பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு

17

பொதுத் தேர்தலின்போது வாக்களிப்பின் பின்னர் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் அல்லது வீதி ஓரங்களில் நிற்பதை தவிர்த்துகொள்ளுமாறு  தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் வாக்களிப்பின் பின்னர் வாக்குச்சீட்டுகளை உரிய முறையில் மடித்து வாக்கு பெட்டியினுள் போடப்பட வேண்டும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முடிந்தளவு விரைவாக வீடுகள் அல்லது சேவை நிலையங்களுக்கு திரும்ப வேண்டும் என்றும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் நேரத்தை வீணடிப்பதை தவிர்த்துகொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.

அனைத்து சுகாதார நடைமுறைகளும் பின்பற்றபட்ட முழுமையாக வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள அவர், எனவே அனைவரும் அச்சமின்றி வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் இடம்பெறும் தினம் இரவு வாக்கு பெட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மேலதிகமாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய தேர்தல் அதிகார பகுதியில் தலா இரண்டு பேர் என்ற அடிப்படையில் அனைத்து கட்சிகளுக்கும் வாக்கெண்ணும் நிலையக வளாகத்தில் தமது பிரதநிதிகளை வைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், “வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் போது, முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் முன்னர், உங்கள் கைகள் சுத்தப்படுத்தப்படுத்தப்படும். அதன்பின்னரே முதலாவதாக அமர்ந்துள்ள அதிகாரியிடம் உங்களின் அடையாள அட்டை காண்பிக்கப்பட வேண்டும், வாக்களிப்பு நிலையங்களிலிருந்து செல்லும்போதும் உங்களின் கைகள் சுத்தம் செய்யப்படும்.

வாக்களிப்பு நிலையங்களில் ஒரு மீற்றர் இடைவௌி பேணப்படும். உங்களுக்கு இயலுமானால் நீங்கள் வருகை தரும் போது நீலம் அல்லது கறுப்பு நிற பேனையை எடுத்து வாருங்கள். அவ்வாறு பேனை கொண்டு வரப்படவில்லை எனின், தொற்று நீக்கம் செய்யும் திரவத்தில் நனைத்த பேனை உங்களுக்கு வழங்கப்படும்” என மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

SHARE