பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் முக்கியமான கண்காட்சியாக இது உள்ளதால் அனைவரையும் பார்வையிட வருமாறு மருத்துவ மாணவர்கள்

சர்வதேச தலசீமியா தினத்தையொட்டி கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அனுசரணையுடன் தலசீமியா நோய் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் நேற்று இடம்பெற்றது.

வேகமாக மக்களை ஆட்கொண்டுவரும் தலசீமியா நோயில் இருந்து மக்களை விழிப்படைய செய்யும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி. எஸ். எம். சாள்ஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கண்காட்சியை  நேற்று ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி கிறேஸ், சிறுவர் வைத்திய நிபுணர் திருமதி சித்திரா வாமதேவன், உளநலப் பிரிவின் வைத்தியக் கலாநிதி என். கடம்பநாதன், வைத்தியக் கலாநிதி தயாரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சி இன்று காலை 8.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை நடைபெறும்.

கடந்த வாரம் 5 ஆவது தொகுதி மருத்துவ மாணவர்கள் மட்டக்களப்பில் உள்ள தேசிய பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு தலசீமியா நோய் வழிப்புணர்வூட்டும் வேலைத் திட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இந்த விழிப்பூட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் முக்கியமான கண்காட்சியாக இது உள்ளதால் அனைவரையும் பார்வையிட வருமாறு மருத்துவ மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.