இந்தியா மீது சிங்கள-பௌத்தர்களுக்கு இருக்கும் அச்சமும் அதன் அடிப்படையிலான இந்திய எதிர்ப்புவாதமும்

41
 ‘வரலாற்றில் இருந்தே அறிவியல் தொடங்குகிறது. அது தத்துவத்தில் முழுமை அடைகிறது’ என்று. இவ்வாறு எல்லாவற்றையும் வரலாற்றுக் கண்கொண்டு பார்ப்பதே அவருடைய தனிச்சிறப்பாகும். இதனாலேயே அவர் அவருடைய சமகாலத்து தமிழ் அறிஞர்கள் பலரிடமிருந்தும் துலக்கமான விதங்களில் வேறுபடுகிறார். இலங்கைத் தீவின் யாப்பு உருவாக்கப் போக்குகளையும் அவர் வரலாற்றுக் கண்கொண்டே நோக்குகிறார். யாப்புருவாக்கங்களின் போதெல்லாம் இனப்பிரச்சினை எப்படி யாப்பில் பிரதிபலித்தது என்பதையும் உருவாக்கப்பட்ட யாப்புக்கள் எப்படி இனப்பிரச்சினையைப் பெருப்பித்தன என்பதையும் அவர் ஆராய்கிறார். அதன் மூலம் இலங்கைத்தீவின் யாப்பு வரலாறு எனப்படுவதே ஒரு விதத்தில் இன ஒடுக்குமுறையின் வரலாறும்தான் என்ற முடிவை நோக்கி வாசகரை நகர்த்துகிறார்.

டொனமூர் அரசியல் சாசனம் முதல் சிறிசேன அரசியல் சாசனம் வரை என்ற அவருடைய புதிய நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. இலங்கைத்தீவு ஒரு புதிய யாப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசியல் சூழலில் இலங்கைத் தீவின் யாப்பு உருவாக்க வரலாற்றை புவிசார் அரசியல் பின்னணியில் வைத்து இந்நூல் ஆராய்கிறது.

‘அரசியல் யாப்பு வளர்ச்சி (Constitutional Development) என்பது யாப்பில் எழுதப்பட்டுள்ள வரிகளை வெறுமனே புரிந்துகொள்வது பற்றிய ஒரு மொழிப் பயிற்சியல்ல. அந்த யாப்பும் யாப்புடன் கூடிய அக்காலகட்ட நடைமுறைகளும் இணைந்த ஓர் அரசியல் வரலாற்றுப் போக்கே யாப்பு வளர்ச்சி என்பதாகும்….

……ஆயிரக்கணக்கான ஆண்டுகால இலங்கையின் புவிசார் அரசியல் வரலாற்றிற்கும், சர்வதேச அரசியலுக்கும் கருத்தரித்த குழந்தைகளாய் இலங்கையின் அரசியல் யாப்புகள் உருவாகின்றன. அனைத்து யாப்புக்களும் மேற்படி புவிசார் அரசியலுடனும் சர்வதேச அரசியலுடனும் இரண்டறக் கலந்து காணப்படுவதால் எவ்வாறு புவிசார் அரசியலினதும், சர்வதேச அரசியலினதும் சங்கமமாய் இந்த யாப்புக்கள் உருவாகின்றன என்பதை அதற்குரிய அடிப்படையில் வைத்து இச்சிறுநூல் ஆராய்கிறது’ என்று மு.திருநாவுக்கரசு குறிப்பிடுகிறார்.

இனப்பிரச்சினையை அவர் முதன்மையாக ஒரு புவிசார் அரசியல் பிரச்சினையாகவே பார்க்கிறார். இந்திய உப கண்டத்தில் பெரிய தமிழகத்திற்குக் கீழே அமைந்திருக்கும் சிறிய ஈழத்தமிழர்கள் அவர்களுடைய புவிசார் அமைவிடம் காரணமாக எவ்வாறெல்லாம் பலியிடப்படுகிறார்கள் என்பதை அவர் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக எழுதியும் கூறியும் வருகிறார். இனப்பிரச்சினையின் அடிப்படைகள் என்ற அவருடைய நூலின் ஆய்வு முடிவும் அதுதான்.

