மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி எவ்வாறு செயற்படுகிறார் என்பதை அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறோம் – சரத் பொன்சேகா

54

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த 2007 ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினால், சிலவேளை போர்ச் சூழல் ஏற்பட்டால் அமெரிக்காவுக்கு தளபாட ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியேற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அமெரிக்கா- ஈரானுக்கிடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட  சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி எவ்வாறு செயற்படுகிறார் என்பதை நாம் தொடர்ந்தும் அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ரஞ்சனின் குரல் பதிவுகள் தொடர்பாக தற்போது பாரிய சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. ஆனால், இவற்றை கணக்கில் எடுக்க வேண்டியத் தேவையில்லை. அது ஒன்றும் தேசியப் பிரச்சினைக் கிடையாது.

இதனால், பிரச்சினைகளுக்குத் தீர்வுக் காணவும் முடியாது. எனினும், இந்த குரல் பதிவுகளின் ஊடாக, துமிந்த சில்வாவை விடுதலை செய்யவே சிலர் முயற்சித்து வருகிறார்கள்.

துமிந்த சில்வாவுக்கு ஐவர் அடங்கிய நீதிபதிகள் கொண்ட குழாத்தினால்தான் மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனவே, இவரை விடுதலை செய்யும் முயற்சி செல்லாது என்றே தெரிகிறது.

இன்று உலகலாவிய ரீதியாக பாரிய பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றன. உலகலாவிய ரீதியாக போர் ஆரம்பமானால், அதில் நிச்சயமாக இலங்கையால் பங்குக்கொள்ள வேண்டியத் தேவைக் கிடையாது. அதற்கான பலமும் எம்மிடம் இல்லை.

ஆனால், இந்தப் போரினால் இலங்கையின் பொருளாதாரம் வெகுவாக பாதிப்படையும் என்பது மட்டும் உண்மையாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செய்துக்கொண்ட ஒப்பந்தத்திற்கு இணங்க, அமெரிக்காவுக்கு தளபாடங்கள் தொடர்பான தேவைகள் ஏற்படின், அவர்கள் கோரினால் நாம் வழங்க வேண்டியேற்படும்.

நாம் இவ்வாறான உடன்படிக்கைகளை எந்தவொரு நாட்டுடனும் மேற்கொள்ளவில்லை. 2007 ஆம் ஆண்டு தான் இப்போதைய ஜனாதிபதி அந்த ஒப்பந்தத்தை செய்துக் கொண்டார்.

இதுதொடர்பாக அவர் அன்று அமைச்சரவையின் அனுமதியைக் கூட பெறவில்லை. 2017 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இதிலிருந்து விடுபடுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இதற்கு இரண்டு நாடுகளும் இணங்க வேண்டும். இதற்கு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நபரே பொறுப்பேற்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

SHARE