இலங்கை மத்திய வங்கியின் கொவிட்-19 நிவாரண வழிமுறைகள்

30

நாட்டின் உச்சமட்ட நிதியியல் நிறுவனம் என்ற ரீதியில் இலங்கை மத்திய வங்கியானது முடக்கல் காலப்பகுதியின் போது பொருளாதாரத்திற்கும் நிதியியல் முறைமைக்கும் அதன் முழுமையான அத்தியாவசிய பணி நோக்கெல்லையினையும் வழங்கியது.

மத்திய வங்கியானது உலகளவிலான எதிர்பாராத இவ்விடையூறின் போது பொதுமக்கள் மீதான சுமையினை தளர்த்துவதற்கு முனைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்ட அதேவேளை பொருளாதார, விலை மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பேணுவதற்கான அதன் சட்ட முறையான பொறுப்பாணை மீதான கவனத்தினை தக்கவைத்திருந்தது. இவை பின்வரும் வழிமுறைகளை உள்ளடக்கியிருந்தன. ஆயினும், அவற்றிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை:

 1. வட்டி வீதங்களைக் குறைத்தல், சந்தைத் திரவத்தன்மையினை அதிகரித்தல் மற்றும் அரசாங்கத்திற்கு நிதியளித்தல்,
 2. வெளிநாட்டுச் செலாவணிப் பாய்ச்சல்களை முகாமைசெய்தல், செலாவணி வீத உறுதிப்பாட்டினைப் பேணுதல் மற்றும் பன்னாட்டு ஒதுக்குகளைப் பாதுகாத்தல்,
 3. நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பேணுதல்,
 4. தடங்கலற்ற நாணயத் தொழிற்பாடுகள் மற்றும் கொடுப்பனவுகள் அத்துடன் தீர்ப்பனவு நடவடிக்கைகளை உறுதிசெய்தல், மற்றும்
 5. பொதுப்படுகடனை முகாமைசெய்தல்.

வட்டி வீதங்களைக் குறைத்தல், சந்தைத் திரவத்தன்மையினை அதிகரித்தல் மற்றும் அரசாங்கத்திற்கான நிதியளித்தல் ஆகியவற்றுக்கான வழிமுறைகள் தாழ்ந்த பணவீக்கச் சூழலைக் கொண்ட பின்னணியில் பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதனை நோக்காகக் கொண்டிருந்தன. மத்திய வங்கியானது குறைக்கப்பட்ட மற்றும் சலுகை வட்டி வீதங்களில் சந்தைக்கு போதிய திரவத்தன்மையினை வழங்கியது. பொருளாதாரத்தில் அதிகரித்த நாணய உட்பாய்ச்சல்களை இயலச்செய்வதற்கு மேலதிகமாக வங்கித்தொழில் முறைமைக்கான பாரியளவிலான திரவத்தன்மை உட்செலுத்தல்கள் குறிப்பாக, முடக்கல் காலத்தின் போது எதிர்கொண்ட இன்னல்களைத் தீர்ப்பதற்கு வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் வேண்டப்பட்ட ஆதரவினை வழங்குவதற்கு வங்கிகளை இயலச்செய்தன. கொடுகடன் பாய்ச்சல்களைத் துரிதப்படுத்தும் பொருட்டு பணச் சந்தையின் திரவத்தன்மை உட்செலுத்தல்கள் மத்திய வங்கியினால் ஈர்க்கப்படாது அவை பணச் சந்தையில் தொடர்ந்தும் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. கொள்கை வட்டி வீதங்கள் மற்றும் நியதி ஒதுக்கு விகிதம் போன்ற முக்கிய நாணயக் கொள்கைச் சாதனங்கள் வரலாற்றிலேயே ஆகக்குறைந்த மட்டங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளன. வங்கி வீதங்கள், துரிதமாகக் குறைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட கடன் பெறுநர்களின் சுமையினை குறைவான வட்டி வீதங்கள், குறைத்த அதேவேளை அறிவிக்கப்பட்ட படுகடனை காலம் தாழ்த்திச் செலுத்துவதற்கான சட்ட ரீதியான உரிமை மற்றும் தொழிற்பாட்டு மூலதனக் கடன் திட்டங்கள் என்பன வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் அதிவிசேட சலுகைகளை வழங்கின. மத்திய வங்கியானது அரசாங்க அரசிறைப் பற்றாக்குறை அத்துடன் அதிகரித்த செலவினம் என்பவற்றிலிருந்து தோன்றுகின்ற இறை அழுத்தங்களை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கத்திற்கு தேவையான நிதியளித்தலினையும் ஏற்பாடுசெய்திருந்தது. இந்நிதியளித்தலானது சனத்தொகையின் பாரிய வகுப்பிற்கு சமூகப் பாதுகாப்புக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் அத்தியாவசிய சுகாதாரம் மற்றும் ஏனைய பொதுச் சேவைகள் தொடர்பில் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கத்தினை இயலச்செய்தது.

கடுமையான இன்னல்கள் நிறைந்த நிலைமைகளின் கீழ் செலாவணி வீதத்தினை பாதுகாப்பதற்காக மத்திய வங்கியானது பன்னாட்டு ஒதுக்குகள் இழப்பின்றி நிலையான செலாவணி வீதத்தினைப் பேணுவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்தது. கொவிட்-19 தாக்கங்களானவை பாரியளவு மூலதன வெளிப்பாய்ச்சல்களைத் தோற்றுவித்ததுடன் ஏற்றுமதி வருவாய்கள், சுற்றுலாத் துறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களிலிருந்தான வருவாய்கள் என்பவற்றையும் மட்டுப்படுத்தின. முடக்கத்தின் உச்சகாலமான ஏப்ரல் நடுப்பகுதிவரை அவதானிக்கப்பட்ட பாரியளவு பெறுமானத் தேய்வினை திரும்பலடையச் செய்வதற்கு மத்திய வங்கியின் உரியகாலத் தலையீடு உதவியது. இது இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் உள்நாட்டு விலைகளை நிலையான மட்டங்களில் பேணுவதனை இயலச்செய்தது. வெளிநாட்டுச் செலாவணி வருவாய்கள் வீழ்ச்சியடைந்தமையினால் அத்தியாவசியமற்ற வெளிநாட்டுச் செலாவணிச் செலவினம் கட்டுப்படுத்தப்பட்டதுடன் குறிப்பாக, குறைந்த வட்டி வீதங்களிலிருந்து உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு பயனடைவதற்கான சூழலொன்றினைத் தோற்றுவித்தது.

கடன்பெறுநர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் மற்றும் பாதகமான சந்தை நிபந்தனைகள் என்பன நிதியியல் துறையினை மோசமாகப் பாதிக்கக்கூடியதாக இருந்தமையினால் நிதியியல் நிறுவனங்களின் உறுதிப்பாட்டினையும் நிதியியல் முறைமையினையும் பாதுகாப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் எடுக்கப்பட்டன. இவை அதிகாரமளிக்கப்பட்ட வைப்பு ஏற்கும் நிறுவனங்க;டான வாடிக்கையாளர் வைப்புகளின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு அவசியமானவையாகவிருந்தன. அதற்கமைய, காலப்பகுதியின் போது குறித்த தாங்கியிருப்புக்களைக் கட்டியெழுப்புவதனைக் கருத்திற்கொண்டு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு போதிய ஒழுங்குமுறைப்படுத்தல் நிவாரணம் வழங்கப்பட்டது. இதன் பிரதிபலனாக தமது வாடிக்கையாளர்களுக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஆதரவளிப்பதற்கு அவர்களை இயலச்செய்தது. தேவை ஏற்படுவதற்கேற்பவும் அவசியப்படுகின்ற போதும் ஏதேனும் இடரிலுள்ள நிதி நிறுவனத்திற்கு திரவத்தன்மை ஆதரவு வழங்குவதற்கான வழிமுறைகளும் செயற்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய வங்கியானது முடக்கல் காலப்பகுதியின் போது பொருளாதாரத்தினால் வேண்டப்பட்ட சீரான நாணயப் பாய்ச்சலினை உறுதிசெய்வதற்கான வழிமுறைகளை எடுத்தது. இவ்வழிமுறைகள், ஊரடங்கு காலப்பகுதியிலும்கூட வங்கிக் கிளைகள் ஊடாகவும் தன்னியக்க கூற்றுப்பொறி (ATM) ஊடாகவும் தமது நாணயத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு பொதுமக்களை இயலச்செய்தது. மத்திய வங்கியானது உலகளாவிய தொற்றுநோய்க் காலப்பகுதியின் போது பொருளாதாரத்திற்கும் நிதியியல் முறைமைக்கும் தேவையான ரூபா மற்றும் வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல் இரண்டிற்குமான கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளின் தடங்கலற்ற தொழிற்பாட்டினையும் உறுதிசெய்தது. கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக பொதுமக்களுக்கான சௌகரியத்தினை மேம்படுத்தி பல்வேறு இலத்திரனியல் கொடுப்பனவு முறைகள் முனைப்புடன் ஊக்குவிக்கப்பட்டு வசதிப்படுத்தப்பட்டன.