‘இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தையே சிங்கள மக்கள், தமிழ் மக்கள் மீது காலம் காலமாகப் புரிகின்றனர். தமிழ் மக்களை மொழி, பண்பாடு, இந்துமதம் சார்ந்து இந்தியாவுடன் இணைத்துப் பார்ப்பதினாலும், இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை பரவவிடாமல் தடுப்பதற்கு தமிழினத்தை அழிப்பது அவசியம் என்ற மேற்படி புவிசார் அரசியல் பார்வையின் விளைவாகவும் தமிழ் மக்கள் மீதான தமது இன அழிப்பு அரசியலை ஈவிரக்கம் இன்றியும், சமரசம் இன்றியும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு வரலாற்று ரீதியாக இந்தியா மீது சிங்கள-பௌத்தர்களுக்கு இருக்கும் அச்சமும் அதன் அடிப்படையிலான இந்திய எதிர்ப்புவாதமும், தமிழருக்கு எதிரான இன அழிப்பு அரசியலாய் வடிவம் பெற்ற நிலையில் ஈழத் தமிழ் மக்கள் புவிசார் அரசியலின் கைதிகளாய் அதற்குள் சிக்குண்டு அல்லல்படுகின்றனர்’ என்று அவர் கூறுகிறார்.

‘சிங்கள-பௌத்தர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள வரலாற்றுப் பகைமையை முதலீடாக்கி அதன் மூலம் இலங்கையின் நவீன வரலாற்றில் சிங்கள-பௌத்தர்களுக்கும், இந்தியாவிற்கும் இடையான பகைமையைத் தூண்டி வளர்த்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான தமது கேந்திர நலன்களை அடைவதில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர். இந்த அரசியற் சதியில் சிங்களவரை தம்பக்கம் வென்றெடுப்பதற்காக தமிழரைப் பலியிடும் அரசியல் யாப்பு மரபை பிரித்தானியர் இலங்கையில் தோற்றுவித்தனர். பிரித்தானியர் சட்டபூர்வமாகத் தோற்றுவித்த அந்த அழிவுப் பாதையின் தொடர் வளர்ச்சியே இற்றை வரையான அரசியல் யாப்புக்களாகும்’ என்று அவர் இலங்கைத் தீவின் யாப்பு மரபை அதன் புவிசார் அரசியல் பின்னணிகளுக்கூடாக ஆராய்கிறார்.

மு.திருநாவுக்கரசுவின் ஆராய்ச்சி முடிவுகள் மரபுவழிசாராதவை. தீர்க்கதரிசனமானவை. மரபுசார் புலமையாளர்களைப் போல அவர் ஒரு பற்றற்ற சாட்சியாக நின்றுகொண்டு வரலாற்று உண்மைகளைக் கூறுவதில்லை. மாஓ சேதுங் கூறியது போல பலியிடப்படும் தமது மக்களுக்காக சிந்திக்கும் ஓர் அறிஞர் அவர். இது விடயத்தில் அவர் மரபுசார் புலமை ஒழுக்கங்களோடு மட்டும் முரண்படவில்லை. மரபுசார் புலமை ஒழுக்கங்களை இறுக்கிக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் உயர் கல்வி நிறுவனங்களோடும் முரண்பட்டார். இனப்பிரச்சினையை அதன் புவிசார் அரசியல் யதார்த்தத்திற்கூடாக புரிந்துகொள்ள மறுத்த தமிழ் தலைமைகளோடும் அவர் இணங்கிப் போகவில்லை. ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் தான் நேசித்த மக்களுக்காகவும் தனது ஆய்வு முடிவுகளுக்காகவும் ஆகக் கூடியபட்ச அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் செய்த ஓர் அறிஞராக அவர் காணப்படுகின்றார்.

ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் மிக அரிதாகவே புலமைச் செயற்பாட்டாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். தமது பதவிகளுக்காகவும் நிலையான நலன்களுக்காகவும் புலமைப்பரிசில்களுக்காகவும் உயிரச்சம் காரணமாகவும் அதிகமதிகம் சமரசம் செய்துகொள்ளும் ஒரு புலமைப்பரப்பில் மு.திருநாவுக்கரசுவைப் போன்ற அறிஞர்கள் அதிலும் செயற்பாட்டாளர்கள் மிக அரிதாகவே தோன்றுகிறார்கள். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்குரிய புலமைப்பரப்பில் அதிகம் நூல்களை எழுதிய ஒருவராகவும் அதிகம் சோதிக்கப்பட்ட ஒருவராகவும் அவர் கரணப்படுகிறார். அவர் என்றைக்குமே எந்தவோர் அமைப்பினுடையதும் ‘ஓர்கானிக் இன்ரலெக்சுவலாக’ (organic intellectual) இருந்ததில்லை. மாறாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் ‘ஒர்கானிக் இன்ரலெக்சுவலாகவே’ இருந்து வருகிறார்.

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகளாகிவிட்டன. ஆயுதப் போராட்டம் ஏன் தோற்கடிக்கப்பட்டது என்பது தொடர்பில் தமிழ் ஆய்வுப் பரப்பில் இதுவரையிலும் எத்தனை நூல்கள் வெளிவந்திருக்கின்றன? குறிப்பாக இப்போது நிலவும் யாப்பு உருவாக்கச் சூழலில் இலங்கைத் தீவின் யாப்பு வரலாற்றை தமிழ் மக்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்து ஆராயத்தக்க ஆய்வாளர்கள் எத்தனைபேர் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? அவ்வாறான ஆய்வு முடிவுகள் எத்தனை இதுவரையிலும் வெளிவந்திருக்கின்றன?

இது விடயத்தில் மு.திருநாவுக்கரசு பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய ‘ஜே.ஆரால் ஜே.ஆருக்கு ஜே.யாருக்காக’ என்ற ஆய்வு நூல் முக்கியமானது. அதன் தொடர்ச்சியே இந்நூலாகும். முன்னைய நூல் ஜெயவர்த்தனாவின் யாப்பை ஆழமாக ஆராய்கிறது. இந்நூலானது ஜெயவர்த்னா உட்பட ஏனைய எல்லாச் சிங்களத் தலைவர்களும் உருவாக்கிய எல்லா யாப்புக்களையும் அவற்றின் புவிசார் அரசியல் பின்னணிகளுக்குள் வைத்து ஆராய்கிறது.

இந்நூலில் ஓரிடத்தில் மு.திருநாவுக்கரசு பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘ஈழத் தமிழரின் பாதுகாப்பிலேயே இந்தியாவின் பாதுகாப்பும் அடங்கியுள்ளது என்கிற உண்மையை இந்தியா உணரும் முன்பே ஈழத்தமிழர் இலங்கைத் தீவிலிருந்து முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு விடுவார்களோ என்கிற அச்சமும் மனதில் எழுகிறது’ என்று.

ஆயின், இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு இக்குரூரமான புவிசார் அரசியல் யதார்த்தத்தை எப்படி விளங்க வைப்பது? அல்லது அவர்கள் அதை விளங்கி வைத்திருந்தாலும் கூட அரசுக்கும் அரசுக்குமிடையிலான கட்டமைக்கப்பட்ட உறவுகளுக்கூடாகவே ஈழத்தமிழர்கள் தொடர்பான தமது கொள்கை முடிவுகளை வகுக்கிறார்களா? அல்லது தமிழ்நாட்டிலுள்ள சில தமிழின உணர்வாளர்கள் சுட்டிக்காட்டுவது போல இந்திய கொள்கை வகுப்புத்துறைக்குள் கேரள மாநிலத்தவர்களின் செல்வாக்கு அதிகம் இருப்பதாகக் கூறப்படுவதும் ஒரு காரணமா?

காரணம் எதுவாயும் இருக்கலாம். ஆனால் இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை எனப்படுவது கொழும்பில் உள்ள அரசாங்கத்தைக் கையாள்வது என்பதாகவே இருந்து வந்துள்ளது. இப்படியாக அரசுடைய தரப்பாகிய சிங்கள மக்களை கையாளும் ஒரு வெளியுறவுக் கொள்கை காரணமாக அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் தொடர்ந்தும் பலியிடப்பட்டு வருகிறார்கள் என்று மு.திருநாவுக்கரசு ஏற்கனவே எழுதியுள்ளார். கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தைக் கையாள்வதற்காக அவ்வப்போது இந்தியா ஈழத்தமிழர்களை ஒரு கருவியாக கையாண்டு வந்துள்ளது. இந்தியா மட்டுமா கையாண்டது? அமெரிக்காவும்தான் கையாண்டது. ஐரோப்பாவும்தான் கையாண்டது. சீனாவும் தான் கையாண்டது. அதுமட்டுமல்ல கேந்திர முக்கியத்துவம்மிக்க தமது சொந்த மக்களின் வாக்குகளையே தமிழ் தலைவர்களும்தான் துஸ்பிரயோகம் செய்திருக்கிறார்கள்.

