ஒருநாள் தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை – கம்மின்ஸ்

34
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யவில்லை - கம்மின்ஸ்

கம்மின்ஸ்
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி, மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 27-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்தியா வுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று ஆஸ்திரேலியா வேகப்பந்து வீரர் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல். போட்டியில் அவர் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடினார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி அணியில் அவர் இடம் பெற்றுள்ளார்.

ஐ.பி.எல். போட்டிக்காக தொடர்ந்து 3 மாதங்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு (பயோபபுள்) வட்டத்தில் இருந்த கம்மின்ஸ் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக மீண்டும் அந்த வட்டத்துக்குள் உடனடியாக வரவேண்டி உள்ளது.

இதன்காரணமாகவே அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கம்மின்ஸ் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு பாதுகாப்பு மையத்தில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் நீண்டகாலம் இருக்க வேண்டி உள்ளது. அப்போது அனைத்தையும் வெளிப்படையாக பேச வேண்டி உள்ளது.

ஐ.பி.எல். போட்டியை பொறுத்த வரை வழக்கமாக ஒரு ஆட்டத்தின் அடுத்த நாளிலேயே நாங்கள் விமானத்தில் பயணிக்க வேண்டி இருக்கும். இது ஆட்டத்தின் போது ஒருவித களைப்பை ஏற்படுத்தலாம்.

ஆனால் பயோபபுள் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் அதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை என்பது நல்லதாக அமைந்தது.

இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஒரு டெஸ்டில் மட்டுமே ஆடுகிறார். அவர் 3 டெஸ்டில் ஆடாதது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமா? என்பதை இப்போது எதுவும் சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

SHARE