அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் அதிசிறந்த வீரரான கிளென் மேக்ஸ்வெல், விலகியுள்ளார்.

114

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான தொடரிலிருந்து அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் அதிசிறந்த சகலதுறை வீரரான கிளென் மேக்ஸ்வெல், விலகியுள்ளார்.

கிளென் மேக்ஸ்வெலின் இடது முழங்கை பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர், தென்னாபிரிக்காவுக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாட மாட்டார் என கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

அவுஸ்ரேலியாவில் நடைபெற்றுமுடிந்த பிக் பேஷ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் போது, இடது முழங்கை பகுதியில் வழி ஏற்பட்டதாக மேக்ஸ்வெல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரது முழங்கை பகுதியில் வழி அதிகரித்ததன் காணமாக அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பின்னர் பெறப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையின் படி, கிளென் மேக்ஸ்வெலின் முழங்கை பகுதியில் சத்திரச்சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, எதிர்வரும் நாட்களில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், அவர் ஆறு அல்லது எட்டு வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கிளென் மேக்ஸ்வெலுக்கு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான சுற்றுத் தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன், ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகளும் குறைவடைந்துள்ளன.

ஏற்கனவே, கிளென் மேக்ஸ்வெல் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ரி-20 போட்டிக்கு பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மன அழுத்தம் காரணமாக சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்தார்.

தற்போது, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்கு தீர்மானித்திருந்த போதும், உபாதை காரணமாக அவர் அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.

தனது இந்த உபாதை குறித்து கிளென் மேக்ஸ்வெல் கூறுகையில், ‘அவுஸ்ரேலிய தேசிய அணிக்காக விளையாடுவதை நான் மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன். எனினும், எனது இந்த முழங்கை உபாதையுடன் போட்டிகளில் விளையாடுவது கடினம். எனவே, உடனடியாக இந்த உபாதைக்கான சத்திர சிகிச்சையை மேற்கொண்டு குணமடைய வேண்டும் என தீர்மானித்துள்ளேன்.

அதேநேரம், இந்த முடிவை ஏற்றுக்கொண்ட பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர், அவுஸ்ரேலிய கிரிக்கெட் நிறைவேற்று பொது முகாமையாளர் ட்ரெவர் ஹொன்ஸ் மற்றும் அணி வீரர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்’ என கூறினார்.

இதேவேளை, ஆமக்ஸ்வெலுக்கு பதிலாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி-20 அணியில் டி ஆர்சி ஷோர்ட் இணைக்கப்பட்டுள்ளார் என கிரிக்கெட் அவுஸ்ரேலியா குறிப்பிட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்ரேலியா அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர்களில் விளையாடுகின்றது.

இதில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி ஜோகனஸ்பெர்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது

SHARE