இத்தாலிய தூதர் உட்பட மூவர் இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு!

15

 

கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கான இத்தாலிய தூதர் நாட்டின் கிழக்கில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிராந்திய தலைநகர் கோமாவுக்கு வடக்கே சில மைல் தொலைவில் உள்ள கன்யாமஹோரோ நகருக்கு அருகே இன்று (திங்கட்கிழமை) காலை 10.15 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது கொங்கோவுக்கான இத்தாலிய தூதர் லூகா அட்டனசியோவுடன் பயணித்த ஒரு இத்தாலிய இராணுவ பொலிஸ் அதிகாரி மற்றும் மூன்றாவது நபரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட மூன்றாவது நபர் ஒரு சாரதி என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக தூதர் காயமடைந்ததாக கூறியிருந்த அதிகாரிகள், தற்போது அவர் கோமாவில் உள்ள மோனுஸ்கோ மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் கடத்தல் முயற்சி என்று நம்பப்படுகிறது என்று அருகிலுள்ள விருங்கா தேசிய பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ருவாண்டா மற்றும் உகாண்டா ஆகிய இரு நாடுகளின் எல்லையான பூங்காவைச் சுற்றி ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாக அறியப்படுகிறது.

தாக்குதலுக்குப் பின்னால் யார் என்று உடனடியாகத் தெரியவில்லை. அத்துடன் இத்தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பு உரிமை கோரவில்லை.

அமைச்சின் வலைத்தளத்தின்படி, அட்டனசியோ 2017ஆம் ஆண்டு முதல் கின்ஷாசாவில் இத்தாலியின் தூதுக்குழு தலைவராக இருந்தார். மேலும் 2019ஆம் ஆண்டில் தூதராக நியமிக்கப்பட்டார்.

SHARE