பங்களாதேஷை வயிட் வோஷ் செய்தது நியூஸிலாந்து

15

 

பங்களாதேஷ் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், நியூஸிலாந்து அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 65 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, முழுமையாக கைப்பற்றி நியூஸிலாந்து அணி, பங்களாதேஷ் அணியை வயிட் வோஷ் செய்துள்ளது.

ஒக்லாந்து மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பமே மழைக் குறுக்கிட்டதால் போட்டி 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட ஆரம்பிக்கப்பட்டது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பின் அலென் 71 ஓட்டங்களையும் கப்டில் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டஸ்கின் அஹமட், சொரிபுல் இஸ்லாம் மற்றும் மெயிடி ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 142 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 9.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் நியூஸிலாந்து அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 65 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் நய்ம் 19 ஓட்டங்களையும் மொசடக் ஹொசைன் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டொட் ஹெஸ்ட்ல் 4 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ 3 விக்கெட்டுகளையும் ஆடம் மில்ன், லொக்கி பெர்குசன் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 10 பவுண்ரிகள் அடங்களாக 71 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பின் அலென் தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக க்ளென் பிலிப்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

SHARE