இலங்கை மத்திய வங்கியானது தற்போது இடம்பெறுகின்ற அழுத்தமான நிலைமையின் போது உரியகால படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவு பற்றிய இலங்கையின் குறைகூறமுடியாத பதிவினைப் பேணியது. படுகடன் தீர்ப்பனவுத் தேவைப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் அதேபோன்று அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவினத்தினை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் சார்பில் உள்நாட்டுச் சந்தையிலிருந்து இலங்கை மத்திய வங்கியினால் பாரியளவு நிதியங்கள் திரட்டப்பட்டன. முன்மதிமிக்க வெளிநாட்டு ஒதுக்கு முகாமைத்துவமும் வெளிநாட்டு நிதியியல் சந்தைக்கு அரசாங்கத்திற்கு கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட அணுகுவழியின் பின்னணியில் அரசாங்கத்தின் பாரியளவு வெளிநாட்டு நாணயப் படுகடன் தீர்ப்பனவு கொடுப்பனவுகளை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தப்படவேண்டிய இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு ஒதுக்குகளை இயலச்செய்தது. வெளிநாட்டு இணைத்தரப்பினர்களுடனான கிரமமான இடைத்தொடர்புகள் இலங்கையின் பொருளாதாரம் மீதான முதலீட்டாளர் நம்பிக்கையினை பாதுகாப்பதற்கு உதவின.

மேற்குறித்த கலந்துரையாடலானது பொருளாதாரத்திற்கும் நிதியியல் முறைமைக்கும் அதேபோன்று பொதுமக்களுக்கும் ஆதரவளிப்பதற்காக கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோய்க் காலப்பகுதியின் போது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட பல வகையான அதிவிசேட வழிமுறைகள் பற்றிய தொகுப்பொன்றை வழங்குகின்றது (இவ்வழிமுறைகளின் அட்டவணை இணைப்பு i இல் தரப்பட்டுள்ளன).இலங்கை மத்திய வங்கியின் பல்வேறு திணைக்களங்களினதும் கிரமமான தொழிற்பாட்டிற்கு மேலதிகமாக இவ்வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை மத்திய வங்கியானது அதன் தனித்துவம்மிக்க வெளியீடான ஆண்டறிக்கையினை முடக்கல் நிலைமைகளின் கீழ் நியதிச் சட்ட இறுதித் திகதியான 2020 ஏப்ரல் 30 அன்று வெளியிட்ட அதேவேளை பொதுமக்களுக்கு தடங்கலின்றி உரிய காலத்தில் அனைத்து தரவுகளையும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்க விடயமொன்றாகும்.

மத்திய வங்கியானது தேசத்திற்கான அதன் பொறுப்புக்களைக் கொண்டு நடாத்துகின்ற அதேவேளை, முரண்படுகின்ற மற்றும் போட்டியிடும் குறிக்கோள்களுக்கிடையில் அவசியமான சமநிலையினைப் பேணுவதற்கு தொடர்ந்தும் பாடுபடும். எவ்வாறாயினும், கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோயின் மூலம் தோற்றுவிக்கப்பட்ட எதிர்பாராத இன்னல்களை வெற்றிகொள்வதற்கான இலங்கையின் இயலுமையானது அரசாங்கம், நிதியியல் நிறுவனங்கள், வியாபாரங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளடங்கலாக பொருளாதாரத்தின் அனைத்து ஆர்வலர்களினதும் கூட்டான முயற்சிகளிலேயே தங்கியிருக்கின்றது. தற்போது முன்னெடுக்கப்படுகின்ற நாணயத் தூண்டல்களானவை உலகளாவிய தொற்றுநோய் மூலம் தோற்றுவிக்கப்பட்ட அழுத்தங்களை வெற்றிகொள்வதற்கு பொருளாதாரத்திற்கு உதவியளிக்கும் அதேவேளை, நடுத்தரகால கொவிட் காலத்திற்குப் பிந்திய இலங்கையின் வெற்றியானது நியதிச்சட்டத்தினால் வேண்டப்பட்டவாறு 2020 ஏப்ரல் 28 அன்று கௌரவ பிரதம அமைச்சருக்கும் நிதி அமைச்சுக்கும் கையளிக்கப்பட்ட அதேபோன்று 2020 ஏப்ரல் 28 அன்று அதிமேதகு சனாதிபதிக்கும் சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டறிக்கை 2019இல் எடுத்துக்காட்டப்பட்டவாறு வளர்ச்சிக்கான பல எண்ணிக்கையான கட்டமைப்புசார்ந்த முட்டுக்கட்டைகளை நிவர்த்திசெய்வதற்கான மறுசீரமைப்பு நிகழ்ச்சிநிரலொன்றினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதிலேயே தங்கியிருக்கும்.

இணைப்பு

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக் காலப்பகுதியின் போது பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட கொள்கை மற்றும் செயற்பாட்டு வழிமுறைகள்
1. வட்டி வீதங்களைக் குறைப்பதற்கும், சந்தை திரவத்தன்மையை மேம்படுத்துவதற்கும் மற்றும் அரசாங்கத்தின் நிதியிடலிற்கும் எடுக்கப்பட்ட வழிமுறைகள்

