மேற்கு ஈராக் மாகாணமான அன்பரில் உள்ள ஐன் அல்-ஆசாத் விமானத் தளத்தின் மீது, ரொக்கெட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தாக்கதலின்போது, குறித்த விமானத் தளத்தின் மீது 10 ரொக்கெட்டுகள் வீழ்ந்துள்ளதாக ஈராக்கின் அமெரிக்கத் தலைமையிலான கூட்டுப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கேர்னல் வெய்ன் மரோட்டோ இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஈராக்-சிரியா எல்லையில் ஈரான் ஆதரவுப் போராளிகளின் இலக்குகளை அமெரிக்கப் படைக்ள தாக்கிய நிலையில், இதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாப்பரசர் பிரான்சிஸ் இன்னும் இரண்டு நாட்களில் ஈராக்கிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஈராக்கின் பல பகுதிகளில் பாதுகாப்பு மோசமடைந்து வருகின்ற நிலையில், இந்த ரொக்கெட் தாக்குதலானது, கடந்த மூன்று ஆண்டுகளில், பக்தாத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னரான பெரிய தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சேத விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி, வடக்கு ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான படைகள் மீது ரொக்கெட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், பொதுமக்கள் தொடர்பாளர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.