தகவல் தொழில்நுட்பத் துறையில் 21ஆம் நூற்றாண்டில்சமூக ஊடகங்களின் உளவியல்

56

 

தகவல் தொழில்நுட்பத் துறையில் 21ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாடலில் புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்கியுள்ளது. டிஜிடெல் யுகம் என வர்ணிக்கப்படும் இன்றைய உலகில் அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் என்ற பாரம்பரிய எல்லையைக் கடந்து சமூக ஊடகங்கள் பூதாகரமாக வளர்ச்சியடைந்துள்ளன.

உலகில் 225 கோடி மக்கள் சமூக ஊடக வலைப்பின்னலில் இணைந்துள்ளனர். 120 கோடி மக்கள் myspace, linkedin, bebo  போன்ற வலயமைப்புகளில் தொங்குகின்றனர். வருடாந்தம் 1.55 பில்லியன் பேர் facebook இல் இணைகின்றனர். 900 மில்லியன் பேர் whatsapp இலும் 700 மில்லியன் பேர் messengers இலும் 400 மில்லியன் பேர் Instagram இலும் 15 மில்லியன் பேர் Internet இலும் இணைகின்றனர்.

இனி ரகசியம் என்ற எதுவுமில்லை. தனிப்பட்ட வாழ்விற்கும் சமூக வாழ்விற்குமிடையில் எந்த இடைவெளியுமில்லை; ஒழிவுமறைவுமில்லை. அந்தரங்க வாழ்க்கை உள்ளிட்டு அத்தனையும் சமூகப் பார்வைக்கு வந்து விடுகின்றன. அன்றாட வாழ்வில் நிகழும் சாதாரண நிகழ்வுகள் நிழல்படமாய், காட்சியாய், கதையாய், செய்தியாய், முகநூல் பக்கங்களை விழுங்கி வருகின்றன.

மேற்கு நாடுகளில் முகநூல் பாவனையாளர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பல சுவாரஸ்யமான உண்மைகள் கண்டறியப்பட்டன. தனிப்பட்ட களியாட்ட நோக்கங்களுக்காகவே 90% ஆனோர் முகநூலை பயன்படுத்துவதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

இன்று தொழில்நுட்பத்தின் அனுகூலங்கள் தவறானவர்களின் கைகளில் சென்றுள்ளதால், அது பல்வேறு சமூகப் பிரதிகூலங்களை உருவாக்கி வருவதாக ஒழுக்கவியலாளர்கள், சீர்திருத்தவாதிகள் அங்கலாயக்கின்றனர்.

தனிமனிதர்களின் மன உளைச்சலைக் கொட்டித் தீர்க்கும் குப்பைகூடங்களாக சமூக வலையமைப்புகள் மாற்றப்பட்டு வருவது ஒருபுறமிருக்க, அவை பொருளாதார கல்வி, ஆன்மீக வாழ்வில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. எல்லாவற்றையும் தாண்டி சமூக ஊடகங்களின் உளவியல் தாக்கம் குறித்து இன்று விரிவாக ஆராயப்படுகின்றது.

சமூக ஊடகங்கள் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களை விட பெருமளவு பயன்படுத்தப்படுவதற்கு ஏதுவான பல காரணிகள் இருக்கவே செய்கின்றன. அவற்றின் அசாதாரண வேகம், கட்டுப்பாடற்ற பரப்பெல்லை, தணிக்கையற்ற சுதந்திரம், பாவனைக்கு இலகு என்ற காரணிகளும் இதில் அடங்குகின்றன. சமூக ஊடகங்களில் முதலிடத்தில் முகநூலும் இரண்டாவது இடத்தில் வட்சப்பும் உள்ளன.

சமூக ஊடகங்கள் குறித்து முதன் முதலில் உளவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தவர், பெனடிக் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஷனோன். அவர் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களை அதி கம் பயன்படுத்துகின்றவர்கள் மற்றும் அடிமையானவர்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் பல உண்மைகளைக் கண்டுபிடித்தார். மேற்கு நாடுகளில் தமது சொந்த பிரச்சினைகளை மறக் கடிக்க செய்யவும் மனச்சோர்விலிருந்து விடுபடவும் முகநூலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர் ந்து செல்வதை அவரது ஆய்வுகள் காட்டு கின்றன.

முகநூலுக்கு அடிமையானவர்கள் காலவோட்டத்தில் உளரீதியான பாதிப்புகளுக்கு உட்படுவதையும் வேறு சிலரின் ஆய்வுகள் எடுத்து காட்டியுள்ளன. இவ்வாறு பாதிக்கப்படுகின்றவர்களை இனங்காண்பதற்கான அளவுகோலொன்றை நோர்வே பேஜின் பல்கலைக்கழக ஆய்வாளர் கலாநிதி சிசில் எண்டர்சன் உருவாக்கியுள்ளார். சில குறிப்பிட்ட கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான விடைகளின் அடிப்படையில் ஒருவர் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டுபிடிக்கலாம் என்கிறார் சிசில் எண்டர்சன்.

தனித்த உலகமும் தன்முனைப்பும்

தணிக்கையற்ற சுதந்திரமும் பொறுப்புணர்வற்ற ஈடுபாடும்  பலரை உளரீதியான பாதிப்புக்கு இட்டுச்சென்றுள்ளதை உலகின் பல நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. சிலர் தம்மை அடையாளம் காட்டாமல் தமது எதிரிகள், பிடிக்காதவர்களை விமர்சனம் என்ற பெயரில் குறை கூறுவதற்கும், நிதானமில்லாத மதிப்பீடுகளை முன் வைப்பதற்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.

உளவியலில் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பல வகை. சிலர் தமக்கென்று ஓர் உலகை சிருஷ்டித்துக் கொண்டு தம்மை ஒரு பெரிய புள்ளியாக கட்டமைத்து அடுத்தவர்களை பிறராக வகைப்படுத்தி செயல்படுவர். தம்மைப் பற்றிய அளவுக்கதிகமான உயர் மதிப்பீடுகளால் தன் முனைப்புடன் செயல்படுவர். தம்மை விரட்டும் அன்னியன் பற்றிய எந்த பிரக்ஞையும் அவர்களிடம் இருப்பதில்லை. இதுபோன்றவர்கள் இன்று முகநூலை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

தன்னை ஒரு பெரிய சிந்தனையாளர் என்று வரித்துக்கொண்டு மாற்றுக் கருத்து கொண்டவர்களை புறம்போக்கானவர்களாக எழுதுவதும். விமர்சிப்பதும் இவர்களின் வேலையாகிவிட்டது. யதார்த்த உலகிற்கும் இவர்கள் கூடாரம் அடித்துக் குடியிருக்கும் உலகத்திற்குமிடையில் பெரிய இடைவெளி இருக்கின்றது. செயல் களத்தில் எதனையும் சாதிக்காத இத்தகைய சோம்பேறிகள் சமூகக் களத்தில் நலன்களுக்காக உழைப்பவர்களை  சாடுவதும், ஈவிரக்கமின்றி விமர்சிப்பதுமே தமது தொழில் துறையாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

“நான் பெற்றது போன்று” எனும் நோய்.

சமூக ஊடகங்களான முகநூலிலும் மற்றும் வட்சப்பிலும் இன்று பல குழுமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தாம் சாந்துள்ள அமைப்பு, நிறுவனங்கள், கருத்தியல்கள், பிரதேசங்கள், குடும்பங்கள் என்ற வகையில் இத்தகைய குழுமங்கள் (groups) உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு குழுமங்கள் உருவாக்கப்படும் போது, அட்மினின் கைபேசியில் ஒருவரது தொலைபேசி இலக்கம் இருந்தால் போதுமானது. குறைந்தபட்சம் அவருடைய அனுமதிகூட பெறப்பட வேண்டியதில்லை. அற ரீதியில் பார்த்தால் அனுமதியின்றி ஒருவரை வட்சப் குழு வில் இணைப்பது தவறாகும். அவ்வாறு இணைத்துக் கொண்டு எவ்வகையான விடயங்களை பகிர்கின்றோம் என்பது குறித்து நாம் சிந்திப்பதில்லை.