 • 2020 ஜனவரி 30: இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் 50 அடிப்படைப் புள்ளிகளினால் குறைக்கப்பட்டது. உலகளாவிய மத்திய வங்கியின் செய்திகள் இணையத்தளம் www.centralbanknews.info இற்கமைய சீனாவில் கொரோனா வைரஸ் வெளித்தாக்கம் நிதியியல் சந்தைகளைப் பாதிப்பதற்கு ஆரம்பித்ததன் பின்னர் கொள்கை வட்டி வீதங்களைக் குறைத்த முதலாவது மத்திய வங்கி இலங்கை மத்திய வங்கியாகும்.
 • 2020 பெப்ரவரி 26: இலங்கை மத்திய வங்கியானது ரூ.24 பில்லியனை இலாபமாக அரசாங்கத்திற்கு மாற்றியது.
 • 2020 மார்ச் 05: குறைந்த மட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களைப் பராமரிக்கின்ற வேளையில், கொவிட்-19 வெளித்தாக்கத்தினால் வருகின்ற ஏதாகிலும் பாதகமான தாக்கங்களினைக் குறைப்பதற்கு தேவைப்படுமிடத்து உள்நாட்டு நிதியியல் சந்தைக்கு திரவத்தன்மையை வழங்குவதற்கு அது தயாராக இருப்பதனை இலங்கை மத்திய வங்கி சமிக்ஞைப்படுத்தியிருந்தது.
 • 2020 மார்ச் 13: விதிவிலக்கான நிலைமைகளின் கீழ் அரசாங்கத்தின் அவசர நிதித் தேவைப்பாடுகளினைப் பூர்த்திசெய்வதற்காக இலங்கை மத்திய வங்கியானது முதலாந்தரச் சந்தையிலிருந்து ரூ.50 பில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்திருந்தது.
 • 2020 மார்ச் 16: 2020 மார்ச் 17 இலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில், இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் 25 அடிப்படைப் புள்ளிகளால் குறைக்கப்பட்டதுடன் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்புப் பொறுப்புக்களின் மீதான நியதிஒதுக்கு விகிதத்தினை 1.00 சதவீதத்தினால் 4.00 சதவீதத்திற்கு குறைத்திருந்தது. இதன் விளைவாக, சந்தைக்கு ரூ.65 பில்லியன் நிரந்தர திரவத்தன்மையை உட்செலுத்தியிருந்தது.
 • 2020 மார்ச் 23: அரசாங்கத்தினால் வலு உறுதிப்பாட்டு நிதியத்தினை நிறுவுவதற்கு நிதியளிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியானது முதலாந்தரச் சந்தையிலிருந்து ரூ.50 பில்லியன் திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்தது.
 • 2020 மார்ச் 24: கொவிட்-19 வெளித்தாக்கத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு உதவியளிப்பதற்கு நிவாரண வழிமுறைகளை அறிவித்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் மற்றும் குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. மூலதனம் மற்றும் வட்டி மீதான சலுகைக் கடன், ஆண்டிற்கு 4.00 சதவீத வட்டி வீதத்திலான தொழிற்பாட்டு மூலதனத்தின் ஏற்பாடு, கொடுகடன் அட்டைக் கொடுப்பனவுகளின் மீது விதிக்கப்படும் வட்டி வீதங்களின் உச்சத்தினை வரையறுத்தல், கொடுகடன் அட்டைகளின் மாதாந்தக் கட்டண நிலுவைகளின் ஆகக் குறைந்த அளவினை மேலும் குறைத்தல், காசோலைகளின் செல்லுபடியாகும் தன்மையினை நீடித்தல் மற்றும் ஊரடங்கு இல்லாத நாட்களில் உரிமம்பெற்ற வங்கிகளின் அனைத்து கிளைகளையும் திறந்து வைத்திருத்தல் மற்றும் ஊரடங்கு நாட்களில் நிறுவனசார் கிளைகளை திறந்து வைத்திருத்தல் என்பன உள்ளடங்குகின்றன.
 • 2020 மார்ச் 25: மேலே குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கையானது உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளையும் உள்ளடக்கும் வகையில் விளக்கமளிக்கப்பட்டது.
 • 2020 மார்ச் 27: இலங்கை மத்திய வங்கியானது ரூ.50 பில்லியன் மீள்நிதியிடல் திட்டத்தினை ஆரம்பித்ததுடன் 2020 மார்ச் 25 இலிருந்து ஆரம்பிக்கும் வகையில், சுயதொழில் வியாபாரங்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளடங்கலாக கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கு மீள்நிதியிடல் வசதியில் பங்குபற்றுநராக தகுதியடைதலினை அறிவித்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் உரிமம்பெற்ற குத்தகைக்குவிடும் கம்பனிகள் என்பனவற்றிற்கு மேலே குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கைக்கு ஒரு துணைச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதுடன் மீள்நிதியிடல் வசதியினை நடைமுறைப்படுத்தலினை வழங்குவதற்கு செயற்பாட்டு வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டது. கடன் சலுகைகள் (மூலதனம் மற்றும் வட்டி) மற்றும் தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு ஆண்டிற்கு 4 சதவீத வட்டி வீதத்திலான தொழிற்பாட்டு மூலதனக் கடன் என்பனவற்றை இந்தச் சலுகைகள் உள்ளடக்குகின்றது.
 • 2020 மார்ச் 30:
 • உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கான நீண்டகால திரவத்தன்மை ஆதரவளிப்பு ஏற்பாடுகளை 14 நாட்களிலிருந்து 90 நாட்களுக்கு நீடித்திருந்தது. இது நிச்சயத்தன்மையுடன் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடைய நீண்டகால திரவத்தன்மைத் தேவைப்பாடுகளினை பூர்த்திசெய்வதற்கு அவர்களுக்கு ஆதரவளித்திருந்தது.
 • ஓரிரவு வசதிகளுக்கு மேலதிகமாக தனியான முதனிலை வணிகர்களுக்கு நீண்டகால திரவத்தன்மை ஆதரவளிப்பின் ஏற்பாட்டினை ஆரம்பித்திருந்தது.
 • 2020 ஏப்ரல் 03: 2020 ஏப்ரல் 03ஆம் திகதி வியாபாரம் முடிவுறுத்தப்பட்டதிலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில், கொள்கை வட்டி வீதங்கள் மேலும் 25 அடிப்படைப் புள்ளிகளினால் 6 சதவீதத்திற்கும் 7 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டது.
 • 2020 ஏப்ரல் 03: ஏப்பிறலின் சம்பளக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கத்தினை வசதிப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியானது முதலாந்தரச் சந்தையிலிருந்து ரூ.60 பில்லியன் திறைசேரி முறிகளைக் கொள்வனவு செய்தது.
 • 2020 மார்ச் 20 இலிருந்து திறைசேரி உண்டியல்கள் ஏலம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, திறைசேரி உண்டியல்கள் வழங்கலின் பற்றாக்குறையினை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்தது. அன்றிலிருந்து, அத்தகைய பற்றாக்குறைகளைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கை மத்திய வங்கியானது ரூ.67.4 பில்லியன் பெறுமதியுடைய திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்தது.
 • 2020 ஏப்ரல் 16: அவசர காலங்களில் உபயோகிக்கக்கூடிய நிருவாக ரீதியாக தீர்மானிக்கப்படுகின்ற வீதமான இலங்கை மத்திய வங்கியின் வங்கி வீதமானது 2003ஆம் ஆண்டிலிருந்து முதல் முறையாக 500 அடிப்படைப் புள்ளிகளால் குறைக்கப்பட்ட வேளையில் ூ300 அடிப்படைப் புள்ளிகளின் இடைவெளியுடன் துணைநில் கடன் வழங்கல் வீதத்துடன் தன்னியக்கமாக சீர்செய்துகொள்வதற்கு வங்கி வீதங்களை அனுமதித்திருந்தது.
 • 2020 ஏப்ரல் 16: ஆகக்குறைந்த நாளாந்த ஒதுக்குத் தேவைப்பாட்டின் வரையறையினை 90 சதவீதத்திலிருந்து 20 சதவீதத்திற்கு குறைத்திருந்தது, இந்த வழிமுறையானது ஏனைய தேவையற்ற சிரமங்களில்லாத தங்களுடைய ஓரிரவு திரவத்தன்மை தேவைப்பாடுகளைப் பேணுவதற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கான இடவசதியினை மேலும் வழங்கியது.
 • 2020 ஏப்ரல் 27: கொவிட்-19 இலிருந்து ஏற்படுகின்ற பாதகமான பொருளாதார நிலைமைகளின் காரணமாக குறுங்கால நிதித் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு தங்க நகைகளை அடகு வைக்கும் தாழ்ந்த வருமானமுள்ள தனிநபர்களுக்கு ஆதரவளிப்பதன் தேவைப்பாட்டினைக் கருத்திற்கொண்டு, உரிமம்பெற்ற வங்கிகள் அடகு முற்பணங்கள் மீது விதிக்கக்கூடிய உயர்ந்தபட்ச வட்டி வீதம் நிர்ணயிக்கப்பட்டது. அதாவது ஒரு வருட முதிர்ச்சிக்கும் குறைவான அடகு முற்பணங்களுக்கு ஆண்டிற்கு 12 சதவீதம் அல்லது மாதத்திற்கு 01 சதவீதம்.
 • 2020 ஏப்ரல் 28: கொடுகடன் ஆதரவுத் திட்டத்தின் கீழ் சலுகைகள் கிடைக்கப்பெறுவதற்கு தகுதியுடைய கடன் பெறுநர்களின் கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான முடிவுத்திகதி 2020 மே 15 வரை நீடிப்பதற்கு உரிமம்பெற்ற வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
 • 2020 மே 04: குறுங்கால அடிப்படையில் அவர்களுடைய திரவத்தன்மையை பெறுவதற்கு தனியான முதனிலை வணிகர்களுக்கான குறுங்கால திரவத்தன்மை ஆதரவளிப்பதற்கு ஏற்பாடுகளை ஆரம்பித்திருந்தது.
 • 2020 மே 06: 2020 மே 06இல் வியாபாரம் முடிறுத்தப்பட்டதிலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில், இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் மேலும் 50 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 5.50 சதவீதத்திற்கும் 6.50 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டது. வங்கி வீதமும் மேலும் 50 அடிப்படைப் புள்ளிகளால் குறைக்கப்பட்டது.
 • 2020 ஜூன் 16: உரிமம்பெற்ற வர்த்தக வங்கியின் அனைத்து ரூபாய் வைப்புப் பொறுப்புக்களின் மீதான நியதி ஒதுக்கு விகிதம் 200 அடிப்படைப் புள்ளிகளால் அதன் தாழ்ந்த மட்டமான 2.00 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. இந்த குறைப்பானது உள்நாட்டுப் பணச் சந்தைக்கு ரூ.115 பில்லியன் மேலதிகத் திரவத்தன்மையினை உட்செலுத்தியிருந்தது.
 • 2020 ஜூன் 16: இலங்கை மத்திய வங்கியானது கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரக் கூறுகளுக்கு (கட்டடவாக்கம் மற்றும் ஏனைய தேவைப்பாடுடைய துறைகள்) கடன் வழங்கலை ஆதரவளித்து பொருளாதார நடவடிக்கை மறுமலர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு ஆண்டிற்கு 4.00 சதவீத சலுகைவட்டி வீத அடிப்படையில் மூன்று புதிய கொடுகடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.
 • அதன்படி, 2020 மார்ச் 27ஆம் திகதியன்று அறிமுகப்படுத்தப்பட்ட மீள்நிதியிடல் வசதியின் கீழ் வழங்கப்பட்ட ரூ.28 பில்லியனுக்கு மேலதிகமாக, இந்த வசதியின் உச்சகட்ட பகிர்ந்தளித்தலின் சாதகத்தினை உறுதிப்படுத்தும் வேளையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளானது உள்நாட்டு வியாபாரங்களுக்கு 4.00 சதவீதத்தில் கடன்களை வழங்கும் என்றவாறான நிபந்தனையின் கீழ் பிணையின் பரந்தளவிலான விசுவாசத்திற்கெதிராக 1.00 சதவீத சலுகை வீத அடிப்படையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு நிதியிடலை இலங்கை மத்திய வங்கி வழங்கியது. ஏற்கனவே, நடைமுறையிலுள்ள மீள்நிதியிடல் வசதியுடன் இந்தத் திட்டமானது கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு ரூ.150 பில்லியனை வழங்குகின்றது.
 • இதற்கு மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியினால் நிதியளிக்கப்படுகின்ற புதிய குறித்துரைக்கப்பட்ட கொடுகடன் திட்டத்தின் கீழ் மேலே குறிப்பிடப்பட்ட சலுகை வீதத்தில் கிடைக்கப்பெறுகின்ற வேளையில், அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களின் கணக்கின் நிலுவைகளின் தொகைக்குச் சமமாக அரசாங்கத்தின் உத்தரவாதத்தினை உபயோகித்து கட்டடவாக்கத் துறையானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன்பெறுவதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.

