87ம் ஆண்டு ஒப்பந்தத்திலேயே தமிழர் பூர்விகம் சொல்லப்பட்டுள்ளது – சி.வி.கே.சி பதிலடி!

39

 

87ம் ஆண்டு ஒப்பந்தத்திலேயே தமிழர் பூர்விகம் சொல்லப்பட்டுள்ளது – சி.வி.கே.சி பதிலடி!

தமிழர்களுடைய வரலாற்று உண்மையை கூறிய விக்னேஸ்வரனை கைது செய்வோம் என கூறுவது வேடிக்கையான விடயம் என வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மரபுரிமை செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேத்தானந்த தேரர் தெரிவித்த கருத்து தொடர்பாக மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“தமிழர்களுடைய பூர்வீக அடையாளங்கள், இந்து ஆலயங்கள் பரவிக்கிடக்கின்றன. இலங்கை பூராகவும் உலகம் பூராகவும் அதிலும் வடக்கு- கிழக்கில் வரலாறுகள் கல்வெட்டுக்கள் பெருமளவில் காணப்படுகின்றன

அதனைவிட 1987ம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஜே.ஆர்.ஜெயவர்த்தன – ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தில் வடக்கு- கிழக்கு பிரதேசங்கள் தமிழ் பேசும் மக்களுடைய வரலாற்று ரீதியான வாழ்விடம் என்று இரண்டு அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த எல்லாவல மேத்தானந்த தேரரை விட ஆயிரம் மடங்கு வரலாறு தெரிந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார். வரலாற்று ரீதியாக, ஆவண ரீதியாக இந்த மண்ணிலேயே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்குஆதாரங்கள் உண்டு.

அதனைவிட வேறு எந்த ஆவணம் வேண்டும் இந்த எல்லானந்த தேரருக்கு, இது ஏற்கனவே எப்போதுமே நான் பேசிக் கொண்டு இருக்கின்ற ஒரு விடயம் அதைத்தான் விக்னேஸ்வரனும் தனது கருத்தாக தெரிவித்திருக்கின்றார்.

அவர் புதிதாக எதையும் இறக்குமதி செய்து கூறவில்லை அவர் வரலாற்றைத்தான் தெரிவித்திருந்தார். ஆனால் தற்பொழுது நாங்கள் கெட்டிக்காரர்கள், சிங்கள ஏகாதிபத்தியம், சிங்கள மேலாதிக்கம் ஒரு மொழி, ஒரு இனம் வாடகை வீட்டில் குடியிருப்போர் என்று பல்வேறுபட்ட கருத்துகளை தென்னிலங்கையில் தெரிவித்து வருகின்றார்கள். எனவே வரலாற்று ரீதியாக நாங்கள்தான் பூர்வீக குடிகள் அது பெரிய விடயமுமில்லை

கடந்த 2000 ஆண்டுகளாக சிங்களவர்களும் தமிழர்களும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நான் பெரிது நீ பெரிதென்று இல்லாமல் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வரலாற்று ரீதியாக அவர்களும் வாழ்ந்திருக்கின்றார்கள். அதை வைத்துக்கொண்டு விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் அவரது கடவுச்சீட்டைப் பறிக்கவேண்டும் என்று அச்சுறுத்தல்விடுதல் என்பது ஒரு வேடிக்கையான விடயமாக காணப்படுகின்றது

பெரிய விடயம் என்னவென்றால் கிழக்கு மரபுரிமை செயலணிக்கு அவர் ஒரு பெரிய முக்கிய உறுப்பினராகவுள்ளார். இனிவரும் காலங்களில் எவ்வாறான சிபாரிசுகளை செய்யவுள்ளார். அதிலும் தமிழருக்கு இந்துக்களுக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவாரோ என்ற கேள்வியும் எழுகின்றது” – என்றார்.

SHARE