பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் இங்கிலாந்து

44

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 16 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரி-20 தொடரில் விளையாடவுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, ஆரம்பத்தில் இங்கிலாந்தை ஜனவரி மாதம் விளையாடுவதற்கு நாட்டிற்கு அழைத்திருந்தது.

ஆனால் இங்கிலாந்து அணி, ஏற்கனவே ஜனவரி மாதம் இலங்கையில் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. அத்துடன் சில வீரர்கள் பிக் பேஷ் தொடரில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆகையால் ஜனவரி மாதத்தில் விளையாடுவது நிச்சயமற்று போனது. ஆகவே, ஒக்டோபர் தொடரை நடத்துவதற்கு மிகவும் சாத்தியமான நேரமாக இருக்கும் என்று இரு சபைகளும் ஒப்புக் கொண்டன.

இதனடிப்படையில், ரி-20 உலகக்கிண்ண தொடரின் முன்னோட்ட தொடராக இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

இத்தொடரில் நடைபெறும் இரண்டு போட்டிகளும் கராச்சி தேசிய மைதானத்தில் ஒக்டோபர் 14ஆம் மற்றும் 15ஆம் ஆகிய திகதிகளில் நடைபெறும்.

தொடர் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து பாகிஸ்தானுக்கு வந்து ஒக்டோபர் 16ஆம் திகதி இந்தியாவில் நடைபெறும் ரி-20 உலகக் கிண்ண தொடருக்கு புறப்படும்.

கடந்த 2005ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றிருந்தது. இந்த இரு தொடர்களையும் இழந்தது.

ஆனால், 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, 2012ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுகளில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு அணிகளும் விளையாடியது.

SHARE