மியன்மார் இராணுவப் புரட்சியை அடியொற்றிய இலங்கையின் இராணுவச் செயற்பாடுகள்

199

மியன்மாரைப் போல இலங்கைத் தீவை மாற்றுவதற்கான முயற்சிகளையே இந்த பௌத்த பேரினவாதிகள் மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினர் இந்நாட்டின் அனைத்துத் துறைகளிலும் இராணுவத்தை உட்புகுத்தி அவர்களுக்கு உயர் பதவிகளை வழங்கி இராணுவ ஆட்சியினை இந்நாட்டில் தொடர்ந்தும் தக்கவைப்பதற்கான வேலைத்திட்டங்களை செய்துவருகின்றார்கள். ஜனநாயகத்திற்கு முரணாக இவ் இராணுவத் தலையீடுகள் சர்வதேச ரீதியாக இலங்கையரசிற்கு பிரச்சினைகளையே ஏற்படுத்தியுள்ளது. உள்ளுரிலும் சர்ச்சைசளை தோற்றுவித்துள்ளது.

மியன்மாரிலும் இராணுவப் புரட்சி ஒன்றின் மூலமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டு இராணுவ ஆட்சியே தற்போது மியன்மாரிலும் நடைபெற்று வருகின்றது. அனைத்துத் துறைகளும் இராணுவ வசமாகியுள்ளதுடன், ஆட்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே பாணியில் இலங்கையும் நகர்ந்து செல்வதை நாம் இன்று காணக்கூடியதாகவிருக்கிறது. மியன்மாரைப் போன்று இலங்கையிலும் ஒரு இராணுவப் புரட்சி ஏற்படுமாகவிருந்தால் மீண்டும் இந்நாட்டில் யுத்தம் உருவாகுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் இருக்கிறது. இவ்வாறான இவர்களது செயற்பாடுகள் தமிழர்களுக்குச் சாதகமாக அமையும் என்பதும் உண்மை. இதனால் தமிழீழத்திற்கான பலம் அதிகரிக்கும்.

இன்று இந்நாட்டுக்குள் யுத்தம் நிறைவடைந்து சமாதானம் என்கின்ற ஒரு நிலையில் இந்நாடு பயணிக்க, தமிழினம் விழிப்புணர்வுடன், அவதானமாகச் செயற்படவேண்டிய நிலையில் இருக்கிறது. முன்னரைவிட தற்போது தமிழர் வாழ் பகுதிகள் பறிபோய்க்கொண்டிருக்கின்றன. இராணுவப் பிரசன்னம் வடகிழக்குப் பகுதிகளில் அதிகரித்திருக்கிறது. பௌத்த விகாரைகளின் எண்ணிக்கை தமிழர் பிரதேசங்களில் அதிகரித்திருக்கிறது. தமிழர் களின் வணக்கஸ்தலங்கள் பறிபோகும் நிலையில் உள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சிகள் என்கிற போர்வையில் நில அபகரிப்புகள் அதிகரித்திருக்கிறது.

அரசு தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதன் ஊடாக இந்நாட்டில் இனங்களுக்கிடையில் ஒரு பரஸ்பர சுமுகமான உறவினைத் தோற்றுவிக்க முடியும். மியன்மார் பிரச்சினை முஸ்லீம்களுடன் தொடர்புபட்டது. ஜனநாயக ரீதியாகப் போராடிய மக்களது போராட்டம் தோற்கடிக்கப்பட்டு மக்கள் இன்று நிர்க்கதியாக்கப்பட்டுள்ளதுடன், இராணுவப் புரட்சியும் ஏற்பட்டுள்ளது. இன்று அங்கு மக்களது பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாகியுள்ளதுடன் அந்நிய நாடுகளின் தலையீடுகளும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இது ஆபத்தான நிலை.

இந்தியா தமது தேவைக்காக தமது பூகோள அரசியலுக்காக ஈழத் தமிழர்களைப் பயன்படுத்தியே வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளது ஒரு அங்கம். தமிழர்களுக்கான ஒரு அரசியல் சார்ந்த கட்சி. இவர்களுக்கான அதிகாரம் இன்று இந்நாட்டில் போதியதாக இல்லை. இவர்களின் குரல் மழுங்கடிக்கப்படுகின்றது. தமிழர்களுக்கான தீர்வை தொடர்ந்தும் இவ்வரசும் வகுக்காமல் விட்டால் எதிர்வரும் காலங்களில் நிலைமைகள் மோசமானதாகவே இருக்கும்.

