தொடர் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 138 பேர் பாதிப்பு

53

தொடர் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிதேசத்தில் 53 குடும்பங்களை சேர்ந்த 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

இன்று பகல் கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் கிராம சேவையாளர் பிரிவில் 47 குடும்பங்களை சேர்ந்த 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரமந்தனாறு கிராம சேவகர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் பாதிக்கப்பட்டள்ளதாக குறித்த புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

இதுவரை பாரிய அளவிலான பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும், இடை தங்கல் முகாம்கள் அமைக்கப்படவில்லை எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. பாதிப்புக்கள் தொடர்பான விபரங்கள் தொடர்ந்தும் திரட்டப்பட்டு வருவதாகவும், 24 மணிநேர கண்காணிப்பு மற்றும் அவதானிப்புக்களில் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் ஈடுபட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

பாதிப்பிற்குள்ளான குடும்பங்கள் தொடர்பான விபரங்கள் தொடர்ந்தும் திரட்டப்பட்டு வரும் நிலையில், அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் விரைந்து மக்களிற்கான தேவைகள் மற்றம் பாதுகாப்புக்களை மேற்கொள்வதற்கு கிளிநாச்சி மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தயாராக உள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

SHARE