இலங்கையில் இடம்பெறும் இராணுவ நிழல் அரசியல்

74

இலங்கை 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய காலணித்துவத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் பெரும்பான்மை சிறுபான்மை என முறுகல் நிலையேற்பட்டு அது கலவரங்களாக மாறி 1958,1968,1983 களில் இலங்கையில் இரத்த ஆறு ஓடியது இந்நிலையில் தமிழர்கள் அரசியல் ரீதியாக பிரச்சனை தீர்க்க முடியாமல் போக அது ஆயுத ரீதியான போராட்டமாக வலுப்பெற்று சுமார் முப்பது வருடங்கள் இலங்கையில் மூவின மக்களும் உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து தவித்தனர். இதில் தமது அரசியல் சுயலாபத்துக்காக சில அரசியல் தலைமைகள் நாட்டை சுடுகாடாக்கினர். ஒருவாறு முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தமிழரின் உரிமைக்காக போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பை உலக வல்லரசுகளின் உதவியுடன் ஒழித்ததாக கூறி பல இலட்சம் தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்த வரலாறும் இன்னும் பல்லாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்ட கொடூரம் இடம்பெற்று 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் யுத்த வெற்றியை காட்டி சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச அவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியை ஓரளவு புனரமைப்பு செய்ததுடன் நாட்டில் எல்லாப் பகுதிகளுக்கும் சுதந்திரமாக சென்றுவர அனுமதியளித்ததுடன் 10,000 க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிப் போராளிகளை புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் இணைந்தார். அது மட்டுமன்றி பல வீட்டுத் திட்டங்களையும் வடக்கின் வசந்தம் என்னும் வேலைத் திட்டத்தின் ஊடாக அபிவிருத்தியை மேற்கொண்டார். இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சாணக்கியமான முறையில் ரணில் சந்திரிக்கா மைத்திரி கூட்டால் மகிந்த ராஜபக்ச அவர்கள் தோல்வியடைந்தார். இதில் வடகிழக்கு மக்களின் வாக்குகளும் மைத்திரி ரணில் கூட்டுக்கு கிடைத்தது. யுத்தத்தை முடித்து பெரும் வெற்றி வாகை சூடி வலம் வந்த மகிந்த ராஜபக்ச அவர்களை 2015 இல் சிங்கள மக்களும் கணிசமான அளவு தோற்கடித்தனர். இதற்கு காரணம் அவர்களது குடும்ப ஆட்சி ஒருபுறம் இருக்க கொழும்பு மற்றும் பிற மாவட்டங்களில் இடம்பெற்ற ஆட்கடத்தல் கப்பம் ஊழல் மோசடி ஆட்கடத்தல்களுக்கு பின்னால் அந்நேரம் மகிந்த ராஜபக்ச அவர்களின் சகோதரர் காணப்பட்டமை இராணுவப் பிரசன்னம் என சிங்கள மக்கள் மத்தியிலும் அவர் மீது ஓர் அதிருப்தி காணப்பட்டது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர். பிரதமராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாட்டில் ஜனாதிபதி ஒரு கட்சியும் பிரதமர் ஒரு கட்சியுமாக ஆட்சி இடம் பெற்றது இது ஒரு நல்லாட்சி என்ற போர்வையில் இடம்பெற்றது பெயரளவில் இடம்பெற்ற நல்லாட்சியில் தமிழ் மக்கள் எதுவித பிரயோசனம் பெறவில்லை.

மகிந்த ராஜபக்ச அவர்களின் ஆட்சியில் இடம்பெற்ற அபிவிருத்திகள் கூட இம்பெறவில்லை. மகிந்த ராஜபக்ச அவர்களால் பல போராளிகள் புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஆனால் நல்லாட்சி அரசினால் ஒர அரசியல் கைதியை கூட விடமுடியவில்லை. ஆனால் ஒரு வழியில் இவ்வாட்சியில் தமிழ் மக்கள் இராணுவப் பிரசன்னம் இன்றி அச்சுறுத்தல் இன்றி வாழ்ந்தார்கள். இந்நத நல்லாட்சியில் தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள முஸ்லீம் மக்கள் கூட பெரிதாக எவ்வித அபிவிருத்தியும் பெறவில்லை என்பதே கண்கூடு இந்நிலையில் கோர யுத்தம் முடிவுற்று குண்டு சத்தமின்றி அமைதியாக வாழ்ந்த நேரத்தில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினம் அன்று உலகில் மிக மோசமான பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தற்கொலை தாக்குதல்களால் ஞாயிறு திருப்பலி ஆராதணையில் இருந்த அப்பாவி கிறிஸ்தவ மக்கள் உட்பட சுமார் 280 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தாக்குதலினால் பல கொழும்பிலுள்ள முக்கிய ஹோட்டல்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் என அழிக்கப்பட்டன. பல அப்பாவி பொதுமக்கள் காயமடைந்தனர்.