இலங்கையை ஆட்சி செய்த அனைத்து ஆட்சியாளர்களின் காலப்பகுதிகளிலும் தமிழர்கள் வகைதொகையின்றி படுகொலை செய்யப்பட்டே வந்திருக்கிறார்கள். இலங்கை யில் ஒரு இராணுவப் புரட்சி ஏற்படுமாகவிருந்தால் இந்தியா இலங்கையில் நேரடியாகக் கால்பதிக்கும் நிலை ஏற்படலாம். அமைதிப்படை என்கிற பெயரில் இந்நாட்டுக்குள் நுழைந்த இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்களை உலகமே அறியும். இராணுவப் புரட்சிகளின் மூலமாக அந்நிய சக்திகள் குறித்த நாடுகளுக்குள் ஆழமாக கால்பதிப்பதற்கான வாய்ப்புக்கள் தான் கடந்த காலங்களில் அதிகரித்திருக்கிறது என்பது தான் வரலாறு. இன்று இந்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என பௌத்த துறவிகள் களமிறங்கியிருக்கிறார்கள். இவ் வகையான கருத்துக்கள் மீண்டும் இனங்களுக்கிடையில் மோதல்களைத் தான் உருவாக்கும். ஆகவே இவர்களது செயற்பாடுகள் நன்கு திட்டமிட்டவைகளாகவே கருதப்படவேண்டியவை என்பது தெளிவாகிறது. தொடர்ந்தும் இந்நாட்டை போர்க்களமாக வைத்திருக்கவே சிங்கள இனவாதிகள் விரும்புகிறார்கள். மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லீம் மக்களை மனிதாபிமானமற்ற முறையில் விரட்டியடித்ததைப் போலவே இவ் சிங்களப் பேரினவாதிகளின் செயற்பாடுகளும் மாற்றமின்றி இன்றும் தொடர்கின்றது என்பதற்கு ‘சிங்களே’ என்ற சொற்பதமே போதுமானதாகவிருக்கிறது. பெரும்பான்மை இனம் தொடர்ந்தும் சிறுபான்மை சமூகங்களை அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகிறது.

சிறுபான்மை சமூகங்கள் பேச்சு வார்த்தைகளை மூன்றாம் தரப்பின் உதவியுடன் ஜனாதி பதி மற்றும் பிரதமருடன் ஆரம்பிக்கவேண்டும். தமிழ் மக்களுக்கான தீர்வுகள் உரிய முறையில் வழங்கப்படவேண்டும். வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம் தொடர்பில் இன்னும் ஆழமாக கலந்து ரையாடப்படவேண்டும்.

மியன்மாரைப் போன்று இராணுவப் புரட்சியினை இங்கும் ஏற்படுத்த சிங்கள இனவாதிகள் பௌத்த துறவிகளையும் தூண்டி விட்டுள்ளார்கள். சீனா, இந்தியா, அமெரிக்கா தற்போது இலங்கை மீது குறிவைத்துள்ளன. கடந்த காலங்களில் பொதுபல சேனா, ராவண பலய போன்ற அமைப்புக்களை உருவாக்கி தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட வைத்தார்கள்.

மியன்மாரில் எவ்வாறு ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு இன்று அவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்நாட்டு மக்கள் இதில் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இதே நிலை இங்கும் தொடர்ந்தால் மீண்டும் வன்முறைகள் உருவாகும்.

அதிகாரப் பகிர்வின் ஊடாக இந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழலாம். இதற்கான வழிவகைகளை அரசு ஏற்படுத்தவேண்டும். பிரிவினைவாதத்தை ஒழிக்க வேண்டும். இனவாதம் பேசுபவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும். தமிழ் பேசும் மக்களாகிய நாம் இனவாதக் கருத்துக்களை கூறுபவர்களிடத்திலிருந்து அவதானமாக இருக்க வேண்டும். எமது இலட்சியம் நோக்கிப் பயணிக்க எதிர்காலத்தில் ஒற்றுமையும், அஹிம்சை ரீதியானப் போராட்டங்களும் வலுப்பெறவேண்டும்.

இரணியன்

SHARE