
கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழில் உள்ள திரையரங்கம் ஒன்று சுகாதார பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) வெளியாகிய விஜயின் மாஸ்டர் திரைப்படம் இலங்கையிலும் இன்று அதிகாலை முதல் திரையரங்குகளில் திரையிடப்பட்டன.
இந்த நிலையில், முதல் காட்சியை பார்வையிடுவதற்காக நேற்று நள்ளிரவு முதல் ரசிகர்கள் யாழ். நகர் பகுதிகளில் குவிந்து, நகரில் உள்ள திரையரங்குகளின் முன்பாக காத்திருந்தனர்.
இதனையடுத்து, அதிகாலை திரையரங்கத்தை திறந்தபோது, ரசிகர்கள் பலரும் முண்டியடித்து பற்றுச்சீட்டு கொள்வனவுகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்.நகர் மத்தியில் அமைந்துள்ள திரையரங்கம் ஒன்றினை 14 நாட்கள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது.
எனினும் குறித்த திரையரங்கு முழுமையான இருக்கைகளுக்கு பார்வையாளர்களை அனுமதித்து பற்றுச்சீட்டுக்களை விற்பனை செய்ததாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதனாலேயே குறித்த திரையரங்கு சுகாதார நடைமுறைகளுக்கமைய மூடப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.