இத்தாக்குதலை அடுத்து இலங்கையின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறை முற்றாக முடங்கி போனது மட்டுமன்றி மூவின மக்களும் மீண்டும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களால் அச்சமும் பீதியும் அடைந்து காணப்பட்டனர். தாக்குதல் நடத்திய அனைவரும் முஸ்லீம் இனத்தை சேர்ந்ததால் முஸ்லீம் மக்கள் அனைவரும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்பட்டனர். அத்துடன் இஸ்லாமியர்களின் வீடுகள் அனைத்தும் சோதனையிடப்பட்டன. அது மட்டுமன்றி இலங்கை முழுவதும் இராணுவப் பிரசன்னம் அதிகரித்ததுடன் வீதிகள் தோறும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் தீவிரமாக்கப்பட்டன. அத்துடன் வடகிழக்கு பகுதிகளில் கடுமையான வீதி சோதனை அமைக்கப்பட்டு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர். கொழும்பு மற்றும் முக்கிய இடங்களின் பாதுகாப்புக்கள் சில காலத்தின் பின்னர் தளர்த்தப்பட்டாலும் வடபகுதிகளில் சோதனைகளும் மற்றும் கெடுபிடிகள் அதிகரித்தே காணப்பட்டது. இந்த ஐஎஸ் ஐஎஸ் தாக்குதல் முன்னரே இந்திய புலனாய்வு தரப்பால் இலங்கை இராணுவத்துக்கு அறிவிக்கப்பட்ட பொழுதிலும் அப்பொழுதிருந்த இராணுவக் கட்டமைப்பும் புலனாய்வு கட்டமைப்பும் அதனை தடுக்க தவறியதாகவும் சொல்லப்படுகின்றது. இந்தக் கூட்டாட்சிகளில் ரணில் விக்ரம சிங்க அவர்களும் மைத்திரிபால சிறிசேன அவர்களும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் சகோதரரும் முன்னால் பாதுகாப்பு செயலாளரும் ஆனா கோட்டபாய ராஜபக்ச அவர்கள் பொதுஜன பெரமுனா என்னும் கட்சியின் போட்டியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக சஜித் பிரேமதாஸ போட்டியிட்டார். சஜித் பிரேமதாஸ அவர்கள் நல்லாட்சி அரசில் வீடமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக இருந்து வடகிழக்கு மட்டுமன்றி இலங்கையின் பலபகுதியில் வீடுகளை இழந்த மற்றும் வீடு இல்லாத மக்களுக்கு வீடுகளை கட்டிகொடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். ஆனால் தேர்தலில் பெரும்பாலான சிங்கள மக்கள் கோட்டபாய ராஜபக்ச அவர்களுக்கு வாக்களித்து வெற்றியடையர் செய்தனர். வடகிழக்கு தமிழ் மக்களும் பெரும்பாலான முஸ்லீம் மக்களும் சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு வாக்களித்தனர். 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச அவர்கள் நியமிக்கப்பட்டார். பதவியேற்றவுடன் போர்க்குற்றவாளியாக ஐ.நா சபையின் முன் தமிழ் மக்களால் நிறுத்தப்பட்ட சவேந்திர சில்வா அவர்களை இலங்கை இராணுவத்தளபதியாக நியமித்தார். அத்துடன் இறுதி யுத்தத்தில் பங்கெடுத்த தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரத்தினா அவர்களை பாதுகாப்பு செயலாளராக நியமித்தார்;. இலங்கையில் பெரும்பாலான மாகாண ஆளுநர்களை ஓய்வு பெற்ற இராணுவ தளபதிகளை நியமித்தார். அத்துடன் சிவில் நிர்வாக கட்டமைப்புக்களிலும் இராணுவ மற்றும் விமானப்படை தளபதிகளை நியமித்தார்.

பொலிஸாரினால் இடம்பெற்று வந்த சிவில் பாதுகாப்ப நடவடிக்கைகளில் தற்பொழுது இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொடிய கொரோனா வைரஸ் தடுக்கும் செயலாளிகளிலும் முற்றுமுழுதாக முப்படையினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனை விட நல்லாட்சி அரசாங்கத்தில் காணப்படுவதையும் விட வடகிழக்கு பகுதிகளில் இராணுவப் பிரசன்னம் அதிகரித்து காணப்படுவதுடன் குறிப்பாக வடபகுதியில் வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் இராணுவ அடக்குமுறை அதிகமாக இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இதனை பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். அத்துடன் நாட்டின் பாதுகாப்புக்கு புலனாய்வு கட்டமைப்பானது மிக அவசியமானதொன்றாக உள்ளமை மறுக்க முடியாத உண்மை. ஆனால் அவ் புலனாய்வுப் பிரிவினரில் ஒரு சிலர் தவறாக தமது புலனாய்வு நடவடிக்கைகளை மக்கள் மீது தினிப்பதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். சிலர் தமது தனிப்பட்ட சுயநலன்களுக்காக இவ்வாறு செயற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன் கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை கண்காணித்தல் மற்றும் சமூக இடைவெளியை பேணுவதை உறுதி செய்தல் போன்றவற்றை காரணம் காட்டி யுத்த காலத்தில் இடம்பெற்ற ரோந்துகள் போல இப்பொழுதும் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகின்றது. நடக்க இருக்கும் பாராமளுமன்றத் தேர்தல்களின் பின்னர் இது இன்னும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் குறிப்பாக வடகிழக்கு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடகிழக்கு தமிழ் முஸ்லீம் மக்கள் ஒருபோதும் இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களை விரும்ப மாட்டார்கள். தமிழ் மக்கள் கடந்த 30 வருடங்களாக பல உயிர்களை விலையாகக் கொடுத்தும் பல சொத்துக்களை இழந்தும் இதுவரை எதுவித அரசியல் ரீதியான தீர்வுகள் கிடைக்கவில்லை. இனியோடு ஆயுதப் போராட்டத்தை நிச்சயமாக தமிழ் மக்கள் முற்றாக விரும்ப மாட்டார்கள். அரசியல் தீர்வு கிடைக்குதோ இல்லையோ தங்களை அமைதியாக இராணுவ அச்சம் இன்றி வாழ விட்டால் போதும் என்னும் நிலைக்கு வந்து விட்டார்கள்.

எனவே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் இராணுவப் பிரசன்னத்தை குறைத்து தமிழர் பகுதிகளில் அபிவிருத்திகளை மேற்கொண்டு நீண்ட காலமாக சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் சிலரையாவது விடுதலை பன்னி காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஓர் சரியான தீர்வை கொடுப்பாரானால் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளும் பொதுஜன பெரமுனவுக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

SHARE