கடற்பரப்பை கண்காணிப்பு செய்த இந்திய கடற்படை அதிகாரி!

31

 

மன்னார் வளைகுடா கடற்பகுதி மற்றும் தீவுகளை இந்தியாவின் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெனரல் அஜேந்திர பஹதுர் சிங் உலங்கு வானூர்தி மூலம் கண்காணித்துள்ளார்.

மன்னார் வளைகுடா வழியாக தொடர்ந்து கடத்தல்களும் சட்டவிரோத நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இராமேஸ்வரத்திற்கு அருகே இலங்கை இருப்பதால், தெற்கு கடற்கரையான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சட்டவிரோத பொருட்கள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

மன்னார் வளைகுடா பகுதியை கண்காணிக்க இந்திய கடற்படைக்கு சொந்தமான இரண்டு அதிநவீன ரோந்து கப்பல்கள் பாதுகாப்பு பணிக்காக பாம்பன் குந்துகால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இராமேஸ்வரம் சென்ற இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் ஜெனரல் அஜேந்திர பஹதுர் சிங் இராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்திருந்தார்.

தொடர்ந்து பாம்பன் அடுத்துள்ள குந்துகால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கடற்படைக்கு சொந்தமான அதிநவீன ரோந்து கப்பல்களையும் பார்வையிட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் மன்னார் வளைகுடா பகுதியிலும் தீவுகளிலும் தாழ்வாக பறந்து கடல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

SHARE