மல்லாவி-வடகாட்டில் தனிநபரால் காணி அபகரிப்பு

20

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வடகாடு கிராமத்தில் தனிநபரொருவர், காட்டை அழித்து ஆக்கிரமித்து வருவதாக கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தக் காடழிப்பு தொடர்பாக அப்பகுதி கிராம மக்களால் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நேற்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதுதொடர்பாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் நவரட்ணம் ரஞ்சனாவிடம் மனுவொன்றினைக் கையளித்து, தங்கள் கோரிக்கையை மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

குறித்த தனிநபர், சுமார் நூறு ஏக்கர் அரச காணியினை அபரித்துவருவதாக வடகாட்டு மக்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் கிராம மக்களின் விவசாய நடவடிக்கைக்காக காணிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்க பலதடவைகள் கோரிக்கை விடுத்தும் வெளிக்கிராமத்தில் இருக்கும் ஒருவர் இந்தக் காணியினை அத்துமீறி அபகரித்து வந்துள்ளதுடன் காடுகளும் அழிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் கிராம மக்களுக்கும் காணி அபகரிப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல்நிலை, தாக்குதல் மற்றும் வாள்வெட்டாக மாறியதைத் தொடர்ந்து குறித்த காணிக்குச் செல்லும் பகுதியில் நேற்று இரண்டு பொலிஸார், கிராம மக்கள் சிலரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதேவேளை, போராடும் கிராம மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர், “இந்தக் காணி தொடர்பாக ‘அ’ படிவம் ஒட்டப்பட்டு அதனை மீறியும் காணி அபகரிப்புத் தொடர்ந்த நிலையில், நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர், குறித்த நபர் வெளிப்படுத்தல் உறுதியினைக் காட்டியினார். அது அரச காணி என்பதை தெரிவித்துள்ளோம்.

அரசகாணி ஆக்கிரமிப்புத் தொடர்பாக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து பிரதேச செயலாளர் என்ற ரீதியில் எனக்குப் பலதரப்பில் இருந்தும் அழுத்தங்கள் வந்துகொண்டிருக்கின்றன. என்னை இந்தப் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என எனக்கு எதிராக முறைப்பாடு எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இதில், ஒரு குழுவாக சட்டத்தரணிகள், அரசியல் பிரமுகர்கள் சேர்ந்திருப்பதாகத் தெரிகின்றது. எங்களுக்கு அழுத்தங்கள் இருக்கின்றன. இது தொடர்பாக சமூகத்தின் ஒற்றுமை கருதி நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை யாரும் காணியில் இறங்காதவாறு தடைசெய்ய நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து நீதிமன்றத்தில் தடை உத்தரவு எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். அரச காணி முகாமைத்துவம் என்பது கஷ்டமான விடயம். பல பிரச்சினைகள் உள்ளன.

நான் பிரதேச செயலாளராக வருவதற்கு முன்பே இடம்பெற்ற தவறுகளும் என்மீது சுமத்தப்பட்டு, அமைச்சுக்குளுக்கு திணைக்களங்களுக்கு அரசியல் பிரமுகர்களுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.

நீதிமன்ற முடிவு வரும் முன்னரே பிரதேச செயலாளருக்கும் பிரதேச செயலக நிர்வாகத்திற்கும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றார்கள். என்னை இங்கிருந்து மாற்றம் செய்யவேண்டுமென அந்த குழுவினர் செயற்பட்டு வருகின்றார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE