கண்காணிப்பு கெமரா பதிவுகளை ஐ.நா.விடம் அளிக்கப்போவதில்லை: ஈரான்

11

 

எண்ணெய் ஏற்றுமதி தடை மற்றும் சர்வதேச வங்கிப் பரிவர்த்தனைத் தடை மீதான அதிருப்திக் காரணமாக, ஐ.நா. சர்வதேச பார்வையாளர்களிடம் முன்னர் ஒப்புக் கொண்டதைப் போல் தங்களது அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கெமரா பதிவுகளை கையளிக்கப் போவதில்லை என ஈரான் அறிவித்துள்ளது.

ஐ.நா. கண்காணிப்பாளர்களுக்கு அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கெமரா பதிவுகளை அளிப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானம் ஈரான் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.

தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள எண்ணெய் ஏற்றுமதி தடை மற்றும் சர்வதேச வங்கிப் பரிவர்த்தனைத் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் மேற்கொள்ளாவிட்டால், ஐஏஇஏ-வுக்கு கண்காணிப்பு கெமரா பதிவுகள் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதுதொடர்பான தாமதம் காரணமாக, அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கெமரா பதிவுகளை கையளிக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஸரீஃப் கூறுகையில், ‘இந்த உலக நாடுளுக்கு எதிரான கெடுவோ, ஐஏஇஏ-வுக்கு எதிரான தடையோ இல்லை. இது ஈரான் நாடாளுமன்றத்துக்கும் அரசுக்கும் இடையிலான விவகாரம்.

ஈரானில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. இங்கு நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தியாக வேண்டும்.

அந்தச் சட்டத்தின் கீழ், இனி அதிகாரிகளால் ஐ.நா. பார்வையாளர்களுக்கு அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கெமரா பதிவுகளை அளிக்க முடியாது. இது சட்டரீதியிலான முடிவே தவிர, அரசியல் முடிவு அல்ல’ என கூறினார்.

SHARE