ஒருவருக்கு பயனற்ற, யதார்த்தமற்ற செய்திகள், சம்பவங்கள், புகைப்படங்கள் என்பவற்றை வலைத்தளங்களில் பதிவேற்றி உடனுக்குடன் அடுத்தவர்களுக் கும் பகிர்கின்றோம். அதன் மூலம் நடப்பது என்ன? ஒருவர் விரும்பாத செய்திகளைக்கூட பார்க்க நிர்பந்திக்கப்படுகிறார். அவரது கைபேசியில் பதிவிறக்கம் செய்வதனால் அவரது பணம் விரயமாகின்றது. கைபேசியின் battery charge குறைகின்றது. இதற்காக அவரது நேரம் வீண்விரயம் செய்யப்படுகின்றது.

எல்லாவற்றையும் விட நாம் பெறும் செய்தி எந்தளவு உண்மையானதென்று யாரும் ஊர்ஜிதம் செய்வதுமில்லை, உறுதிப்படுத்துவதுமில்லை. பெற்றதை அடுத்த கணமே பகிர்கிறோம். இதிலுள்ள பிரதிகூலம் பற்றி யாரும் சீரியஸாய் சிந்திப்பதாக  தெரியவில்லை. ஒரு அநியாயக்காரன் உங்களிடம் ஒரு செய்தி யைக் கொண்டு வந்தால் அதன் நம்பகத் தன்மையை தெளிவுபடுத்திக் கொள்ளுங் கள் என குர்ஆனில் அல்லாஹ் இடும் கட்டளையை புறக்கணிக்கின்றோம்.

ஒருவர் தனிப்பட்ட வகையில் இன்னொருவருடன் கொண்டுள்ள பகை முரண்பாட்டின் காரணமாக அல்லது அவர் குறித்து சமூகத்தில் காணப்படும் பிரதிமையை (image) உடைக்கும் நோக்கில் பரப்பும் அவதூறுகளையும், வதந்தி களையும், வசைபாடல்களையும் கூட எந்த மதிப்பீடுமின்றி அவற்றுக்கு பின்னா லுள்ள உள்நோக்கம் பற்றி ஆராயமல் அடுத்த கணமே தனது குழுமத்திலுள்ள எல்லோருக்கும் பகிர்கின்றோம். அந்த செய்தி காட்டுத் தீ போல குழுமத்திலிருந்து குழுமத்திற்கு தாவி நாடு பூராக வும் –ஏன் சிலபோது- உலகம் பூராகவும் பரவிவிடுகின்றது.

செய்தியின் கீழே “as i received”  என்று குறிப்பிட்டு தப்பிக்கொள்கின்றோம். குறிப்பிட்ட நபரின் மானத்தோடு, தனிப்பட்ட வாழ்வோடு அவரது எதிர்காலத்தோடு விளையாடும் இத்தகைய வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு நாமும் பங்களிக்கின்றோம் என்ற கசப்பான உண்மையை ஏற்க மறுக்கின்றோம். இந்த அப்பாவித்தனத்திற்கு என்ன வென்று சொல்வது?.

ஒரு சகோதரருடைய தனிப்பட்ட வாழ்வை, அதன் கோணல்களை அம்பலப்படுத்துவதும் சமூகப் பார்வைக்கு அரங்கேற்றுவதும் அறநெறி அடிப்படையில் மிகப்பெரிய தவறு என்பதை நாம் வசதியாக மறந்து விடுகின்றோம். எந்தக் குற்ற உணர்வுமின்றி சில படித்த அறிவு ஜீவிகள்கூட இத்தகைய வட்சப் குழுமங்களை உருவாக்கி கொண்டு தேவையற்ற அனாவசியமான தனிப்பட்டவர்களின் மனஉளைச்சல்களை கொட்டுகின்ற பொய்களை பரப்புகின்றனர். ஆனால், அவற்றின் கீழே “as i received” என்று போடுவது ஒரு வாடிக்கையாக மட்டுமன்றி வேடிக்கையாகவும் மாறிவருகிறது.

தனிநபர்கள் குறித்து விமர்சிப்பவர்கள்தான் மக்களில் மிகவும் கீழானவர்கள். சம்பவங்கள் குறித்துப் பேசுபவர்கள் சராசரியானவர்கள். கருத்துக்கள் குறித்து விவாதிப்பவர்கள் உயர்ந்தவர்கள். ஆனால், மௌனமாக இருந்து செயல்படுகின்றவர்கள்தான் உன்னதமானவர்கள். அத்தகைய உன்னதங்களை இன்றைய சமூக பரப்பில் காணமுடியாதுள்ளமை துரதிஷ்டமே. அடையாளம் தெரியாத முகமூடிகளுடன் இயங்கும் முகநூல்வாசிகள் ஏதோ அடுத்தவர்களின் குறைகளை புதையல்கள் கண்டுபிடிப்பது போன்று தேடி அலைகின்றனர்.

எள்ளிநகையாடுவதற்கு ஏங்கிக் கிடப்பவர்களுக்கு அடுத்தவர்கள் பற்றிய செய்திகள் மூட்டும் கிளுகிளுப்பு அலாதி யானது. இத்தகைய மசாலா விமர்சனங்கள் மார்க்கத்தின் பெயராலும் மக்க ளின் பெயராலும் கொட்டித் தீர்க்கப்படு கின்றன. தமது நடவடிக்கைகள் குறித்து குறைந்த பட்ச குற்ற உணர்வும் அவர் களிடம் இருப்பதில்லை. அடுத்தவர் களின் குறைகளை அள்ளி அம்பலப் படுத்துவதில் காலத்தைத் தள்ளும் இவர்கள் தமது சொந்த வாழ்வில் எதையேனும் சாதித்து கிழித்திருக்கிறார்களா என்றால், ‘இல்லை’ என்பதே பதிலாக கிடைக்கும். சீரியஸான சுயவிமர்சனம் ஏதுமற்ற இத்தகையோர் அடுத்தவர்களின் குறைகளைப் பேசுவதையே தமது தொழிலாகக் கொண்டுள்ளனர்.

அமைதியாக இருந்து ஆக்கபூர்வமான சில பணிகளையேனும் ஆர்ப்பாட்ட மின்றி செய்கின்றவர்கள், இத்தகையோர் முன்வைக்கும் விமர்சனங்கள் குறித்து எதிர்வினையாற்ற வேண்டியதில்லை. அது ஒரு வகையில் நேர விரயமாகும். ஒருவரது உள்ளம் அடுத்த மனிதர்களின் குறைகளை நிறைக்கும் குப்பைத் தொட்டிகளல்ல. மலைகள் ஒருபோதும் திருப்பிக் குரைப்பதில்லை. தெரு நாய் களுக்கு கல்லெறிவதில் காலத்தை வீணடிக்க வேண்டியதில்லை.

எப்போதும் அடுத்தவர்களின் குறை களையும் தவறுகளையும் பூதக் கண்ணாடிகளால் தேடிக்கொண்டிருப்பவர் கள் உள நோய் கொண்டவர்கள். அதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.

இந்தவகையில் இன்று சமூக வலைத் தளங்கள் குரங்குகளின் கைகளில் பூ மாலைகளாய் சிக்கியுள்ளன. பைத்தியக் காரத்தனம் என்பது அங்கொடையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் மாத்திரம் தான் இருக்கிறது என்று எண்ணிவிடக் கூடாது. வித்தியாசமான மனிதர்களிடம் வித்தியாசமான அளவுகளில் பரவலாக அது இருப்பதை சமூக ஊடகங்கள் உறுதிசெய்கின்றன.

எதைப் பகிர்கின்றோம் யாருடன் பகிர்கின்றோம். எவரைப் பற்றி பகிர்கின் றோம். என்ற கேள்வி எதுமின்றி கிடைப்பவெற்றையல்லாம் பகிர்வது பெரிய பாவமாகும். இந்த உண்மை குறித்து எத்தனை பேர் சிந்திக்கின்றனர்.

கீழ்த்தரமான வார்த்தையாடல் (low wording)

சமீபத்தில் ஒரு சமூக செயற்பாட்டா ளர் குறித்து தொடக்கத்தில் முகநூலி லும் பின்னர் வட்சப் குழுமங்களிலும் காட்டுத் தீ போன்று பரப்பப்பட்ட ஒரு செய்தி குறித்து எனது கவனம் திரும்பியது. குறிப்பிட நபர் மீது தனக்குள்ள அக்கறையை வெளிகாட்டுவது போன்று நடித்துக்கொண்டே அவரது பிரதிமையை உடைக்கும் உள்நோக்கம் அந்த செய்தி யில் இருந்தது. செய்தி என்பதைவிட அது ஒரு பெரிய கட்டுரை அதில் கையாளப்பட்டுள்ள சொற்கள் மிகுந்த அவமானத்திற்குரியவை. அற அடிப்படையில் கீழ்தரமானவை. விமர்சனம் ஆள்பற்றிய தல்ல செயல்பற்றியதுதான். ஆனால், மாறுபட்ட கருத்துடையோரை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் தனிப்பட்ட முறையில் அவர்களை அணுகி ‘உங்களின் அந்த செயற்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை’ என்று பக்குவமாகவும் பவ்வியமாகவும் சுட்டிக்காட்ட வேண்டும். ஒருவரைத் திருத்துவதற்கான உண்மையான அணுகுமுறை இதுதான். அதைவிடுத்து அவரது தவறை பகிரங்க விவாத மேடைக்கு நகர்த்துவதும் அவர் குறித்து பலரும் தமது அதிருப்திகளையும் தாறுமாறான விமர்சனங்களையும் அள்ளிக்கொட்டுவதற்கு களம் அமைப்பதும் தவறுளை திருத்தும் இஸ்லாமிய வழி முறையல்ல.

விமர்சனத்தின் போது உணர்ச்சிவசப்படுவதை நாம் தவிர்க்க வேண்டும். முகநூலில் அல்லது வட்சப்பில் ஒரு செய்தியை நாம் உருவாக்கும்போது அல்லது பகிரும்போது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த முன்னெச்சரிக்கை அவசியம். ஆயிரம் நன்மைகள் செய்த ஒரு மனிதன் சிலபோது சூழ்நிலை அழுத்தத்தால் அல்லது வேறு ஒரு காரணத்தால் ஒரு தவறை இழைக்கலாம். அதனை மென்மையாக சுட்டிக்காட்டி பண்பட்ட முறையில் மாற்றியமைப்பதற்கு ஒரு பக்குவமான வழிமுறை உள்ளது. ஏதோ அடுத்தவர்கள் பற்றி விமர் சிப்பவர்கள் எல்லோரும் சுய பூரணத்துவம் கொண்டவர்கள் (self perfect)   என்று தம்மை நினைத்துக் கொண்டே விமர்சனங்களை அள்ளிவீசுகின்றனர்.

இதில் நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அடுத்தவர்கள் தவறிழைக்கின்றனர் என வாதாடுவதில்  நாம் சிறந்த வக்கீல்களாக இருக்கின்றோம். நமது சொந்தத் தவறுகளை நியாயப்படுத்துவதில் சிறந்த நீதிபதிகளாய் இருக்கின்றோம் என எங்கோ வாசித்த கருத்து நினைவுக்கு வருகின்றது.

SHARE