புதிய மாற்று அணியை கொண்ட கூட்டு விரைவில் உரு­வாகும் – சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

44

முன்னாள் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தலை­மையில் புதிய மாற்று அணியை கொண்ட கூட்டு விரைவில் உரு­வாகும் என்று தெரி­வித்த ஈ.பி.ஆர்.எல்.எப். கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், இரண்­ட­ரைக்­கட்­சி­களை கொண்­டதே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு எனவும் விமர்­சித்­துள்ளார்.

வவு­னி­யாவில் உள்ள தனியார் விடு­தி­யொன்றில் ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் மத்­தி­ய­குழு நேற்று கூடி­யது. அதன் நிறைவில் இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரி­வித்த அவர்,

ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு பின்­ன­ரான அர­சியல் நிலை­வ­ரங்கள், கள நிலை­வ­ரங்கள் பற்றி வடக்கு–கிழக்கு மாகா­ணங்­களின் பல மாவட்­டங்­களிலிருந்து வந்த எங்­க­ளது மத்­தி­ய­குழு உறுப்­பி­னர்கள் தங்­க­ளு­டைய கருத்­துக்­களை பரி­மா­றி­யி­ருந்­தனர். இதன்­போது எதிர்­வரும் மாகா­ண­சபை மற்றும் பாரா­ளு­மன்ற தேர்­தலில் முகம்­கொ­டுப்­ப­தற்கு எவ்­வா­றான ஏற்­பா­டு­களை செய்­வது என்­பது தொடர்­பா­கவும் நாங்கள் பல கருத்­துப்­ப­ரி­மாற்­றங்­களை செய்­தி­ருந்தோம்.

இத­னூ­டாக தமி­ழர்­க­ளுக்கு மாற்­றுத்­த­லை­மை­யொன்று தேவை என்­ப­தனை அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்கள். அந்­த­வ­கையில் மாற்று அணிக்­கான செயற்­பாட்டை நாங்கள் முன்­னின்று செயற்­ப­டுத்த வேண்டும் எனவும் கூறப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு பல­வீ­ன­மான நிலையில் அதிலும் இரண்­ட­ரைக்­கட்­சி­க­ளுடன் அங்கம் வகிக்கும் நிலையில் உள்­ளது. ஆகவே அவர்­க­ளு­டைய தவ­றுகள் அவர்­க­ளுக்கு தமிழ் மக்கள் கொடுத்த ஆணை­களை கைவிட்டு செயற்­பட்ட விதங்கள், அர­சாங்­கத்­தினை பாது­காப்­பதே அவர்­க­ளது நோக்­க­மாக இருந்த நிலை­வ­ரங்கள், இவை எல்­லா­வற்­றையும் நாங்கள் கவ­னத்தில் எடுத்து மாற்று தலைமை அவ­சியம் என்­பது எங்கள் எல்­லோ­ராலும் உண­ரப்­பட்­டுள்­ளது.

நாங்கள் ஒட்­டு­மொத்­த­மான தமிழ் கட்­சி­களின் ஐக்­கி­யத்­திற்கு எதி­ரா­ன­வர்கள் அல்ல. திம்பு பேச்­சு­வார்த்­தையிலிருந்து தமிழ் மக்கள் தமிழ் கட்­சிகள் ஐக்­கி­யப்­ப­ட­வேண்டும் என்­பதில் நாங்கள் மிகவும் உறு­தி­யாக இருந்­தி­ருக்­கின்றோம். அதற்­காக முன்­னின்று பணி­யாற்­றி­யி­ருக்­கின்றோம். தற்­போதும் அந்த விட­யங்­க­ளுக்கு நாங்கள் எதி­ரா­ன­வர்கள் கிடை­யாது. தமிழ் மக்­களின் உரி­மைகள் வெல்­லப்­ப­டு­வ­தற்கு ஓர­ணியில் நிற்­க­வேண்டும் என்­பதில் எமக்கு மாற்­றுக்­க­ருத்­துக்கள் இல்லை.

ஆனால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு என்­பது அதற்கு உகந்த ஸ்தாப­ன­மாக தன்னை மாற்­றிக்­கொள்­ள­வில்லை. அதுவே பர­வ­லான குற்­றச்­சாட்­டா­கவும் உள்­ளது. 15 வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட அந்த ஸ்தாப­னத்­திற்­கான யாப்போ அதற்­கான வடி­வமோ அதற்­கான உயர்­மட்ட குழுக்­களோ இல்­லாமல் ஓரி­ருவர் மாத்­திரம் முடி­வெ­டுக்கும் அமைப்­பா­கவும் தேர்­த­லுக்கு மாத்­திரம் வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஐக்­கி­யத்­தி­னைப்­பற்றி பேசு­கின்ற நிலை­மைதான் தோன்­றி­யி­ருக்­கின்­றது.

ஆகவே இவற்­றினை எல்லாம் கவ­னத்தில் எடுத்து ஒரு மாற்­றுத்­த­லைமை தேவை என்­ப­தனை இன்­றைய எமது மத்­திய குழு கூட்­டத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அது தொடர்­பான நட­வ­டிக்­கை­களை எமது கட்சி முன்­னெ­டுத்துச் செல்லும்.

இந்­த­வ­கையில் வடக்­கிலும் கிழக்­கிலும் உள்ள அர­சியல் நிலை­மைகள் என்­பது வித்­தி­யா­சப்­ப­டு­கின்­றன. கிழக்­கிலே ஏனைய தேசிய இனங்­களால் அவர்­க­ளுடன் சேர்ந்து வாழ்­வதால் ஏற்­ப­டக்­கூ­டிய பிரச்­சினை­க­ளுக்கு அவர்கள் முகம் கொடுத்து வரு­கின்­றனர். கடந்த காலங்­களில் மிக மோச­மாக தமிழர் தரப்பு பாதிக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே கிழக்கு மாகா­ணத்தில் மாகா­ண­ச­பையில் தமிழ் தலை­மைத்­துவம் தேவை என்­ப­திலும் கட்சி மிக உறு­தி­யாக உள்­ளது.