2. வெளிநாட்டுச் செலாவணிப் பாய்ச்சல்களை நிர்வகித்தல், செலாவணி விகிதத்தின் உறுதித்தன்மையினைப் பேணுதல் மற்றும் பன்னாட்டு ஒதுக்குகளைப் பாதுகாத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட வழிமுறைகள்

 • 2020 மார்ச் 19: கொவிட் – 19 நோய்த்தொற்றின் தாக்கம்  காரணமாக செலாவணி விகிதத்தின் மீதான அழுத்தம் மற்றும் நிதியியல் சந்தைகளில் ஏற்பட்ட அழுத்தத்தினை தளர்த்தும் நோக்குடன், இலங்கை மத்திய வங்கியானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கிகளுக்கு வங்கித்தொழில் சட்டப் பணிப்புரைகள் வெளியிட்டன:
 • இறக்குமதிக்கான வசதிகளை இடைநிறுத்தல்
 • நாணயக் கடிதங்களின் கீழ் குறிப்பாக வங்கித்தொழில் பணிப்புரைகளின் கீழான குறிப்பாக விலக்கப்பட்டவை தவிர அனைத்து வகையான மோட்டார் வாகனங்கள்
 • ஏற்றுக் கொள்ளல் மற்றும் முற்பணக் கொடுப்பனவிற்கெதிரான ஆவணங்கள், நாணயக் கடிதங்களின் கீழான பணிப்புரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பொருட்கள்;
 • இலங்கை நாட்டிற்கான  பன்னாட்டு முறிகளின் கொள்வனவினை இடைநிறுத்தல்

இரண்டு வழிமுறைகளும் மூன்று மாத காலப்பகுதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டன.

