அரசின் எதேச்சாதிகாரச் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் மீண்டும் இந்நாட்டில் குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும் என்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன்

53
சிங்கள தேசத்தின் முட்டாள்த்தனமான தீர்மானங்கள் ஈழத்தமிழரின் விடுதலை வேட்கை மேலெழவும் உயிர்ப்புடன் இருக்கவும் தமிழரின் இருப்பைப் பலப்படுத்தவும் ஆணிவேராக அமையும். இலங்கையை மாறி மாறி தொடர்ந்து ஆட்சிசெய்யும் அரசுகள் தமிழினத்தை அடக்கியாளவும், இந்நாட்டை பௌத்த சிங்கள நாடாக மாற்றவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன. சிங்கள அரசின் திட்டமிட்ட அடக்குமுறைகளால் தான் தமிழினம் ஆயுதம் ஏந்திப் போராடத் தலைப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10, 1974இல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பதினொரு பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் மரணம் அடைந்தனர். இந்த மாநாட்டிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பு என்பது அளப்பரியது.

இந்த நாட்டில் யுத்தம் 30 வருடங்களாக தொடர்ந்ததற்கு இச் சம்பவமே அடிப்படையான காரணமாக அமைந்தது. சிங்கள தேசம் தமிழினத்தை தூண்டிவிட்டு அதில் குளிர்காயும் நிகழ்வு அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கின்றது. வடகிழக்கில் அரச படைகளால் இதுவரை 200இற்கும் மேற்பட்ட தமிழர் பிரதேசங்களில் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கான நீதி என்பது இதுவரை மறுக்கப்பட்டே வருகின்றது. இன்றுவரை தமிழினம் தமது விடுதலைக்காக வீதியோரங்களில் இருந்து போராடிக்கொண்டிருக்கும் நிலை இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்களைக் கடந்தும் தொடர்கின்றது.

மாவிலாறில் ஆரம்பித்த யுத்தத்தை முள்ளிவாய்க்காலில் உலக நாடுகளுடன் இணைந்து முடிவுக்குக் கொண்டுவந்த ராஜபக்ச சகோதரர்கள், யுத்தம் இடம்பெற்று 11 வருடங்களைக் கடந்துள்ள நிலையில், ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச பிரதமராகவும், பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபாய ஜனாதிபதியாகவும் தற்போது ஆட்சிபீடமேறியிருக்கின்றனர். இவர்களின் கடந்த ஆட்சியில் தமிழினம் சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்தது. அரசியல் கைதிகள் என சந்தேகத்தின் அடிப்படையில் பல அப்பாவி தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் இன்றும் விடுதலை செய்யப்படாமல் சிறைகளில் வாடுகின்றனர். பயங்கரவாதத் தடைச்சட்டம் என்கிற போர்வையில் வடகிழக்கில் தமிழர் வாழ் பகுதிகளில் கைதுகள் பெருமளவில் இடம்பெற்றது. வெள்ளை வான் கலாச்சாரம் தலைதூக்கியது. பலர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வரலாறுகள் எண்ணிலடங்காமல் தொடர்ந்தது. மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டனர், கடத்தப்பட்டனர், அச்சுறுத்தலுக்குள்ளாகி நாட்டைவிட்டு வெளியேறினர். இந்நிலையில் தெற்கில் ஏற்பட்ட அரசியல் புரட்சி ஒன்றின் காரணமாக தமிழ் மக்களும் இணைந்து மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி என்ற ஒன்றிணைக் கொணர்ந்தனர்.

நல்லாட்சியிலும் தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் முழுமையாகக் கிடைக்காவிடினும் முன்னைய ஆட்சியை விட ஓரளவு சுதந்திரமாக நடமாட முடிந்தது. காணிகள் விடுவிப்பு செய்யப்பட்டன. அரச படைகளின் நெருக்கடி ஓரளவு தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நல்லாட்சி முடிவுக்கு வந்த தறுவாயில், இந்நாட்டில் இனவாதம் தூண்டப்பட்டு தெற்கு அரசியலில் திட்டமிட்டுக் குழப்பம் விளைவிக்கப்பட்டு, ராஜபக்ச சகோதரர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், எதிர்பார்த்ததைப்போல மீண்டும் தமிழினம் அடக்குமுறைகளால் திணறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்த உடனே தமிழினத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வுகள் நீதிமன்றக் கட்டளை ஊடாக பொலிசாரைக் கொண்டு தடைசெய்தது அரசு. பின்னர் தியாகி திலீபனது நினைவுதினமும் தடைசெய்யப்பட்டது. தமிழ் மக்களின் சமய நிகழ்வான கார்த்திகை தீப நிகழ்வு கூட தடுக்கப்பட்டது. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படும் அதேவேளை ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாகத் தான்  இரவோடு இரவாக யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நன்கு திட்டமிடப்பட்டு இடித்தழிக்கப்பட்டது. உண்மையில் இச்சம்பவம் மூலம் சிங்கள ஆட்சியாளர்களும், உத்தரவு இடுபவர்களும் தமிழினத்திற்கு மீண்டும் மீண்டும் ஒரு உண்மையை வலியுறுத்திக் கூறுகின்றனர். அதாவது தமிழினம் இந்நாட்டில் சுதந்திரமாக வாழ முடியாது, தொடர்ந்தும் கண்காணிக்கப்படுபவர்களாகவும், பண்பாடு கலை கலாச்சார பாரம்பரிய விழுமியங்களை மறந்துவிட்டு அடிமைகளாக வாழவேண்டும் என்பதையே தொடர்ந்தும் எமக்கு வலியுறுத்திக் கூறுகிறது.

யுத்தம் தந்த வடுக்களிலிருந்து இன்றுவரை மீளமுடியாமல் தவிக்கும் தமிழினமாகிய நாம், தொடர்ந்தும் சிங்கள இனவாதிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றோம். நாம் ஏற்கனவே கட்டமைப்புக்குள், வகுத்த பாதையில் பயணித்தவர்கள். அரசுகளின் எதேச்சாதிகாரச் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அடக்கியாளப்படும் ஒரு இனத்தை அமைதிகொள்ளச் செய்யாது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். இன்னுமின்னும் எம்மை நாமே பலப்படுத்திக்கொண்டு, சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதே உண்மை.

SHARE