்புயல் பத்திரிகை கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வரும் நிறுவனம். கடந்த காலங்களில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத்தாக்குதல் ஒன்றுக்கும் எமது நிறுவனம் இலக்காகியமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், முதன் முதலாக தமிழ் ஊடகம் ஒன்றிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களது பிரச்சினைகளை அல்லது அவர்கள் சந்தித்த துன்பங்களை, துரோகங்களை எழுதுபவர்களின் குரல்வளையை நசுக்கிவிடவேண்டும் என நினைக்கின்ற விசமிகளால் தான் இவ்வாறான முறைப்பாட்டு நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(நிர்வாகம்)

 

SHARE