 • 2020 மார்ச் 19: கேள்விப் பக்கத்திலிருந்து செலாவணி விகிதத்தின் மீதான அழுத்தத்தினை மேலும் தளர்த்தும் பொருட்டு, ஏதேனும் நோக்கத்திற்காக வெளிநாட்டிற்குப் பயணம் செய்த இலங்கையை வதிவிடமாகக் கொண்ட நபர்களுக்கு பயணப் படியாக முன்னர் அனுமதிக்கப்பட்ட பயணப் படி ஐ.அ.டொலர் 10,000 இலிருந்து உயர்ந்தபட்சம் ஐ.அ.டொலர் 5,000 வரையான வெளிநாட்டு நாணயத் தாள்களை (அல்லது பிற வெளிநாட்டு நாணயத்திற்குச் சமமான) வழங்குவதற்கு அவர்களுக்கு அறிவிக்கும் முகமாக மத்திய வங்கியானது அதிகாரமளிக்கப்பட்ட விநியோகத்தர்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
 • 2020 மார்ச் 20: 2020 மார்ச் 19 இல் வெளியிடப்பட்ட வங்கித்தொழில் சட்டப் பணிப்புரைகளுடன் இணைந்து, 2020 ஜூன் 20 வரையான மூன்று மாத காலப்பகுதிக்கு கொடுப்பனவுகளுக்கெதிரான ஆவணங்கள் மற்றும் திறந்த கணக்குக் கொடுப்பனவு நியதிகளின் கீழ் குறிப்பிட்ட அத்தியாவசியமற்ற நுகர்வோர் பொருட்களின் இறக்குமதியினை உடனடியாக நடைமுறைக்குவரும் வகையில்  மூலம் வெளிநாட்டுச் செலாவணியை விடுவிப்பதற்கு இடைநிறுத்தக்கோரி இலங்கை மத்திய வங்கியானது அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு பணிப்புரைகளை வழங்கியது.
 • 2020 மார்ச் 20: உலகளாவிய நோய்த்தொற்று நிலைமை ஊடாக தோற்றுவிக்கப்பட்ட நிச்சயமற்ற தன்மையின் காரணமாக வெளிநாட்டு திரவத்தன்மை மூலங்களுக்கான திரவத்தன்மை மட்டுப்படுத்தப்பட்டதனால் வெளிநாட்டு ஒதுக்குகளைக் குறைவடையாது கால அடிப்படையில் வெளிநாட்டு நாணயத் திரவத்தன்மையினை வழங்குவதற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு  விற்பனை செய்தல் – கொள்வனவு செய்தல் வெளிநாட்டுச் செலாவணிப் பரிமாற்ற ஏலங்களை  மத்திய வங்கியானது  அறிமுகப்படுத்தியது. இத்தகைய ஏலங்களில், மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் மொத்தமாக ஐ.அ.டொ.280 மில்லியனை உட்செலுத்தியது.
 • 2020 ஏப்ரல் 02: நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்கு நிலைமையைப் பாதுகாக்கும் நோக்குடன், செலாவணி விகிதத்தின் மீதான தற்போதுள்ள அழுத்தத்தினைக் குறைப்பதற்கும், கொவிட் – 19 நோய்த்தொற்றின் காரணமாக இலங்கைப் பொருளாதாரத்திற்கு சாத்தியமான எதிர்மறைத் தாக்கங்களைக் கருத்திற்கொண்டும், மூன்று மாத காலப்பகுதிக்கு பின்வரும் தற்காலிக ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு நாணயச் சபையின் பரிந்துரையுடன் கௌரவ நிதி அமைச்சர் கட்டளையொன்றினை வழங்கினார்.
 • பின்வருவனவற்றைத் தவிர்த்து, இலங்கையில் வதியும் நபர்களினால் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கான நோக்கத்திற்காக வெளிமுக முதலீட்டுக் கணக்கினூடாக வெளிமுக பணவனுப்பல்களை மேற்கொள்வற்கு வழங்கப்பட்ட பொது அனுமதியை இடைநிறுத்துதல்.
 • வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கைக்கு வெளியே வதியும் நபர் ஒருவரிடமிருந்து முதலீட்டாளாரால் பெறப்பட்ட செலாவணிக் கடன் ஒன்றிற்கு நிதியளிக்கப்பட வேண்டிய முதலீடுகள், அல்லது
 • அந்த நாட்டில் ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முதலீடுகள்.
 • நடைமுறைக் கொடுக்கல்வாங்கல்கள் மீதான பணவனுப்பல்கள் தவிர இலங்கையிலுள்ள அல்லது வதிகின்ற ஆட்கள் மூலம் பேணப்படும் வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்குகள் அல்லது தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளினூடாக வெளிமுக பணவனுப்பல்களை இடைநிறுத்தல்.
 • ஏற்கனவே புலம்பெயர் கொடுப்பனவினைக் கோரியுள்ள புலம்பெயர்ந்தோரினால் மூலதனக் கொடுக்கல்வாங்கல் ரூபாய் கணக்குகளினூடாகக் புலம்பெயர் கொடுப்பனவின் கீழ் நிதியங்களை சொந்தநாட்டிற்கு திருப்பியனுப்புவதை இடைநிறுத்தல்.
 • முதன்முறையாக புலம்பெயர் கொடுப்பனவினைக் கோரியுள்ள  புலம்பெயர்ந்தோருக்கான புலம்பெயர் கொடுப்பனவுகளுக்குத் தகைமையுடைய புலம்பெயர் கொடுப்பனவு வரையறையானது உயர்ந்தபட்சம் ஐ.அ.டொலர் 30,000 வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
 • நாணயச் சபையானது, 2017 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி (அதிகாரமளிக்கப்பட்ட வணிகர் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற மூலதனக் கொடுக்கல்வாங்கல்) ஒழுங்குவிதிகளின் அட்டவணை 1 இல் வழங்கப்பட்ட பொதுவான நிபந்தனைகளில் அவை விஞ்சுகின்ற போது விடயத்திற்கு விடயம் என்ற அடிப்படையில் முதலீடுகளுக்காக அனுமதி வழங்கும். ஆயினும்,
 • வெளிநாட்டுச் செலாவணிச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் இலங்கைக்கு வெளியே வதியும் நபர் ஒருவரிடமிருந்து முதலீட்டாளரினால் பெறப்பட்ட வெளிநாட்டுச் செலாவணிக் கடன் ஒன்றிற்காக நிதியீட்டுவதற்கு முன்மொழியப்பட்ட முதலீடாக இருத்தல், அல்லது
 • அந்த நாட்டின் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு மேற்கொள்ளப்படவிருக்கும் முன்மொழியப்பட்ட முதலீடாக இருத்தல்.
 • 2020 ஏப்ரல் 03: கொவிட் – 19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஆதரவளிப்பதற்காக மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளுடன் சேர்த்து இலங்கை ரூபாவில் வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வெளிநாட்டு நாணயக் கடன்களை அறவிடுவதற்கும் அத்தகைய வெளிநாட்டு நாணயத்திலுள்ள கடன்களின் அறவீடானது நிகழக்கூடிய சாத்தியமில்லாத போது அவசியமானவிடத்து அத்தகைய கடன்களை ரூபா குறித்துரைக்கப்பட்ட கடன்களுக்கு மாற்றுவதன் மூலம் இறுதிக் கடன்ஈவோனாக அறவிடுவதற்கு அவர்களுக்கு அறிவித்து அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டன.
 • 2020 ஏப்ரல் 08: இரட்டைப் பிரசாவுரிமையுடையவர்கள், இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிறநாட்டில் வதியும் பிரசைகள் மற்றும் நிதியங்கள், கம்பனிகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஏனைய நலன்விரும்பிகள் உள்ளடங்கலாக இலங்கைக்கு வெளியே வதியும் எவரேனும் ஆள் உள்ளடங்கலாக இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வதிகின்ற எவரேனும் தனிப்பட்ட இலங்கையருக்காக பின்வரும் விசேட அம்சங்களுடன் கூடிய சிறப்பு வைப்புக் கணக்கொன்றினை அறிமுகப்படுத்துவதற்கு நாணயச் சபையின் ஆலோசனையுடனும் அமைச்சரவையின் அனுமதியுடனும் நிதி அமைச்சர் ஒழுங்குவிதிகளை வெளியிட்டார்.
 • குறைந்தபட்சக் காலம்: 6 மாதங்கள்
 • செலுத்தத்தக்க வட்டி: 6 மாதங்கள் மற்றும் 12 மாத காலத்துடன் கூடிய சிறப்பு வைப்புக் கணக்குகளுக்கு சாதாரண வைப்புக்களின் மீது ஏற்புடைய வட்டி வீதத்திற்கு மேல் வைப்பின் முதிர்ச்சியில் செலுத்தத்தக்க முறையே ஆண்டிற்கு 1 சதவீதப் புள்ளி மற்றும் 2 சதவீதப் புள்ளிகள்.
 • நிதியங்களை சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்புதல்: தவணை வைப்புக்களின் முதிர்ச்சியின் மீது இலங்கைக்கு வெளியே தங்குதடையின்றி மாற்றக்கூடியன, சொந்தநாட்டிற்கு திருப்பியனுப்பக்கூடியன.
 • 2020 ஏப்ரல் 15: ஐ.அ.டொ. 400 மில்லியனிற்காக இந்தியா ரிசேர்வ் வங்கியுடன் இருபுடை நாணய பரஸ்பர பரிமாற்று உடன்படிக்கையினைக் கைச்சாத்திடுவதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது. பரஸ்பர பரிமாற்ற உடன்படிக்கையினை கைச்சாத்திடுவதற்கான அனைத்து அவசியமான முன்தேவைப்பாடுகளும் இலங்கை மத்திய வங்கியினால் நிறைவுசெய்யப்பட்டுள்ளது.
 • 2020 ஏப்ரல் 16: வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் வெளிநாட்டிலுள்ள அத்தகைய கடன்களின் அறவீடு நிகழக்கூடிய சாத்தியமில்லாத போது தேவையானவிடத்து இறுதிக்கடன் ஈவோனாக அறவிடப்படவேண்டும் என்பதனை அறிவித்து அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டன.
 • 2020 ஏப்ரல் 24: செலாவணி விகிதத்தில் மிதமிஞ்சிய தளம்பலினை முகாமைசெய்வதற்கு மத்திய வங்கி எதிர்நோக்கு தலையீடுகளைத் தொடங்கியது.
 • வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ஊகநடவடிக்கையினைத் தடுப்பதற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் தேறிய தேறிய திறந்த நிலைகள் தெரிவு அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்டன.
 • 2020 ஜூன் 16: அரசாங்கத்தின் எதிர்பாரா திரவத்தன்மைத் தேவைகளை நிறைவுசெய்வதற்கு நியூயோர்க்கிலிருந்து பெடரல் ரிசேர்வ் வங்கியிலிருந்து ஐ.அ.டொலர் 1,000 மில்லியனுக்கான மீள்கொள்வனவு வசதியினைத் தொடங்குவதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.

3. நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை பேணுவதற்கான வழிமுறைகள்