ஆகவே தேர்தல் வரு­கின்­ற­போது அதற்­கேற்­ற­வ­கையில் எமது வியூ­கங்கள் அமையும். தமி­ழர்­க­ளது நலன்கள் பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது. தமி­ழர்­களின் நலன் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். அந்த அடிப்­ப­டையிலிருந்து எமது முடி­வுகள் எட்­டப்­ப­ட­வேண்டும் என்ற கருத்தும் சொல்­லப்­பட்­டுள்­ளது. ஆகவே எமது முடி­வுகள் அனைத்தும் வடக்­கிலோ கிழக்­கிலோ தமிழ் மக்­களின் அர­சியல் இருப்பு பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அனைத்­தையும் மைய­மாக வைத்­த­தாக இருக்கும்.

இந்நிலையில் கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் தலை­மைத்­துவம் மாகா­ண­ச­பையில் தேவை என்­ப­தற்­காக தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்புடன் செல்­வ­தற்­கான வாய்ப்­புக்கள் ஏற்­ப­ட­லாமா என ஊட­க­வி­ய­லாளர் கேட்­ட­போது,

அந்த நேரத்தில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு என்­ன­வி­த­மான முடி­வு­களை எடுக்­கப்­போ­கின்­றது என்­ப­தில்தான் இது தங்­கி­யி­ருக்­கின்­றது. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு வாய­ளவில் தற்­போது ஐக்­கியம் பற்றி பேசு­கின்­றது. சுமந்­திரன் சில நாட்­க­ளுக்கு முன்­பாக ஐக்­கி­யத்­தி­னைப்­பற்றி பேசி­யி­ருந்தார். ஆனால் ஐக்­கி­யத்­தினை உரு­வாக்­கு­வ­தற்கு ஏது­வான நிலை கூட்­ட­மைப்­புக்குள் இல்லை. அவ்­வா­றான சூழ்­நி­லையில் ஐக்­கியம் பற்றி பேசப்­ப­டு­கின்­ற­போது அதற்கு தகுந்­த­தாக அந்த அமைப்பு மாற்­றப்­ப­ட­வேண்டும் என்­பதே உண்மை. ஆகவே அவை அனைத்தும் மாற்­றப்­பட்டு வரு­கின்­ற­போது நிச்­ச­ய­மாக அத­னைப்­பற்றி ஆய்வு செய்­வ­தற்கு நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம் என்றார்.

இந்­நி­லையில் உங்­க­ளது அர­சியல் எவ்­வாறு அமை­யப்­போ­கின்­றது என கேட்­ட­போது?

தமிழ் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சினை ஒரு­புறம் அபி­வி­ருத்தி மறு­புறம் என்­ப­தாக உள்­ளது. தேசிய இனப்­பி­ரச்­சினை தொடர்­பாக தமிழ் தேசிய எல்­லைக்குள் உள்ள அனைத்து கட்­சி­க­ளுக்கும் ஒரு­மித்த கருத்து இருக்­கின்­றது. அவற்றை அடை­வ­தற்­கான வியூ­கங்­களை அமைப்­பதும் வேலைத்­திட்­டங்­களை உரு­வாக்­கு­வதும் அவற்றை செயல்­மு­றைப்­ப­டுத்­து­வதும் நாங்கள் கூட்­டாக எடுக்க வேண்­டிய விட­யங்­க­ளாகும். நிச்­ச­ய­மாக அந்த முடி­வுகள் கூட்­டாக எடுக்­கப்­படும்.

அபி­வி­ருத்தி என்று வரு­கின்­ற­போது வடக்கு மாகாண அபி­வி­ருத்தி, கிழக்கு மாகாண அபி­வி­ருத்தி என இருக்­கின்­றது. கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் மக்கள் புறந்­தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அது­போல வடக்­கிலும் போரால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­களுக்கும் அபி­வி­ருத்தி கிடைக்­காமல் உள்­ளது.

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ­வுடன் கலந்­து­ரை­யா­டு­வீர்­களா என கேட்­ட­போது?

கோத்­த­பாய ராஜ­பக் ஷ என்­ப­வர்தான் இந்த நாட்டின் ஜனா­தி­பதி. ஆகவே அந்த ஜனா­தி­ப­தி­யுடன் பேசக்­கூ­டாது என யாரும் சொன்னால் அது சரியான கருத்தாக இருக்க முடியாது. அது அபிவிருத்தியாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி. அவர் இந்தியாவுக்கு சென்றபோது மோடி இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவரிடம்தான் சொல்லியிருக்கின்றார். அவர் தீர்ப்பாரா இல்லையா என்பது வேறு பிரச்சினை. ஆகவே அவருடன் பேச வேண்டிய தேவை சகலருக்கும் இருக்கின்றது. நாங்கள் இலங்கை பிரஜை என்ற அடிப்படையில் தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துபவர்கள் என்ற வகையில் அவருடன் பேச வேண்டி ஏற்பட்டால் பேசத்தான் வேண்டும். பேசுவது தவறு என்றும் கருதவில்லை.

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு கூட்டு உருவாகுமா? அதனை ஏற்பீர்களா?

நிச்சயமாக அவ்வாறான கூட்டு மிக விரைவில் உருவாகும் எனவும் தெரிவித்தார்.

SHARE