இது மிகக் கொடுமையான ஒரு நிலை. இந்தியாவின் பின்னணிக்குள் வைத்து ஈழத்தமிழர்களைப் பார்ப்பதனால்தான் இலங்கை அரசாங்கம் உட்பட உலகில் உள்ள எல்லாத் தரப்புக்களுமே ஈழத்தமிழர்களைப் பலியிடுகின்றன என்றால் இது விடயத்தில் இந்தியா ஈழத்தமிழர்களை எப்படிக் கையாள வேண்டும்?

ஆனால் கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியா ஈழத்தமிழர்களை எவ்வாறு கையாண்டு வருகிறது? இது விடயத்தில் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தமது கொள்கைத் தீர்மானங்களை எப்பொழுதாவது மறுவாசிப்புச் செய்திருக்கிறார்களா?

யாழ்ப்பாணத்தில் இந்தியாவுக்கு ஒரு துணைத் தூதரகம் உண்டு. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் துணைத்தூதுவர் யாழ்ப்பாணத்தில் ஏறக்குறைய ஒரு சமூகப் பெரியாராக வலம் வருகிறார். அவர் கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். காந்தி ஜெயந்தியில் கலந்து கொள்கிறார். ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நூல் வெளியீட்டு வைபவங்களில் கலந்து கொள்கிறார். இதுபோன்ற பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். ஒரு நாட்டின் துணைத்தூதுவர் உள்ளூர் மக்கள் மத்தியில் இந்தளவிற்குப் பிரமுகராக காணப்படுவது என்பது இலங்கைத்தீவில் வேறெந்த தூதரக அதிகாரிக்கும் கிடைத்திராத ஓர் அந்தஸ்து எனலாம்.

அது மட்டுமல்ல இந்தியா வீடிழந்த மக்களுக்காக ஆயிரக்கணக்கான வீடுகளைத் தமிழ் பகுதிகளில் கட்டி வருகிறது. ஆனால் இந்த வீடுகள் எவற்றிலாவது இந்தியத் தலைவர்களின் ஒளிப்படங்கள் தொங்கவிடப்பட்டுள்ளனவா? சில தசாப்தங்களுக்கு முன் படித்த ஈழத்தமிழர்களின் வீடுகளில் காந்தி, நேரு, நேதாஜி போன்றோரின் ஒளிப்படங்களை அதிகமாகக் காணமுடியும் குறிப்பாக சலூன்கள், சனசமூக நிலையங்கள் போன்றவற்றில் காந்தியின் படத்தை அதிகமாகக் காணலாம். ஆன்மீக நாட்டமுடைய படித்த நடுத்தர வர்க்கத்தினரின் வீடுகளில் ராமகிருஸ்ணர், விவேகானந்தர், சாரதாதேவியார், ரமணர் ஆகியோரின் படங்களை அதிகமாகக் காணலாம். ஆனால் இந்திய அமைதிப்படையின் வருகைக்குப் பின் ஏற்பட்ட கொடுமையான அனுபவங்களின் பின்னணியில் மேற்படி படங்கள் யாவும் ஈழத்தமிழர்களுடைய வீட்டுச் சுவர்களில் இருந்து அகற்றப்பட்டுவிட்டன. இதை முன்னாள் இந்திய மத்திய அமைச்சராகிய மணிசங்கர ஐயரிடம் இக்கட்டுரை ஆசிரியர் கூறியபொழுது, அவர் கேட்டார்…. இந்தியா தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகளை ஏன் அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை? என்ற தொனிப்பட.

இந்திய அமைதிப்படையின் வருகைக்குப் பின் அகற்றப்பட்ட படங்கள் ஏன் திரும்பவும் தொங்கவிடப்படவில்லை? ஆயிரக்கணக்கான புதிய வீடுகளை அன்பளிப்புச் செய்த ஒரு நாட்டுக்கு ஈழத் தமிழர்கள் ஏன் நன்றி கூற மறுக்கிறார்கள்? அல்லது அவர்களே இடித்ததை அவர்களே கட்டித்தருகிறார்கள். இது ஒன்றும் உதவியல்ல. இது ஒரு பாரிகாரம்தான் என்று ஈழத்தமிழர்கள் கோபத்தோடு சிந்திக்கிறார்களா?