 • 2020 மார்ச் 27: வங்கித்தொழில் துறையின் பாதுகாப்பு மற்றும் ஆற்றல்வாய்ந்ததன்மை என்பவற்றைப் பாதிக்கின்ற மூலதன மற்றும் திரவத்தன்மை தாங்கியிருப்புக்களையும் வேறு காரணிகளையும் பரிசீலனையில்கொண்டு இலங்கை மத்திய வங்கியானது கொவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் ஆதரவளிப்பதற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கென அதிவிசேட ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்தது. அதற்கமைய பின்வரும் அதிவிசேட ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
 • முறைமை ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளுக்கு முறைமை ரீதியாக முக்கியத்துவமற்ற வங்கிகளுக்கும் அவர்களது மூலதனக் காப்புத் தாங்கியிருப்புக்களை மொத்தமாக 250 அடிப்படை புள்ளிகளிலிருந்து முறையே 100 அடிப்படைப் புள்ளிகளாலும் 50 அடிப்படைப் புள்ளிகளாலும் குறைத்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டன.
 • 2020 மார்ச் காலப்பகுதியின் போது செலுத்தவேண்டியதாக வருகின்ற கடன்கள் மற்றும் முற்பணங்களை தீர்ப்பனவுசெய்வதற்காக மேலதிக 60 நாட்களைக் கொண்ட காலத்தினை வழங்குவதற்கு உரிமம்பெற்ற வங்கிகள் அனுமதிக்கப்பட்டதுடன் வேறு சலுகைகளுக்கு உரித்தல்லாத கடன்பெறுநர்கள் தொடர்பில் 60 நாள் சலுகைக் காலத்தின் முடியும் வரை ‘கடந்தகால நிலுவை’ வசதிகளாக அத்தகைய வசதிகளை கருதாமல் இருப்பதற்கு உரிமம்பெற்ற வங்கிகள் அனுமதிக்கப்பட்டன.
 • கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் வாடிக்கையாளர் எதிர்கொண்ட சவால்களின் காரணமாக 2020 மார்ச் 16 தொடக்கம் 2020 ஜூன் 30 வரை கொடுப்பனவு நியதிகள் மற்றும் கடன் ஒப்பந்தங்களுக்கு ஆக்கப்பட்ட அனைத்து மாற்றங்களையும் கடன்கள் மற்றும் முற்பணங்களின் வகைப்படுத்தலுக்கும் சேத இழப்புக் கணிப்பிற்கும் மீள்கட்டமைப்பதற்குப் பதிலாக கடன்கள் மற்றும் முற்பணங்களுக்கான திருத்தியமைத்தல்களாக கருத்திற்கொள்வதற்கு உரிமம்பெற்ற வங்கிகளை அனுமதித்தல்.
 • அத்தகைய கடன்பெறுநருக்கு வழங்கப்பட்ட செயலாற்றமற்ற கடன்களின் அனைத்து நிலுவைத் தொகையினதும் கூட்டு மொத்தத் தொகையானது கொடுகடன் வசதிகளின் 30 சதவீதத்தினை விஞ்சுகின்ற போது கடன் பெறுநர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து கொடுகடன் வசதிகளையும் செயலாற்றமற்றவையாக வகைப்படுத்துவதற்கான தேவைப்படுத்தலினை புறக்கீடு செய்தல்.
 • கடன்பெறுநர் நாட்டின் வெளிநாட்டு ஒதுக்குகளின் தீங்கு ஏற்படுத்தி தகாத அனுகூலத்தினை பெற்றுக்கொள்ள அல்லது செலாவணி வீதத்திற்கு அழுத்தத்தினை ஏற்படுத்தமாட்டார் என்பதுடன் மேற்குறித்தவை தொடர்பில் முறையான ஆவணப்படுத்தல் பேணப்படும் என்பதனை வங்கிகள் உறுதிசெய்கின்றமைக்குட்பட்டு தேவையானவிடத்து வெளிநாட்டு நாணயத்திலுள்ள கடன்களை ரூபாய் குறித்துரைக்கப்பட்ட கடன்களுக்கான மாற்றத்தினை மற்றும் அறவீட்டினை அனுமதித்தல்.
 • குறித்த நிபந்தனைகளுக்குட்பட்டு 2020இன் இறுதியின் குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாட்டினை இன்னும் நிறைவேற்ற வேண்டிய உரிமம்பெற்ற வங்கிகள் மூலமான மூலதன அதிகரிப்பினை 2022இன் இறுதிவரை பிற்போடுதல்.
 • சீர்படுத்தலுக்காக எழுப்பப்பட்ட கரிசனைகள் பற்றிய அவசியத்திற்கு தீவிரத்தன்மைக்குஃ முக்கியத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து மேற்பார்வைக் கரிசனைகளைஃ கண்டறியப்பட்டவற்றை நிவர்த்திசெய்வதற்கான கால அட்டவணையை மீளமைத்தல். 2020 மே 30 வரையான காலப்பகுதியின் போது மேற்பார்வைக் கரிசனைகளைஃ கண்டறியப்பட்டவற்றை நிவர்த்தி செய்வதற்கான கால அட்டவணையினை நிறைவுசெய்வதற்கு தேவைப்படுத்தப்பட்டுள்ள வங்கிகளுக்கு மூன்று மாதங்களைக் கொண்ட நீடிப்பொன்று வழங்கப்படவேண்டும்.
 • வங்கி மேற்பார்வைத் திணைக்களத்திற்கான நியதிச் சட்டத் திரட்டுகளைச் சமர்ப்பிப்பதற்கான அறிக்கையிடும் காலப்பகுதியினை இரு வாரங்களினால் நீடித்தல் மற்றும் காலாண்டு நிதியியல் கூற்றுக்களின் வெளியீட்டினை மறு அறிவித்தல் வரை ஒரு மாதத்தினால் நீடித்தல். சூழ்நிலைகளைச் சார்ந்து வங்கி மேற்பார்வைப் பணிப்பாளர் மேலதிக நீடிப்புக்களை அனுமதிக்கலாம்.
 • 2020 மார்ச் 31: கொவிட்-19 நோய்த்தொற்று மூலம் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் ஆதரவளிப்பதற்காக உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும், சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கும் வசதியளிப்பதற்கு பின்வருமாறு நெகிழ்வுத் தன்மையினை வழங்குவதற்கான பல எண்ணிக்கையான வழிமுறைகளை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியது:
 • திரவத்தன்மைச் சொத்துத் தேவைப்பாட்டினை பேணுகையினைக் குறைத்தல், அதாவது, வைப்பாளர்கள் மூலம் திடீர் காசு மீளெடுப்பு மற்றும் கடன் வாடகைகளின் மீள்கொடுப்பனவின்மை காரணமாக உடனடியாக நடைமுறைக்குவரும் வகையில் ஆறு மாத காலப்பகுதிக்கு அத்துடன் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளினால் பேணப்பட வேண்டிய கால வைப்புகளுக்கும் கைமாற்றத்தகாத வைப்புச் சான்றுகளுக்கும் 10 சதவீதத்திலிருந்து 6 சதவீதத்திற்கும், சேமிப்பு வைப்புகளுக்கு 15 சதவீதத்திலிருந்து 10 சதவீதத்திற்கும் கடன் பெறுதலுக்கு 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கும் அத்துடன் அனுமதிக்கப்பட்ட அரசாங்கப் பிணையங்களுக்கு 7.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கும் குறைத்தல் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளால் பேணப்படவேண்டிய குறைந்தபட்ச திரவத்தன்மை சொத்துத் தேவைப்பாட்டினை 15 சதவீதத்ததிலிருந்து 5 சதவீதமாகக் குறைத்தல்.
 • குறைந்தபட்ச மைய மூலதனத் தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுகுவதற்கு ஒரு ஆண்டினைக் கொண்ட நீடிப்பு அதற்கமைய, ரூ.2 பில்லியன் மற்றும் ரூ.2.5 பில்லியன் வரை மூலதன அதிகரிப்பிற்காக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 2020 சனவரி 01 மற்றும் 2021 சனவரி 01 கால அட்டவணை முறையே 2020 திசெம்பர் 31 மற்றும் 2021 திசெம்பர் 31 வரை நீடிக்கப்படவுள்ளது.
 • 2020 ஜூலை 01 மற்றும் 2021 ஜூலை 01 அன்று உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் மூலம் நிறைவேற்றப்படவேண்டிய குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடுகளின் அதிகரித்தல்களை முறையே 2021 ஜூலை 01 மற்றும் 2022 ஜூலை 01 வரை ஒரு வருட மேலதிக காலப்பகுதிக்கு பிற்போடுதல்.
