இராணுவப் பேரணியை நடத்தி இரண்டாம் உலகப் போர் வெற்றியை கொண்டாடும் ரஷ்யா

26

இரண்டாம் உலகப் போர் வெற்றியை குறிக்கும் வகையில் மிகப் பெரிய இராணுவப் பேரணியை ரஷ்யா இன்று (புதன்கிழமை) நடத்துகிறது.

மே 9ஆம் திகதி நடக்கவிருந்த இந்த பேரணியை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தார்.

இரண்டாம் உலகப் போரில் நாசி படைகளை சோவியத் ஒன்றியம் வீழ்த்தி 75 ஆண்டுகள் நிறைவுக்கு வருகின்றது. அத்தோடு இந்தப் போரில் ஏறத்தாழ 2 கோடி சோவியத் ஒன்றிய வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்தப் பேரணியை நடத்துவதற்காக கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த சமூக முடக்கத்தை ரஷ்யா இந்த மாதம் தளர்த்தியது.

1945 ஆம் ஆண்டு மே 8 ஆம் திகதி நாசி ஜேர்மனி நேச நாடுகளான பிரிட்டன், அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தது.

ஆனால் பாரம்பரியமாக ரஷ்யா மற்றும் பிற முன்னாள் சோவியத் குடியரசுகள் மே 9 அன்று வெற்றியை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த ஆண்டு இரண்டாம் உலகப் போர் வெற்றிக் கொண்டாட்டம் புடினுக்கு சிறப்பு வாய்ந்தது என கூறப்படுகின்றது. ஏனென்றால் ஒரு வார காலப்பகுதியில் ரஷ்யா, அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து நாடளாவிய ரீதியிலான வாக்கெடுப்பை நடத்துகிறது.

இது புடினின் தற்போதைய பதவிக்காலம் முடிவடைந்து  2024 க்கு பின்னர் அவர் ஆட்சியில் இருக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE