பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி : நினைவுத்தூபி மீண்டும் நிர்மானம்

52

 யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்காலில் கொலை செய்யப்பட்டவர்களுக்காக அதன் நினைவாக தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த தூபி கடந்த 3 வருடங்களுக்கு மேலாக அங்குள்ளது. வருடந்தோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பல்கலைக்கழக மாணவர்கள் அனுஷ்டிப்பது வழக்கம். இவ்வாறு இருக்கையில் திடீரென அந்த நினைவுத்தூபி பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராசா தலைமையில் பைக்கோ இயந்திரத்தால் இடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புச் செயலாளர் தாம் இந்த தூபியை இடிக்க கூறவில்லை என்று தெரிவித்ததையடுத்து அங்கு சர்ச்சைகள் மேலும் பூதாகரமாக வெடித்தது. இடித்த தூபி கட்டப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதற்கான பூரண ஒத்துழைப்பை தமிழ் அரசியல் தலைமைகள், புத்திஜீவிகள், முஸ்லிம் தரப்பினர், சமயத் தலைவர்கள் ஆகியோர் ஒத்துழைப்பு நல்கியிருந்தனர்.

இதன் பயனாக மீண்டும் குறித்த தூபி நிர்மானிக்கப்படும் என்ற பல்கலைக்கழக துணைவேந்தரின் ஒப்புதலுக்கிணங்க அவரினாலேயே இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் யாதெவர் செயற்பட்டாலும் அரசியல் இராஜதந்திர நடவடிக்கைகளுக்காக இவை நகர்த்தப்பட்டாலும் தமிழ் மக்களின் உரிமைகன் வென்றெடுக்கும் வரையில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற வேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கம் தமிழினத்தை தொடர்ந்தும் அடக்கியாளுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படும். கட்சித் தலைவர்களின் ஆவேசமான அறிக்கைகளும் உசுப்பிவிடும் பேச்சக்களும் பொதுவெளியில் இருந்தாலும் அரச கைக்கூலிகளாக செயற்படுகின்ற தமிழ் அரசியல் தலைமைகளை அரசியல் அரங்கிலிருந்து மக்கள் தனிமைப்படுத்த வேண்டும். போருக்கு பின்னரான 11 ஆண்டு காலப்பகுதியில் இத்தகைவரையிலும் அரசியல் ரீதியிலான தீர்வினை அரசாங்கம் நமக்குப் பெற்றத்தரவில்லை. ஆங்காங்கே குழப்பங்களை விளைவித்து அதில் அரசியல் காய் நகர்த்தல்களை அரசாங்கம் நகர்த்தி வருகிறது. தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின் என்ற அரசியலையே அரசாங்கம் தொன்றுதொட்டு செய்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவது அரசாங்கமல்ல பொதுமக்களே பாதிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக அரசாங்கத்தினால் கட்டப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் நினைவு தூபிகள் பல இருக்கின்றன. இந்த நினைவு தூபிகள் குறிப்பாக ஆணையிறவிலும், கிளிநொச்சிலும், மாங்குளத்திலும், முல்லைத்தீவிலும் பெரிதாக நிர்மானிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நினைவுதூபிகள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் குரோத மனப்பாங்கையே வெளிப்படுத்தி நிற்கின்றது. பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுதூபியை அமைக்கக்கூடாது என்று கூறுகின்ற அரசாங்கம் யார் அனுமதியை பெற்று மேற்குறிப்பிடப்பட்ட நினைவு தூபியை இவர்கள் அமைத்தார்கள். அப்படியாயின் இந்த நினைவு தூபிகளும் முற்றாக அழித்தொழிக்கப்பட வேண்டியவையே. அடுத்தக்கட்ட புரட்சியாக மக்கள் குறித்த இராணுவ நினைவுதூபிகளை அழித்து ஒழிக்கின்ற நடவடிக்கைகளிலே இறங்குவார்கள்.

ஆகவே இலங்கை அரசானது மாணவர்கள் மீது மாணவ சமுதாயத்தின் மீது ஒரு அரசியல் திணிப்பை ஏற்படுத்தாது கல்வி சமூகத்தை சீர்குழைக்கும் வகையில் செயற்படாது அரசாங்கம் செயற்படுவது நல்லது. தமிழ் பெரும்பான்மை மூலம் தமிழினத்தை அடக்கியாளலாம் என்ற இந்த அரசின் நிலைப்பாடு மாற்றியமைக்கப்பட வேண்டும். அல்லது தமிழினத்துடன் மீண்டும் போருக்கு தயார் என்ற நிலைப்பாட்டை அரசு கொண்டிருக்கிறதா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் அரசியல் தலைவர்கள் மத்தியல் எழுந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் மாணவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போராட்டம் தான் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது. இன்னும் அந்த அறவழிப்போர் தொடர்ந்து கொண்டே செல்கிறது. அரசாங்கம் இதனை நன்குணர்ந்து தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை பெற்றுத்தருகின்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். தமிழினத்தின் மீது மீண்டும் வன்முறைகள் கட்;டவிழ்த்து விடப்படுமாயின் இந்த நாட்டில் நிலைமை மோசமடையும் என்பதையே குறித்த போராட்டங்கள் எடுத்துகாட்டுகிறது எனலாம்.

SHARE