 • அத்தகைய, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள்ஃ சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் சாதாரண தொழிற்பாடுகள் ஆரம்பித்து இரு வாரங்களினுள் வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்திற்கு நியதிச்சட்ட திரட்டுக்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதிகளைத் தளர்த்தல்.
 • 2020 ஏப்ரல் 08: உரிமம்பெற்ற நுண்நிதிக் கம்பனிகளின் திரவத்தன்மை இன்னல்களை நிறைவேற்றுவதற்கு உதவுவதற்காக குறைந்தபட்ச திரவத்தன்மை சொத்துகள் விகித பேணுகை மீதான 2016இன் 04ஆம் இலக்க நுண்நிதிச் சட்டப் பணிப்புரைகளின் கீழ் திரவத்தன்மைச் சொத்துக்களை பேணுவதற்கான தேவைப்படுத்தல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் புறக்கீடு செய்யப்பட்டது.
 • 2020 மே 05: உரிமம்பெற்ற வங்கிகள் 2021 ஜூன் 30 வரை நியதித் திரவத்தன்மை சொத்து விகிதக் கணிப்பில் திரவத்தன்மை சொத்துக்களாக பின்வரும் சொத்துக்களை கருத்திற்கொள்வதற்கு உரிமம்பெற்ற வங்கிகள் அனுமதிக்கப்பட்டன.
 • திறைசேரிக்கான பிரதிச் செயலாளரின் மேலதிகப் பற்றுக் கணக்கு (உச்சம் 50 சதவீதம், ரூ.50 பில்லியனை விஞ்சாத)
 • சிரேஷ்ட பிரஜைகள் விசேட வைப்புத் திட்டம் மீதான கொடுப்பனவு செய்யப்படாத வட்டி உதவுதொகை
 • அரசாங்கத்தினால் உத்தரவாதமளிக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களின் சொத்து முதலீட்டுத் தொகை மற்றும் இலங்கை நிதி அறிக்கையிடல் நியமம் 9இன் கீழ் கட்டம் 1இல் வகைப்படுத்தப்பட்ட: 10 சதவீதம் கொண்ட உச்சத்துடன் கூடிய ஒரு வருடத்தை விஞ்சாத முதிர்ச்சியுடனான நிதியியல் அறிக்கை நோக்கங்களுக்கான நிதியியல் சாதனங்கள்.
 • வேறு வங்கிகளில் வங்கிகளினால் வைத்திருக்கப்படும் நிலையான வைப்புக்கள் (ஒரு வருடத்தினை விஞ்சுகின்ற ஆனால் இரண்டு வருடத்திற்கு குறைவான அல்லது சமமான எஞ்சியுள்ள முதிர்வு உச்சம் 20 சதவீதமாக இருக்க வேண்டும் மற்றும் எஞ்சியுள்ள காலம் இரண்டு வருடங்களை விஞ்சுமாயின் ஆனால் மூன்று வருடங்களுக்குக் குறைவான அல்லது சமமாக இருக்குமாயின் உச்சம் 30 சதவீதமாக இருக்க வேண்டும்).
 • வைப்புக்களின் 20 சதவீதத்திற்கு சமமான சொத்துக்களின் கீழ் வைப்புக்களினால் பிணையளிக்கப்பட்ட கடன்கள்.
 • கடன் தீர்ப்பனவில் ஊழியர் சேம நிதியத்திலிருந்து கிடைக்கத்தக்கவை.
 • 2020 மே 05: திரவத்தன்மை உள்ளடக்க விகிதம் மற்றும் தேறிய நிலையான நிதியளித்தல் விகிதத்திற்கான குறைந்தபட்சத் தேவைப்பாட்டினை 2021 ஜூன் 30 வரை அதிகரிக்கப்பட்ட மேற்பார்வை மற்றும் அவ்வப்போதான அறிக்கையிடலுடன் 90 சதவீதத்திற்கு குறைப்பது பற்றி உரிமம்பெற்ற வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
 • 2020 மே 06: சுயதொழில் மற்றும் தனிப்பட்டவர்கள் உள்ளடங்கலாக கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மீதான 2020இன் 04, 05, 06ஆம் இலக்க சுற்றறிக்கை மீதான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், அதிவிசேட ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகள் மீதான 2020 மார்ச் 27ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மற்றும் உரிமம்பெற்ற வங்கிகளின் அடகு முற்பணங்கள் மீதான உயர்ந்தபட்ச வட்டி வீதங்கள் மீதான 2020இன் 01ஆம் இலக்க நாணயவிதிச் சட்டக் கட்டளை என்பன இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்தில் வெளியிடப்பட்டன.
 • 2020 மே 13: உரிமம்பெற்ற வங்கிகளின் திரவத்தன்மை நிலையினை வலுப்படுத்தும் நோக்குடன் மத்திய வங்கியானது 2020 திசெம்பர் 31 வரை உரிமம்பெற்ற வங்கிகளின் பின்வரும் தற்றுணிவுக் கொடுப்பனவுகளைக் கட்டுப்படுத்தியது.
 • 2019ஆம் நிதியாண்டுக்கான ஏற்கனவே பிரகடனப்படுத்தப்படாத காசு பங்கிலாபங்களையும் 2020ஆம் நிதியாண்டிற்கான ஏதேனும் இடைக்கால காசுப் பங்கிலாபங்களையும் பிரகடனப்படுத்தல்.
 • 2019 மற்றும் 2020ஆம் நிதியாண்டுகளுக்காக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்படாத இலாபங்களை தாய்நாட்டிற்கு அனுப்புதல்.
 • அதன் சொந்தப் பங்குகளை மீளக் கொள்வனவு செய்தல்.
 • பணிப்பாளர் சபைக்கான முகாமைத்துவப் படிகளையும் கொடுப்பனவுகளையும் அதிகரித்தல்.
 • மேலும், விளம்பரப்படுத்தல், வர்த்தக ஊக்குவிப்புக்கள், அனுசரணைகள், பயணங்கள் மற்றும் பயிற்சிகள் போன்ற அத்தியாவசியமில்லாத செலவினம் ஏற்படுவதிலிருந்து முடிந்தவரை அதிகளவில் முன்மதியுடன் செயற்படுமாறும் தவிர்ந்துகொள்ளுமாறும் உரிமம்பெற்ற வங்கிகள் வேண்டப்பட்ட அதேவேளை மேற்குறித்த காலப்பகுதியின் போது ஏற்படுகின்ற மூலதனச் செலவினத்தின் போது மிகுந்த உரிய விழிப்புக் கவனத்தினையும் முன்மதியினையும் பிரயோகிக்குமாறும் உரிமம்பெற்ற வங்கிகள் வேண்டப்பட்டன.
 • 2020 ஜூன் 12: கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான கொடுகடன் ஆதரவுத் திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் காரணமாக உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் திரவத்தன்மை நிலைக்கு துணையளிக்கும் நோக்குடனும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் வேறு அவசர திரவத்தன்மைகளை நிறைவேற்றுவதற்கான தேவையுடனும் நாணயச் சபையானது இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை துணையளிப்புத் திட்டத்தின்கீழ் விகிதாசார அடிப்படையில் படுகடனை காலம் தாழ்த்திச் செலுத்துவதற்கான சட்ட ரீதியான உரிமை காரணமாக எதிர்பார்க்கப்பட்ட உயர்ந்தபட்ச வட்டி வருமான இழப்புக்களின் அடிப்படையில் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்காக மொத்தமாக ரூ.20 பில்லியன் தொகையினை திரவத்தன்மை உதவியாக வழங்குவதற்கு நாணயச் சபை தீர்மானித்திருந்தது.
 • 2020 ஜூன் 19: 2020 மார்ச் 19 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கை நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை கொள்வனவு செய்வதன் மீது விதிக்கப்பட்ட இடைநிறுத்தமானவை வங்கிகளுக்கான புதிய வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலினைப் பயன்படுத்துவதன் மூலம் அத்தகைய நாட்டிற்கான பன்னாட்டு நாணய முறிகளின் கொள்வனவுகளுக்கு நிதியளிக்கப்படுமென்ற விடயத்திற்குட்பட்டு மேலதிகமாக மூன்று மாதங்களினால் மேலும் நீடிக்கப்பட்டது.