ஆனால் இலங்கை அரசாங்கமும் சரி மேற்கத்தேய அரசாங்கங்களும் சரி ஈழத்தமிழர்களை இந்தியாவோடு இணைத்தே பார்க்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் அதாவது ஆட்சிமாற்றத்திற்கு முன் ராஜபக்ஷ அரசாங்கத்தின் கெடுபிடிகளைத் தாண்டி இலங்கைக்கு வந்த மேற்கத்தேய பிரதிநிதிகளும் ராஜதந்திரிகளும் மனிதாபிமானப் பணியாளர்களும் அவ்வாறுதான் ஈழத்தமிழர்களையும் இந்தியாவையும் இணைத்தே பார்த்தார்கள். ஆட்சிமாற்றத்திற்கு முன்புவரை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த எல்லா மேற்கத்தேய பிரதிநிதிகளும் இங்கே தாங்கள் சந்திக்கும் சிவில் சமூகப் பிரநிதிகளிடம் சில விடயங்களை சூசகமாகவும் பூடகமாகவும் தெரிவிப்பதுண்டு. அது என்னவெனில் ராஜபக்ஷவின் மீது நாங்கள் அழுத்தங்களை அதிகரித்தால் அவர் இன்னுமின்னும் அதிகமாக சீனாவை நோக்கிச் சாய்ந்துவிடுவார் என்பதே அது.

அவர்கள் இப்படிச் சொல்லும் போது யாராவது ஒரு தமிழ் புத்திஜீவியோ அல்லது அரசியல்வாதியோ அல்லாத சிவில் சமூகப் பிரதிநிதியோ பின்வருமாறு கிறுக்குத்தனமாகக் கேட்டிருந்தால் மேற்படி ராஜதந்திரிகளின் பதில் என்னவாக இருந்திருக்கும்? அந்தக் கேள்வி இதூன். ‘சீனா இலங்கைக்குள் வரட்டுமே. அதனால் ஈழத்தமிழர்களுக்கு என்ன நட்டம்? நாங்கள் சீனாவோடு பேசிக்கொள்கிறோம். சீனா எங்களுக்கு ஒரு வரலாற்று பகைவன் என்று யார் சொன்னது?’

இவ்வாறு யாரும் பகிரங்கத் தளத்தில் கேள்வி கேட்கவில்லை. எல்லாருமே ஈழத்தமிழர்களை இந்தியாவோடு சேர்த்துத்தான் பார்க்கிறார்கள். ஈழத்தமிழர்களிலும் பெரும் தொகுதியினர் அவ்வாறுதான் சிந்திக்கிறார்கள். சீனா இந்தியாவின் எதிரி, எங்களுக்கும் எதிரி. எனவே உங்களுடைய நண்பனின் எதிரி உங்களுக்கும் எதிரியே என்ற எடுகோளின் அடிப்படையிலா மேற்கு நாடுகள் தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் அவ்வாறு கூறினார்கள்?

அது வெறும் எடுகோளா? அல்லது புவிசார் அரசியல் யதார்த்தமா? அல்லது ஒரு வரலாற்று யதார்த்தமா?

அது ஒரு எடுகோள் அல்ல. அது ஒரு புவிசார் அரசியல் மற்றும் வரலாற்று யதார்த்தம் என்று வாதிடுகிறார் மு.திருநாவுக்கரசு. இந்த வாதம் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் இதயத்தை எப்பொழுது தீண்டும்?

‘இந்தியா சார்ந்த புவிசார் அரசியற் பிரச்சனையின் வெளிப்பாடகவே இலங்கையின் இனப்பிரச்சனை உருவானது என்பதால் புவிசார் அரசியற் பிரச்சனைக்கான தீர்வில் இருந்தே இனப்பிரச்சனைக்கான தீர்வு உருவாக்கப்பட வேண்டும்….’ என்று கூறும் மு.திருநாவுக்கரசுவின் தர்க்கத்திற்கூடாகச் சிந்தித்தால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தமது கொள்கைத் தீர்மானங்களை மறுவாசிப்புச் செய்யாதவரை ஈழத்தமிழர்களுக்கு விடிவே இல்லையா? அப்படி ஒரு நிலை தோன்றாதவரை இப்பொழுது உருவாக்கப்படும் யாப்பும் இறுதியானதில்லையா? இதுவும் ஒரு நாள் திருத்தி எழுதப்பட வேண்டியிருக்குமா?

SHARE