வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்

8
இசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித இனத்துக்கு பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகிறது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் வீட்டைவிட்டு மக்கள் வெளியே வரவேண்டாம் என்று நடிகர்-நடிகைகள் வீடியோக்கள் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். திரையுலகம் முடங்கி உள்ளது. நடிகர்-நடிகைகள் வீட்டில் இருக்கிறார்கள். இந்தநிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் “மே, ஜூன் மாதங்களில் வட அமெரிக்காவில் நடைபெற இருந்த தனது இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் அடுத்த வருடத்துக்கு தள்ளிவைத்து இருக்கிறேன். இசையால் அனைவரும் ஒன்றிணைவோம். எனது அடுத்த சுற்றுப்பயண விவரத்தை தகுந்த நேரத்தில் அறிவிப்பேன். அனைவரது உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிகள் ரத்தானது அமெரிக்க ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
SHARE