4. தடங்கலற்ற நாணயத் தொழிற்பாடுகள் மற்றும் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளை உறுதி செய்வதற்கான வழிமுறைகள்

 • தொழில் தொடர்ச்சித் திட்டத்தை செயற்படுத்தி, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளின் தடங்கலற்ற தொழிற்பாடுகளை உறுதிசெய்தது.
 • நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கு முகாமைத்துவத் தொழிற்பாடுகளுக்கு தடங்கலற்ற தீர்ப்பனவுகளை மேற்கொள்வது, நாட்டின் வெளிநாட்டுப் படுகடன்  கடப்பாடுகளை பூர்த்திசெய்வதற்கும் அரசின் வெளிநாட்டுச் செலாவணித் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கும் வெளிநாட்டு நாணய நியதிகளில் போதுமான திரவத்தன்மையைப் பேண முடிந்தது.
 • 2020 மார்ச் 17: அவசரத் தேவையின் போது பணத்தை மீளெடுப்பதற்கு ரூ.500 மில்லியனாக உச்சவரம்பை அதிகரித்தது, மற்றும் முடக்கல் காலப்பகுதியின் போது பணத்திற்கான பொதுமக்கள் கேள்விகளைப் பூர்த்திசெய்வதற்காக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் மாதமொன்றுக்கு (வங்கியொன்றிற்கு) இரண்டு அவசரத் தேவையின் போது பணத்தை மீளெடுப்பதற்கான வரையறையை  2020 மே 15 வரை தளர்த்தியது.
 • கொவிட்-2019 நோய்த்தொற்றுத் தாக்கம் காரணமாக பயணக்கட்டுப்பாடுகளினால் அக் காலப்பகுதியில் இணையவழியூடாக வங்கிக் கொடுக்கல்வாங்கல்களை  மேற்கொள்வதற்கான தேவைப்பாட்டைக் கருத்திற்கொண்டு, வாடிக்கையாளர்கள் இணையவழியூடான கொடுக்கல்வாங்கல்களுக்குப் பதிவுசெய்ய வசதியாக பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன்
 • 2020 மார்ச் 20: இணையவழியூடான வங்கிச் சேவைகளை வழங்குவதற்கான பதிவுக் கட்டணங்கள் மற்றும் அறவீடுகளைத் தள்ளுபடி செய்வதற்கும் ஏற்கனவேயுள்ள வாடிக்கையாளர்கள் பதிவுசெய்வதற்காக வங்கிக் கிளைகளில் நேரடியாக சமூகமளிக்காமல் இணையவழியூடான வங்கி உற்பத்திகளுக்குப் பதிவுசெய்ய வசதி செய்வதற்கும் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
 • 2020 மார்ச் 26: உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் (KYC) தேவைப்பாடுகளை டிஜிட்டல் முறையில் முழுமையாகப் பூர்த்திசெய்வதன் மூலம் பணப்பையை அல்லது பணப்பையை வசதிப்படுத்தும் கணக்குகளைத் திறப்பதற்கு நிதி நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. எனினும், வழங்கப்பட்ட திகதிக்கு முன்னர் உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் விபரங்களைப் பௌதீக ரீதியாக சரிபார்க்க நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.
 • 2020 மார்ச் 30: இ-பணம் கணக்கு வைத்திருப்பவர்களின் கொடுக்கல்வாங்கல்களை வசதிப்படுத்துவதற்காக இக்காலப்பகுதியில் தற்காலிகமாக ரூ. 10,000 பணப்பை வரையறையை ரூ. 25,000 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதலளிக்கப்பட்டது.
 • 2020 ஏப்ரல் 01: லங்கா கிளியர் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் ஜஸ்ட்பே கொடுப்பனவுத் தீர்வு மூலம் மேற்கொள்ளப்படும் செல்லிடத்தொலைபேசி செயலி அடிப்படையிலான கொடுக்கல்வாங்கல்களுக்கான உயர்ந்தபட்ச கொடுக்கல்வாங்கலொன்றுக்கான பெறுமதி வரையறையை ரூ.10,000 இலிருந்து ரூ. 25,000 வரை அதிகரித்தது.
 • பணத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக பின்வரும் ஒப்புதல்கள் வழங்கப்பட்டன:
 • 2020 ஏப்ரல் 02: பணவனுப்பல் சேவை வழங்குநருக்கு பணத்தினை வீட்டிற்கே விநியோகிக்கும் சேவையாக வழங்குவதற்கு ஒப்புதலளிக்கப்பட்டமை, இக்காலப்பகுதியில் பயனாளிகளுக்கு வெளிநாட்டு பணவனுப்பல்களை விநியோகிப்பதற்கு உதவியது.
 • 2020 ஏப்ரல் 04: இக்காலப்பகுதியில் தன்னியக்கக் கூற்றுப் பொறியிலிருந்து பணத்தை மீளெடுப்பதிலுள்ள சிரமத்தைக் கருத்திற்கொண்டு, வீட்டு வாசலுக்கே பண விநியோகச் சேவைகளை வழங்குவதற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிக்கு ஒப்புதலளிக்கப்பட்டது.
 • 2020 ஏப்ரல் 06: தன்னியக்கக் கூற்றுப் பொறியிலிருந்து ஓய்வூதியத் தொகையை மீளெடுப்பதற்கு வசதிப்படுத்த வேண்டும் என்ற அரசாங்க வேண்டுகோளிற்கிணங்க, பொது தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி மூலம் இணைக்கப்பட்ட தன்னியக்கக் கூற்றுப் பொறிகளிலிருந்து பணத்தை மீளெடுப்பதற்கு மூத்த பிரசைகளிடமிருந்து அறவிடப்படும் கட்டணத்தைத் தள்ளுபடிசெய்ய நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
 • 2020 ஏப்ரல் 10: செல்லிடத்தொலைபேசி அடிப்படையிலான இ-பணம் முறைமையில் வணிகர்களுக்கு பொருந்தக்கூடிய வரையறைகள் இக்காலப்பகுதியில் அதிகளவான டிஜிட்டல் கொடுக்கல்வாங்கல்களை வசதிசெய்யும் பொருட்டு மேம்படுத்தப்பட்டன.
 • 2020 மே 12: உலகளாவிய தொற்றுநோயைக் கருத்திற்கொண்டு 2020 ஏப்ரல் 01 இலிருந்து 2020 ஜூன் 30 வரையான மூன்று மாத காலப்பகுதிக்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் மூலம் நாணயத் தாள்கள் வைப்புக்கள் (பயன்படுத்தக்கூடிய உரித்தான நாணயத் தாள்கள்) மீதான சேவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தது.
 • 2020 மே 15: ரூ. 500,000 பெறுமதிக்குக் குறைவான காசோலைகளின் செல்லுபடியான காலப்பகுதியை 2020 மே 31 வரை நீடிக்கப்பட்டது.
 • 2020 ஜூன் 04: இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேம நிதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட காசோலைகளின் செல்லுபடியான காலப்பகுதியை 2020 ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டது.
 • 2020 ஜூன் 08: வாடிக்கையாளர் கணக்குகள் மூலம் இணையவழியூடான கொடுப்பனவுகளை இயக்கும் லங்கா பே இணையவழியூடான கொடுப்பனவுத் தளத்தின் மூலம் அரச மற்றும் ஏனைய நிறுவனங்களுக்குக் கொடுப்பனவுகளின் உயர்ந்தபட்ச கொடுக்கல்வாங்கலொன்றுக்கான பெறுமதி வரையறையை அதிகரிப்பதற்குக் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
 • மேலும், நாட்டில் பயணக் கட்டுப்பாடுகளுடன் இக்காலப்பகுதியில் டிஜிட்டல் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாட்டினைக் கருத்திற்கொண்டு முன்னோடி அடிப்படையில் தொழிற்படுவதற்குப் பல்வேறு செல்லிடத்தொலைபேசி செயலிகள் அடிப்படையிலான கொடுப்பனவு உற்பத்திகளுக்கு ஒப்புதலளிக்கப்பட்டது.

5. பொதுப்படுகடனினை பேணுவதற்கும் இடைவிடாத படுகடன் தீர்ப்பனவினை உறுதிசெய்வதற்குமான வழிமுறைகள்

 • 2020இன் இதுவரையான காலப்பகுதியில் ரூ.1 ட்ரில்லியனுக்கும் அதிகளவான தொகையுடைய திறைசேரி முறிகள், திறைசேரி உண்டியல்கள் மற்றும் இலங்கைக்கான அபிவிருத்தி முறிகள் ஏலங்களை தடையின்றி தொடர்ந்தும் நடத்தியிருந்தது. 2020 ஜூன் மாதத்தின் நடுப்பகுதி வரையான மூன்று மாத காலப்பகுதியினுள், ஏல அடிப்படையிலான நிதியிடல் ரூ.600 பில்லியனுக்கு அதிகமாகக் கணக்கிடப்பட்டது. மேலும், மாதத்திற்கு ஒரு முறையாக அமைக்கப்பட்டிருந்த திறைசேரி முறிகளின் ஏலங்களிலிருந்து விலகி, அரசாங்கத்தின் நிதியிடல் தேவைப்பாடுகளுக்கு நிதியிடுவதற்கு 2020 மே மற்றும் ஜூன் மாதகாலப்பகுதியில் திறைசேரி முறிகளின் ஏலங்களின் தடவை இரண்டாக அதிகரிக்கப்பட்டது.
 • 2020 மே 13: அரச வங்கிகளில் மேலதிகப் பற்று வசதி போன்ற அரசாங்கத்தின் நிதிப்பாய்ச்சல் முகாமைத்துவத்தின் ஏனைய கருவிகளில் திருத்தங்களை அனுமதிப்பதற்கு புத்தக மதிப்பின் அடிப்படையில் ரூ.100 பில்லியன் அளவுக்கு திறைசேரி முறிகள் நிருவாக ரீதியில் வழங்கப்பட்டது.
 • முடக்கத்திற்கு மத்தியிலும், 2020இன் இதுவரையான காலப்பகுதியில் 1.5 றில்லியனுக்கும் அதிகமான படுகடன் தீர்ப்பனவு சேவைகளுடன் இலங்கையில் வரலாற்றுக் கறைபடாத படுகடன் தீர்ப்பனவு பேணப்பட்டது.
 • அரசாங்கத்தின் படுகடன் கொடுப்பனவுகள் அரசாங்கத்தின் வெளிநாட்டு ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி வழக்கமாக தீர்க்கப்பட்டது. முன்னர் இடம்பெற்றிராத பாதகமான சந்தை நிலைமைகளின் காரணமாக அரசாங்கத்தினால் போதியளவான திரவத்தன்மையினை உருவாக்கிக்கொள்ளமுடியாமல் இருந்தமையினால், 2020 ஏப்ரல் 08 இலிருந்து இலங்கை மத்திய வங்கியானது, இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு ஒதுக்குகளிலிருந்து திரவத்தன்மையினை தொடர்ந்தும் வழங்கியது. அதன்படி, 2020 ஏப்ரல் 08 தொடக்கம் ஜூன் 22 வரையான காலப்பகுதியில், இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு ஒதுக்குகளை பயன்படுத்தி ஐ.அ.டொலர் 1,007 மில்லியன் அரசாங்கப் படுகடனை இலங்கை மத்திய வங்கி தீர்ப்பனவு செய்திருந்தது.
SHARE